இன்ஹேலர்: பயன்படுத்துவது ஏன் அவசியம், தவிர்த்தால் என்ன ஆகும்?  

Share

’வீசிங்’ எனப்படும் மூச்சுத் திணறல், நெஞ்சை இறுக்கிப் பிடிப்பது போன்ற உணர்வு, இருமல் போன்றவை ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள் சந்திக்கும் மிக முக்கியப் பிரச்னைகள். அதிலும் குறிப்பாக மழைக்காலம் மற்றும் குளிர்காலங்களில் ஆஸ்துமா நோயாளிகள்  மிகுந்த சிரமங்களைச் சந்திக்கின்றனர். 

இன்ஹேலர்

பொதுவாக, ஆஸ்துமாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு மருத்துவர்களால் இன்ஹேலர் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனாலும் இன்ஹேலரைப் பயன்படுத்துவதில் மக்களில் பலர் தயக்கம் காட்டுகிறார்கள். இதைப் பயன்படுத்தத் தொடங்கினால், அது வழக்கமாகிவிட்டால் என்ன செய்வது என்ற  எண்ணமும் இதற்கு ஒரு முக்கியக் காரணம்.  

ஆனால், இன்ஹேலர் பயன்படுத்துவதில் எந்தத் தயக்கமும், பயமும் தேவை இல்லை என்கிறார் மதுரையைச் சேர்ந்த நுரையீரல் சிகிச்சை நிபுணர் டாக்டர். எம். பழனியப்பன். ஆஸ்துமா சிகிச்சையில் இன்ஹேலர் எவ்விதம் முக்கியப் பங்காற்றுகிறது என்பது குறித்து அவர் தரும் விளக்கம் இங்கே.

இன்ஹேலர்

“ஆஸ்துமா சிகிச்சையில் இன்ஹேலர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆனாலும் இந்த இன்ஹேலர் பயன்படுத்துவது குறித்து ஏகப்பட்ட  குழப்பங்கள்  மக்களிடம் இருந்துகொண்டேதான் இருக்கின்றன. குறிப்பாக, குழந்தைகளுக்கு இன்ஹேலரை பயன்படுத்த பெற்றோர் தயங்குகின்றனர். ’ஒரு தடவை இன்ஹேலரைப் பயன்படுத்தத் தொடங்கினால் காலம் முழுக்க குழந்தைகள் அதைத் தொடர்ந்து பயன்படுத்தும்படியான சூழல் வந்துவிடுமோ’ என்ற அச்சத்தால் சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு  இன்ஹேலர் அறிமுகம் செய்வதை தள்ளிப்போட்டுக்கொண்டே செல்கிறார்கள்.

முறையான பரிசோதனைகளின் அடிப்படையில் ஒருவருக்கு ஆஸ்துமா பிரச்னை இருக்கிறது என்பது மருத்துவரால் உறுதிப்படுத்தப்பட்டால் அதன் பின்னர் அவரது வழிகாட்டுதலின்படி இன்ஹேலரை உடனடியாகப் பயன்படுத்தத் தொடங்குவது மிகமிக நல்லது.  

ஆஸ்துமா

உங்களுக்கு ஒன்று தெரியுமா? ஆஸ்துமாவிற்கு உலகம் முழுக்க இன்ஹேலர்கள்தான் சிகிச்சையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே இன்ஹேலரைப் பார்த்துப் பயப்படத் தேவையில்லை. குறிப்பாக, தங்கள் குழந்தைகள் இன்ஹேலர் பயன்படுத்துவதை அம்மாக்கள்  வருத்தத்துடன் பார்க்கக் கூடாது. ஏனென்றால் இன்ஹேலர் பயன்பாட்டைத் தவிர்த்தால், குழந்தையின் நுரையீரல் கொள்ளளவு (Capacity) குறைந்துவிடும். எனவே, குழந்தைக்கு ஆஸ்துமா பிரச்னை இருந்தால் சீக்கிரமாக இன்ஹேலர் ஆரம்பிப்பதுதான்  சரியான வழி.  

இன்ஹேலர் என்பது, நுரையீரலுக்கு செலுத்தும் மருந்து அவ்வளவுதான். இன்னும் சொல்லப்போனால் மாத்திரையைவிட 20 மடங்கு  குறைவான அளவில்தான் இன்ஹேலரில் மருந்து உள்ளது. இதை பயன்படுத்துவதால் கிடைக்கின்ற நன்மைகளும் ஏராளம். அதாவது, ஒருவர் இன்ஹேலரைப் பயன்படுத்தும்போது நேரடியாக நுரையீரலுக்கே மருந்து செல்லும். நுரையீரலைத் தவிர மற்ற இடங்களுக்கு மருந்து பரவாது. அதேபோல இதனைப் பயன்படுத்துவதால் பக்க விளைவுகள் எதுவும்  வந்துவிடாது.

டாக்டர். எம். பழனியப்பன்

நிறைய பேர் நினைப்பதுபோல இது அடிக்‌ஷன் கிடையாது. பல்வேறு அளவிலான டோஸ்களில் பல்வேறு வகையான இன்ஹேலர்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. எந்த வகையான இன்ஹேலரை எந்த டோஸில் தொடங்கவேண்டும் என்பதை மருத்துவ நிபுணர் பரிந்துரைப்பார். முதலில் மாத்திரைகளுடன் சேர்த்து இந்த இன்ஹேலர் சிகிச்சையைத் தொடங்க வேண்டியிருக்கும். பின்னர் மாத்திரைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து அதன் பின்னர் இன்ஹேலர் அளவையும் படிப்படியாக மருத்துவர் குறைப்பார்.

ஒரு சிலருக்கு இன்ஹேலர் பயன்பாட்டை முழுவதுமாக நிறுத்தமுடியும். சிலருக்கு அலர்ஜி அதிகம் இருந்தால், அவர்கள் இன்ஹேலரை கூடுதல் நாள்களுக்குத்  தொடர்ந்து எடுக்கவேண்டிய சூழல் உண்டாகும். அதனால் பெரிதாகப் பக்கவிளைவுகள் எதுவும் வந்துவிடாது’’ என்கிறார் டாக்டர் எம். பழனியப்பன்.

இன்ஹேலர் நல்லது!

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com