பட மூலாதாரம், Hachette India
இந்திய அரசியலமைப்பு அவையின் 299 உறுப்பினர்களில் 15 பேர் மட்டுமே பெண்களாக இருந்தனர். இந்திய அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் இப்போது வரை குறைவாகவே இருக்கும் நிலையில், அரசியலமைப்பு அவையில் இடம்பெற்ற இந்தப் பெண்களில் சிலர், பல சமூகத் தடைகளை உடைத்தனர் என்கிறது புதிதாக வெளிவந்துள்ள ஒரு புத்தகம்.
இந்தியா குடியரசு நாடாகி 70 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஆண்களுக்கு இணையாகப் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை 1917இல் எழுப்பப்பட்டது. அந்தப் புள்ளியிலிருந்து இந்திய அரசியலில் பெண்களின் பங்களிப்பு வெகுதூரம் நகர்ந்து வந்திருக்கிறது. ஆனாலும், பெண்களின் பங்களிப்பு பெரிய அளவில் உயரவில்லை. இந்திய மக்களவையில் பெண்களின் எண்ணிக்கை வெறும் 15 சதவீதம்தான்.
ஆனால், இந்திய அரசியலமைப்பு அவை உருவாக்கப்பட்டபோது இருந்த விகிதத்தோடு ஒப்பிட்டால் நிலைமை சற்று மேம்பட்டிருக்கிறது என்று சொல்லலாம். இந்திய அரசியலமைப்பு அவை உருவாக்கப்பட்டபோது அதில் 299 உறுப்பினர்கள் இடம்பெற்றிருந்தனர். இந்த 299 பேரில் 15 பேர் மட்டுமே பெண்கள். அதாவது, மொத்த எண்ணிக்கையில் வெறும் ஐந்து சதவீதம் பேர் மட்டுமே பெண்கள்.
இந்திய அரசியலமைப்பு அவையில் மாகாணங்களில் இருந்தும் சமஸ்தானங்களில் இருந்தும் பிரதிநிதிகள் இடம்பெற்றிருந்தனர். ஆனால், அந்தக் காலகட்டத்தில் பல பிரிவினருக்குப் போதுமான பிரதிநிதித்துவம் அந்த அவையில் கிடைக்கவில்லை. அந்த அவையில் பெண்களின் எண்ணிக்கை வெறும் 15ஆக மட்டுமே இருந்தது. ஆனால், இந்த 15 பெண்களும் தேசத்தின் உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தனர்.
இந்த மகத்தான 15 பெண் தலைவர்கள் யார், அவர்களின் பின்னணி என்ன என்பதைத் தொகுத்துச் சொல்கிறது சமீபத்தில் வெளிவந்த The Fifteen: The Lives and Times of the Women in India’s Constituent Assembly என்ற புத்தகம். ஏஞ்சலிக்கா அரிபம், ஆகாஷ் சத்யவாலி ஆகியோர் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளனர்.
முதலில் அரசியலமைப்பு அவையில் இருந்த 15 பெண்கள் யார் எனப் பார்த்துவிடலாம். 1. அம்மு சுவாமிநாதன், 2. ஆனி மாஸ்கரீன், 3. பேகம் குத்ஸியா ஐஸாஸ் ரசூல், 4. தாக்ஷாயிணி வேலாயுதன், 5. துர்காபாய் தேஷ்முக், 6. ஹன்ஸா மேத்தா, 7. கமலா சௌத்ரி, 8. லீலா ராய், 9. மாலதி சௌத்ரி, 10. பூர்ணிமா பேனர்ஜி, 11. ராஜ்குமாரி அம்ரித் கௌர், 12. ரேணுகா ரே, 13. சரோஜினி நாயுடு, 14. சுசேதா கிருபாளனி, 15. விஜயலக்ஷ்மி பண்டிட் ஆகியோர்தான் அந்த 15 பேர்.
இந்தப் பெண்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பின்னணி இருந்தது. சரோஜினி நாயுடு, ஹன்ஸா மேத்தா, மாலதி சௌத்ரி, விஜயலக்ஷ்மி பண்டிட், பூர்ணிமா பேனர்ஜி, ராஜ்குமாரி போன்றவர்கள் காந்திய சிந்தனையில் ஊறியவர்கள். மற்ற சிலர் புரட்சிகர சிந்தனையைக் கொண்டவர்களாக இருந்தார்கள். இவர்களில் பேகம் குத்ஸியாவும் ராஜ்குமாரி அம்ரித் கௌரும் பஞ்சாபின் அரச குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.
விஜயலக்ஷ்மி பண்டிட், ஹன்ஸா மேத்தா ஆகியோர் அரசியல் ரீதியாக செல்வாக்குடைய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். சரோஜினி நாயுடு மாலதி சௌத்ரி, ரேணுகா ரே ஆகியோர் வங்காளத்தில் செல்வாக்குமிக்க குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். இரண்டு பேர் தனித்துவமிக்கவர்களாக இருந்தனர். ஒருவர் ஆனி மாஸ்கரரீன். இவர் ஒரு லத்தீன் கிறிஸ்தவர். மற்றொருவர் தாக்ஷாயினி வேலாயுதன். இவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்.
