இந்தி தெரியாததால் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்: கடற்படைக்கு வைகோ கண்டனம்

Share

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மயிலாடுதுறை மாவட்டம் வானகிரி மற்றும் தரங்கம்பாடி, நாகப்பட்டினம் மாவட்டம் செருதூர், காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் 10 பேர் கடந்த 21ம் தேதி இரவு ஜெகதாம்பட்டினத்திற்கு கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, இந்திய கடற்படையின் ரோந்து கப்பல், மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த படகைச் சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர், இந்திய கடற்படையில் இருந்த அதிகாரிகள் அனைவரும் இந்தி மொழியில் பேச மீனவர்கள் தமிழில் பதில் கூறியுள்ளனர்.

இதில் கோபமுற்ற இந்திய கடற்படை காவலர்கள் இந்தி மொழியில் பதில் சொல்லுமாறு மீனவர்களை தாக்கி உள்ளனர். அனைவரின் ஆதார் கார்டுகளையும் வாங்கிப் பார்த்துவிட்டு, ‘உங்களுக்கு இந்தி தெரியாதா?’ என்று கூறி இழிவான வார்த்தைகளால் தமிழக மீனவர்களை திட்டியுள்ளனர். இந்திய கடற்படையினர் இந்தி மொழி தெரியாததால் தமிழக மீனவர்களை எட்டி உதைத்து, காலால் மிதித்து ஏளனமாக நகைத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியதாகும். இந்திய கடற்படையினர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், ஒன்றிய அரசு தமிழக மீனவர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com