ஐபில் தொடரில் நேற்று (ஏப்ரல் 2) ஹைதராபாத் vs கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இரண்டு அணிகளுமே முதல் போட்டியில் சந்தித்த தோல்விக்கு பின்னர் வெற்றியின் முனைப்போடு களமிறங்கினர்.

வழக்கம் போல டாஸ் வென்ற கேப்டன்கள் அனைவரும் பந்து வீச்சை தேர்வு செய்வதை போல் ரஹானேவும் பந்து வீச்சை தேர்வு செய்தார். கடந்த போட்டியில் சொதப்பிய ட்ராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மாவின் கூட்டணி, இந்த போட்டியில் இவர்கள் ஆடிய விதத்தை பார்க்கும் போது 2024 சீசனில் ஆடிய ஆட்டம் ரசிகர்களின் கண் முன் வந்து சென்றது. ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக ஆட ஆரம்பித்தனர். ஆனால் துரதிருஷ்டவசமாக பவர் பிளேவில் கார்த்திக் தியாகி வீசிய ஓவரில் ட்ராவிஸ் ஹெட் 46 ரன்களுக்கு அவுட் ஆனார்.
8 ஓவர் முடிவில் 110 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முசரபானி வீசிய 9வது ஓவரில் இஷான் கிஷன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகிய முக்கிய இரண்டு விக்கெட்களை எடுத்து டாப் கியரில் சென்று கொண்டிருந்த ஹைதராபாத் அணியின் ஸ்கோரை அப்படியே குறைத்தார். அதற்கு அடுத்த ஓவரிலேயே அனிகேத் வர்மா சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டிய கட்டாயத்தில் ஆடி வந்தனர் க்ளாசன் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி இணையினர். 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 226 ரன்களை எடுத்தனர்.
இதில் அதிகபட்சமாக
ட்ராவிஸ் ஹெட் (46),
அபிஷேக் சர்மா (48), க்ளாசன் (52)
நிதிஷ் குமார் ரெட்டி (39) ரன்கள் எடுத்தனர்.
குறிப்பாக கொல்கத்தா பந்து வீச்சாளர் முசுரபானி 4 விக்கெட்கள் கைப்பற்றி போட்டியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்

227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கினார்கள் கொல்கத்தா ஓப்பனர்கள். முதல் ஓவரிலேயே ஃபின் ஆலன் அதிரடி காட்ட, ஆஹா உலகக்கோப்பையை போல் ஐபில்-லிலும் அதிவேக சதம் பார்க்கலாம் என்று நினைக்க, அடுத்த ஓவரிலேயே அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார் ஆலன்.
பவர் பிளே முடிவில் 74 என்ற நல்ல ஸ்கோரை எடுத்திருந்தாலும் ரஹானே, கேமரூன் க்ரீன் போன்ற முக்கிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை இழந்தது கொல்கத்தா அணி. அதன் பின்னர் வந்த ரகுவன்ஷியும் அரைசதம் கடந்து ஆட்டமிழக்க, அடுத்த வந்த அனைவரும் சொற்ப ரன்களுக்கு வெளியேறினர். இதன் மூலம் 16வது ஓவரிலேயே 161 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது கொல்கத்தா அணி.
65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது முதல் வெற்றியை பதிவு செய்தது ஹைதராபாத் அணி. இந்த சீசனில் டார்கெட்டை டிபண்ட் செய்து வென்ற முதல் அணி சன்ரைசர்ஸ்தான்.!