புதுச்சேரி: இந்தி திணிப்பை கண்டித்து ஜிப்மர் மருத்துவமனையை திமுக முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது. இதில் எதிர்க்கட்சி தலைவர் சிவா உள்பட 4 எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டனர். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனைத்து கோப்புகள், பதிவேடுகள் மற்றும் தலைப்புகளில் இந்தி கட்டாயம் இருக்க வேண்டும் என்று ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். இதனை கண்டித்து திமுக சார்பில் நேற்று ஜிப்மர் மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாநில அமைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான சிவா தலைமை தாங்கினார். திமுக எம்எல்ஏக்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இந்தியை திணிக்காதே, இயக்குநரே உத்தரவை திரும்ப பெறு என கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, திமுக எம்எல்ஏக்கள் 4 பேர் உட்பட 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
கவர்னர் தமிழிசை பேட்டி: புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுதரராஜன் நேற்று ஜிப்மர் மருத்துவமனையை ஆய்வு செய்தார். இயக்குனர் ராகேஷ் அகர்வால் மற்றும் அதிகாரிகளோடு ஆலோசனை கூட்டம் நடத்தி விவரங்களை கேட்டறிந்தார்.
அதன் பின்னர் தமிழிசை அளித்த பேட்டி: ஜிப்மரில் நான்கு சுற்றறிக்கைகள் தரப்பட்டிருக்கிறது. ஒரு சுற்றறிக்கையில் முடிந்தவரை இந்தியை பயன்படுத்துங்கள் என்று இருக்கிறது. ஜிப்மரில் பணிபுரிபவர்களில் பலர் இந்தி மட்டுமே தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். அதே தேதியிட்ட மற்றொரு சுற்றறிக்கையில், பொதுமக்கள் தொடர்பான தகவல், கருத்து பரிமாற்றம் செய்யக்கூடிய அறிக்கைகள் அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. இந்தி வெறி, இந்தி திணிப்பு இங்கே இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.