என்னுடைய ஆறு அடுக்கு லேயர்களையும் தாண்டிக் குளிர் ஊடுருவி நெஞ்சைத் தாக்கியது. உள்ளூர ஏற்படும் நடுக்கம் எனச் சொல்வார்களே, அதை நான் அன்று வாழ்வில் முதல் முறை உணர்ந்தேன். மலை காற்று சுழன்று சுழன்று அடித்தது. அத்தனை பெரிய கூடாரம் கூட ஆட்டம் கண்டது. தார்ப்பாய் துணிகள் காற்றில் மோதி படபடத்த சத்தம், என் நடுக்கத்தை இன்னும் அதிகப்படுத்தியது. அந்த நிலைமையில் என்னால் உண்பதற்கு கூடாரத்தை விட்டு வெளியே செல்ல முடியும் எனத் தோன்றவில்லை. அப்படியே சுருண்டு படுத்துக்கொண்டேன். இத்தனைக்கும் அப்போது மணி ஏழு- ஏழரை தான் இருக்கும்.

எட்டு மணியளவில் உணவு தயாராகி விட்டதாக வந்து அழைத்து விட்டுப் போனார்கள். நான் மறுத்தும், நவீன் என்னை விடாப்பிடியாக அழைத்துச் சென்றார். மனத் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வெளியே சென்றேன். எனக்கு உள்ளே இருந்த அளவிற்கு வெளியே நடுக்கம் ஏற்படவில்லை. குளிர் இல்லாமல் இல்லை, ஆனால் இங்கு பரவாயில்லை என்பதைப் போல இருந்தது.
எங்கள் கூடாரத்திற்கு எதிரே தான் உணவு தயாரிக்கும் கூடாரம் இருந்தது. அங்குச் சாப்பிடுவதற்குக் கூட கையுறைகளைக் கழற்ற முடியவில்லை. கைகளில் ரத்தம் பாய்வதையே உணர முடியாத அளவிற்கு விரல்களும், உள்ளங்கைகளும் உறைந்து போயிருந்தன. ஒரே ஒரு சப்பாத்தியை மட்டும் தான் சப்பிட முடிந்தது.
இப்போதும் எடுத்த வந்திருந்த வெந்நீர் சில நிமிடங்கள் கூட தாக்குப்பிடிக்கவில்லை. வந்த வேகத்தில் அத்தனை கம்பளிகளையும் சுற்றிக்கொண்டு மெத்தையில் உட்கார்ந்துகொண்டேன். இங்கு எப்படி இவர்கள் தங்கி இருக்கிறார்கள். தினமும் இங்கு வருபவர்களுக்குச் சமைத்துப் போட்டு எப்படி வாழ்கிறார்கள். முதலில் இப்படிப் பட்ட ஓரிடத்தில் எதற்காகத் தங்குமிடம் அமைக்க வேண்டும் என்றெல்லாம் புலம்பிக்கொண்டிருந்தேன்.
சிறிது நேரத்தில் அசதியில் நவீன் தூங்கிவிட, நான் தூக்கம் வராமல் அல்லாடிக் கொண்டிருந்தேன். உடல் சோர்வாக இருந்தது ஆனால் தூக்கம் வரவில்லை. கனவிற்கும் நினைவிருக்கும் இடையில் ஒரு போராட்டமாக அந்த இரவு இருந்தது. என்னால் எது கனவு, எது நிஜம் என்று வித்தியாசப்படுத்தமுடியவில்லை. பேசுவதைப் போலக் கனவு காண்கிறோமா, இல்லை நிஜத்தில் உளறிக்கொண்டிருக்கிறேனா என்பதும் புரியவில்லை. ஒரு கட்டத்தில் இது நிச்சயம் AMS தான், நாம் இந்த இரவை தாண்ட மாட்டோம் என்றெல்லாம் கூட தோன்ற ஆரம்பித்துவிட்டது.