இந்திய கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளர் காலித் ஜமீல் முன் உள்ள சவால்கள் என்னென்ன? | head coach of indian mens football team khalid jamil challenge task

Share

சென்னை: இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக காலித் ஜமீல் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இந்திய அணியின் புதிய நம்பிக்கையாக அவர் அறியப்படுகிறார்.

இந்திய கால்பந்து தலைமை பயிற்சியாளர் பணிக்கு பெரும்பாலும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டது. கடந்த 1993 முதல் இதுநாள் வரையில் இந்தியாவை சேர்ந்த சுக்விந்தர் சிங் மற்றும் சவியோ மெடிரா ஆகியோர் மட்டுமே அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்துள்ளனர். கடந்த 30 ஆண்டுகளில் ஸ்பெயின், இங்கிலாந்து, குரோஷியா, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களை பயிற்சியாளராக நியமித்து இருந்தது இந்திய கால்பந்து நிர்வாகம். தற்போது அதை மாற்றிக் கொண்டு காலித் ஜமீல் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

யார் இவர்? – 48 வயதான காலித் ஜமீல், குவைத் நாட்டில் பிறந்தவர். நடுகள வீரர். சர்வதேச அளவில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். கடந்த 2009 முதல் பயிற்சியாளராக தனது பணியை அவர் தொடங்கினார்.

வீரராகவும், பயிற்சியாளராகவும் டாப் டிவிஷனல் தொடரில் பட்டம் வென்றுள்ளார். இந்தியன் சூப்பர் லீக், ஐ லீக் மற்றும் ஐ லீக் 2 உள்ளிட்ட தொடர்களில் பல்வேறு அணிகளை பயிற்சியாளராக வழி நடத்தி உள்ளார். ஜாம்ஷெட்பூர் கால்பந்து கிளப் அணியின் பயிற்சியாளராக இயங்கி அந்த அணியை சூப்பர் கப் 2025 சீசனில் இரண்டாம் இடம் வரை பெறச் செய்தார்.

மஹிந்திரா யுனைடெட் அணியில் இருந்து தொழில்முறை சார்ந்த அவரது கால்பந்து விளையாட்டு பயணம் தொடங்கியது. 2003 மற்றும் 2005-ல் ஃபெடரேஷன் கோப்பை, 2006-ல் நேஷனல் ஃபுட்பால் லீக் மற்றும் ஐஎப்ஏ ஷீல்ட் தொடரை வென்ற அணியில் அங்கம் வகித்துள்ளார். ‘அவருக்கு தெரிந்தது எல்லாம் கால்பந்து மட்டுமே. நூறு சதவீதம் அது குறித்து மட்டுமே எப்போதும் சிந்திப்பார். அந்த தகுதியை பயிற்சியாளர் ஒருவர் அவசியம் கொண்டிருக்க வேண்டும்’ என்கிறார் முன்னாள் கோல்கீப்பர் ஹென்றி மெனெசஸ்.

பயிற்சியாளர் முன் உள்ள சவால்? – சர்வதேச கால்பந்து தரவரிசை பட்டியலில் இந்திய அணி தற்போது 133-வது இடத்தில் உள்ளது. தொடர் தோல்வி, நிர்வாகம் எதிர்கொள்ளும் நிதி ரீதியான சிக்கல்கள் என நெருக்கடிகளுக்கு மத்தியில் காலித் ஜமீல் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுள்ளார். நிச்சயம் இந்த சவாலை அவர் திறம்பட கையாள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com