இந்திய ஒற்றுமை பயணம் இன்று மாலை கேரளா செல்கிறது: குமரியில் 4வது நாளாக ராகுல்காந்தி நடைபயணம்

Share

நாகர்கோவில்: காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், ஒன்றிய அரசின் அவலங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் விதமாகவும், அனைத்து தரப்பு மக்களையும் நேரில் சந்திக்கும் வகையில் ராகுல்காந்தி எம்பி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரில் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை கடந்த 7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்திக்கு தேசியக்கொடியை வழங்கி நடை பயணத்தை தொடங்கி வைத்தார். அந்த தேசியக்கொடியுடன் ஒற்றுமை பயணத்தை ராகுல்காந்தி தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.

ராகுல்காந்தியுடன் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த காங்கிரஸ் தொண்டர்கள் 118 பேர் இந்த யாத்திரையில் வெள்ளைச்சீருடையில் பங்கேற்று வருகின்றனர்.
2வது நாள் அகஸ்தீஸ்வரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கும், 3வது நாளான நேற்று நாகர்கோவிலில் இருந்து தக்கலை அருகே உள்ள முளகுமூட்டிற்கும் நடைபயணம் சென்றது. தொடர்ந்து முளகுமூட்டில் உள்ள தனியார் பள்ளியில் இருந்து இன்று காலை 7 மணிக்கு நடைபயணத்தை ராகுல் காந்தி தொடங்கினார். முன்னதாக அங்குள்ள மைதானத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.

அப்போது முளகுமூட்டில் தங்கி இருந்த பள்ளி மாணவ-மாணவிகளுடன் ராகுல்காந்தி குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். ராகுல்காந்தியுடன் கட்சி மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் என்று ஏராளமானோர் சாலை முழுவதுமாக திரண்டு நடை பயணத்தில் பங்கேற்று வருகின்றனர். இன்று காலை நடைபயணம் மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரியை வந்து சேர்ந்தது. பின்னர் அங்கிருந்து மாலை 4 மணிக்கு மீண்டும் தொடங்குகின்ற பாதயாத்திரை கேரளா செல்கிறது. பாறசாலை அருகே உள்ள செறுவாரக்கோணம் சாமுவேல் எல்எம்எஸ் மேல்நிலை பள்ளியில் ராகுல்காந்தி, தலைவர்கள் ஓய்வெடுத்துவிட்டு நாளை அங்கிருந்து நடைபயணம் மேற்கொள்ள இருக்கின்றனர்.

இன்றைய பயணத்தில் மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ், காங்கிரஸ் பொதுசெயலாளர்கள் ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, யாத்திரை தமிழக ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஜெயக்குமார், காங்கிரஸ் தமிழ்நாடு சட்டமன்ற கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு, மாநில துணைத்தலைவர் ராபர்ட் புரூஸ், எம்.பி.க்கள் விஜய்வசந்த், செல்லகுமார், ஜோதிமணி, மாநில பொருளாளர் ரூபி மனோகரன், செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், ஊர்வசி அமிர்தராஜ், விஜயதரணி உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மேளதாளம் முழங்க சென்ற நடைபயணத்தில் பொதுமக்களை நோக்கி உற்சாகமாக கை அசைத்த வண்ணம் ராகுல்காந்தி தனது நடைபயணத்தை மேற்கொண்டார். வெள்ளை டீசர்ட் பேன்ட்ஸ் இன்றும் அவரது ஆடையாக இருந்தது. முளகுமூடு அருகே காட்டாத்துறை வந்தபோது அந்த பகுதியில் நின்றிருந்த சிறுமிகள் ராகுல்காந்தியுடன் செல்பி எடுக்க விரும்பினர். உடனே அதற்கு ஏற்பாடு செய்யும் வகையில் தனது பயணத்தை சற்று நிறுத்திக்கொண்ட ராகுல்காந்தி செல்பி எடுத்துக்கொண்டார். மேலும் அந்த பகுதியை சேர்ந்த சிறுமிகளிடம் உரையாடியவாறே ராகுல்காந்தி நடைபயணத்தை தொடர்ந்தார்.

பாதயாத்திரையில் கன்னையாகுமார்
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்க தலைவராக இருந்தவர் கன்னையா குமார். இவர் கல்லூரி காலத்திலிருந்தே பா.ஜ. அரசின் மக்கள் விரோத திட்டங்களைக் கடுமையாக எதிர்த்துப் பேசிவந்தார். அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்த கன்னையாகுமார் அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்தநிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் கன்னியாகுமரியில் இருந்து அவர் ராகுல்காந்தியுடன் பயணித்து வருகிறார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com