சுதந்திரத்திற்குப் பிறகு இவர்களில் பலர் உயர்ந்த இடத்தை அடைந்தார்கள். விஜயலக்ஷ்மி பண்டிட் பல நாடுகளின் தூதராக இருந்தார். ஐ.நாவின் முதல் பெண் தலைவராகவும் உயர்ந்தார்.
ராஜ்குமாரி அம்ரித் கௌர் மத்திய அமைச்சரானார். துர்காபாய் தேஷ்முக் முதல் திட்டக் குழுவின் உறுப்பனரானார். ஆனியும் ரேணுகாவும் தத்தம் மாநிலங்களில் அமைச்சரானார்கள்.
சரோஜினி நாயுடுவும் சுசேதாவும் ஆளுநராகவும் முதல்வர்களாகவும் ஆனார்கள். அந்த வகையில் நவீன இந்தியாவின் உருவாக்கத்தில் இந்த ஆளுமைகளுக்கு மிக முக்கியமான பங்கு இருந்தது.
அரசியலமைப்பு அவையில் முக்கிய பங்காற்றிய அம்மு சுவாமிநாதன்
பட மூலாதாரம், Getty Images
இந்த 15 பேரில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என யாருமில்லை. ஆனால், தமிழ்நாட்டிற்கு நெருக்கமான ஒருவர் இருந்தார். அவர் அம்மு சுவாமிநாதன். பின்னாளில் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியின் எம்.பியாக இருந்தவர் இவர்.
கடந்த 1894இல் பாலக்காட்டில் ஒரு நாயர் குடும்பத்தில் 13 குழந்தைகளில் இளையவராகப் பிறந்தார் ஏ.வி.அம்முக்குட்டி. அவரது தந்தை ஒரு அரசுப் பணியில் இருந்தவர் என்றாலும் எல்லாக் குழந்தைகளையும் அவரால் படிக்க வைக்க முடியவில்லை. அம்முவுக்கு வீட்டிலேயே மலையாளம் எழுதப் படிக்க கற்பிக்கப்பட்டது.
இவர்கள் வசித்த இடத்திற்கு அருகில்தான் தமிழரான சுப்பராம சுவாமிநாதனின் குடும்பம் வசித்து வந்தது. படிப்பை முடித்துவிட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வெற்றிகரமான வழக்கறிஞராக இயங்கிக் கொண்டிருந்த சுவாமிநாதன், அம்முவை தனக்கு மணம் முடித்துத் தரும்படி கேட்டார்.
வயது வித்தியாசம் பெரிய அளவில் இருந்தாலும்கூட, சில நிபந்தனைகளோடு அதற்கு ஒப்புக்கொண்டார் அம்மு. முதலாவதாக, தானும் சென்னையில் வசிக்க அனுமதிக்க வேண்டும்; ஒரு ஆங்கிலப் பெண்ணிடமிருந்து ஆங்கிலம் கற்றுக்கொடுக்க வேண்டும்; எப்போது வீட்டுக்கு வருவாய் எனக் கேட்கக்கூடாது ஆகியவைதான் அந்த நிபந்தனைகள். 1908இல் அம்முவின் 14 வயதில் திருமணம் நடந்து முடிந்தது.
சுவாமிநாதன் கொடுத்த வாக்கைக் காப்பாற்றினார். ஒரு ஆங்கிலப் பெண்மணி மூலம் ஆங்கிலம் கற்பிக்கப்பட்டது. நாடகங்கள், டென்னிஸ், கார் ஓட்டுவதற்கு எனப் பல விஷயங்களை தனது மனைவிக்குக் கற்பித்தார் சுவாமிநாதன்.
அவர்களுக்கு, கோவிந்த் (தமிழக அட்வகேட் ஜெனரலாக இருந்தவர்), லக்ஷ்மி (இந்திய தேசிய ராணுவத்தில் சுபாஷுடன் நெருங்கிச் செயல்பட்டவர்), சுப்பராம கிருஷ்ணா, மிருணாளினி (மாபெரும் நடனக் கலைஞர், அறிவியலாளர் விக்ரம்சாராபாயின் மனைவி) என நான்கு குழந்தைகள் பிறந்தனர்.
இந்த நான்கு பேருமே பிரிட்டிஷ் பாணியில் வளர்க்கப்பட்டனர். பிரிட்டிஷ் பழக்க வழக்கங்கள் இவர்களுக்குக் கற்பிக்கப்பட்டதோடு, பெரிதும் ஆங்கிலத்தில் மட்டுமே பேசினர்.
