உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் அல்லது 18 வயதுக்கு மேல் இருப்பவர்களின் பெயரில் ‘பான்’ கார்டு எடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறீர்களா?
இதுவரை நீங்கள் ‘பான்’ கார்டு எடுக்கவில்லை எனில், உடனடியாக இந்த மாதத்துக்குள் எடுத்துவிடுங்கள்… அப்படி எடுக்காவிட்டால், நீங்கள் கொஞ்சம் கஷ்டப்பட வேண்டி இருக்கும்!
காரணம், ‘பான்’ கார்டு எடுப்பது தொடர்பாக சில விதிமுறைகளை வருகிற ஏப்ரல் 1-ஆம் தேதி மாறுதலுக்கு உள்ளாகப் போகிறது. என்ன மாற்றம் வரப் போகிறது?

இதுநாள் வரை நீங்கள் ‘பான்’ கார்டு எடுக்க வேண்டும் எனில், ஆதார் கார்டு ஒன்றைத் தந்தால் போதும். அதில் உள்ள பிறந்த தேதியை இறுதித் தகவலாக எடுத்துக்கொள்ளப்பட்டு, ‘பான்’ கார்டிலும் அதே தேதியே பிறந்த தேதியாக குறிப்பிடப்படும்.
ஆனால், ஆதாரில் குறிப்பிட்டப்பட்டுள்ள பிறந்த தேதியை ஒருவரின் பிறந்த தேதியாக ஏற்றுக்கொள்வதில் சிலபல சிக்கல்கள் உருவாகி இருப்பதால், இனி ‘பான்’ கார்டு விண்ணப்பிக்கும்போது ஆதாரில் குறிப்பிடப்பட்டுள்ள பிறந்த தேதி இறுதி ஆவணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்கிற நிலை பிறந்திருக்கிறது.
வருகிற ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பிறகு ஒருவர் ‘பான்’ கார்டு வேண்டும் என்று விண்ணப்பம் செய்தால், பிறந்த தேதிக்கு சான்றாக ஆதார் கார்டினை மட்டும் தராமல், பிறந்த தேதியை உறுதிப்படுத்தும் வகையில் கூடுதலாக ஒரு ஆவணத்தைத் தரவேண்டும் என்கிற புதிய உத்தரவு வெளியாகி இருக்கிறது.

இந்தப் புதிய ஆவணம் எவையாக இருக்கலாம் எவையெவை?
1. பிறப்புச் சான்றிதழ்
2. வாக்காளர் அடையாள அட்டை
3. பள்ளிச் சான்றிதழ்
4. வாகன ஓட்டுநர் உரிமம்
5. பாஸ்போர்ட்
இவற்றில் ஏதாவது ஒரு ஆவணத்தைத் தரவேண்டும் என்கிற புதிய உத்தரவு வெளியாகி இருக்கிறது.

வருகிற ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஆதாருடன் கூடுதலாக மேற்சொன்ன ஆவணங்களில் ஏதாவது ஒன்றைத் தந்தால் மட்டுமே ‘பான்’ கார்டு பெற விண்ணப்பிக்க முடியும்.
தவிர, ஆதார் கார்டில் உள்ளபடிதான் தரப்படும் என்றும் சொல்லப்பட்டு இருக்கிறது.
ஆக, உங்கள் வீட்டில் யாருக்காவது ‘பான்’ கார்டு எடுக்க நினைத்திருந்தால், இந்த மாதத்துக்குள் எடுத்துவிடுவது மிகவும் நல்லது. அல்லது கூடுதல் ஆவணங்களைத் தர நிறைய அலைய வேண்டியிருக்கும்!

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய விருப்பமா? இன்றே AMFI பதிவு பெற்ற மியூச்சுவல் ஃபண்ட் விநியோக நிறுவனமான ‘லாபம்‘-ஐத் தொர்புகொள்ளுங்கள் – மிஸ்டு கால்: 9600296001
நீங்கள் விரும்பிய நேரத்தில் லாபம் ரிலேஷன்ஷிப் மேனேஜரிடம் பேச, கால் புக் செய்யவும் – https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-vikatan-com
குறிப்பு: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் திட்ட ஆவணங்களை படித்து பார்ப்பது அவசியம்.