சுவாமிநாதனின் குடும்பத்தினர் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்கள். ஆனால் அம்மு, நாயர் வகுப்பைச் சேர்ந்தவர். இதன் காரணமாக, இவர்களுடைய குழந்தைகள், தம் தந்தை வழிப் பாட்டியின் வீட்டில், வீட்டிற்குள் அமர்ந்து உணவு உண்ண அனுமதிக்கப்படவில்லை என்று அறிந்தபோது இந்தத் தம்பதிக்கு அதிர்ச்சியாக இருந்தது என்கிறது இந்தப் புத்தகம்.
பட மூலாதாரம், amritmahotsav.nic.in
ஆனால், இதுபோன்ற தடைகளையெல்லாம் தாண்டி ஒரு மிகச் சிறப்பான வாழ்வை வாழ நினைத்தார் அம்மு. தனக்கென சமூகத்தில் ஒரு அடையாளத்தை உருவாக்க ஆரம்பித்தார். கவிஞர்கள், பிரிட்டிஷ் அரச குடும்பத்தினர், சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஆகியோருடன் இந்தத் தம்பதி நெருங்கிய நட்பை வைத்திருந்தார்கள்.
அவ்வப்போது முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொள்ளும் பார்ட்டியும் நடக்கும். இது இவர்களது சமூகத்திற்குள் சலசலப்பை ஏற்படுத்தினாலும் சுவாமிநாதனோ, அம்முவோ இதைக் கண்டுகொள்ளவில்லை.
இம்மாதிரி ஒரு பரபரப்பான வாழ்க்கையில் இருந்தாலும், மெல்ல மெல்ல அரசியலிலும் பெண்கள் இயக்கங்களிலும் அம்மு ஆர்வம் காட்டத் தொடங்கினார். 1917இல் அன்னிபெசன்ட், மாலதி பட்வர்த்தன், கமலாதேவி சட்டோபாத்தியாய், அம்புஜமம்மாள் ஆகியோருடன் இணைந்து வுமன் இந்தியன் அசோசியேஷன் (WIA) என்ற அமைப்பை உருவாக்கினார்.
குழந்தைத் திருமணம், தேவதாசி முறை, விதவைப் பெண்களின் மறுமணம், சொத்துரிமை, ஆண்களுக்கு இணையாகப் படிக்கும் வாய்ப்புகள் ஆகியவற்றுக்காகப் பணியாற்றுவதே இந்த அமைப்பின் நோக்கம். பெண்களுக்கும் வாக்குரிமை அளிக்க வேண்டுமெனப் போராடிய ஒரே தேசிய அமைப்பு இதுதான்.
மாண்டேகு – செம்ஸ்போர்ட் கமிஷன், சௌத்பாரோ ஃப்ரான்சைஸ் கமிட்டி ஆகியவற்றிடம் பெண்களுக்கான வாக்குரிமையை இந்த அமைப்பு வலியுறுத்தியது. ஆனால், தேசிய அளவில் இந்தப் பரிந்துரை ஏற்கப்படவில்லை. மாகாண மட்டத்தில் இந்தக் கோரிக்கையை முன்வைக்கலாம் எனக் கூறப்பட்டது. இதையடுத்து மாகாண மட்டத்தில் பெண்கள் வாக்குரிமைக்காக இந்த அமைப்பு போராட ஆரம்பித்தது. ஒருவழியாக 1919இல் சென்னை மாகாணத்தில் நகராட்சித் தேர்தல்களில் வாக்குரிமை அளிக்கப்பட்டது. ஆனால், தேர்தல்களில் போட்டியிடும் உரிமை அளிக்கப்படவில்லை. 1921இல் இந்தக் கட்டுப்பாடு நீக்கப்பட்டது.
இதற்குப் பிறகு WIAவின் தலைவராகவும் துணைத் தலைவராகவும் இருந்தார் அம்மு. குழந்தைத் திருமணத்தை ஒழிப்பதற்கான சாரதா மசோதாவுக்கும் மிகுந்த ஆதரவை இவரது அமைப்பு அளித்தது. 1920களில் அந்நியத் துணிகளை எரிக்க காந்தி அழைப்பு விடுத்தபோது அதில் அம்மு ஆர்வத்துடன் பங்கேற்றார். இது அவரது மகளான லக்ஷ்மிக்கு பெரும் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளித்தது.
பட மூலாதாரம், Getty Images
அம்முவுக்கு 36 வயதாகும்போது சுவாமிநாதன் இறந்துபோனார். விதவைக்கான சடங்குகளை தன் மனைவி செய்ய வேண்டியதில்லை என்றும் சொத்துகளில் தனது மனைவிக்கும் மகள்களுக்கும் உரிமை உண்டு என்றும் எழுதி வைத்திருந்தார் சுவாமிநாதன்.
கணவரின் மறைவுக்குப் பிறகு அரசியலில் தீவிரம் காட்ட ஆரம்பித்தார் அம்மு. பெரும் எண்ணிக்கையில் குடும்பத் தலைவிகளை காங்கிரசில் சேர்த்ததோடு, சென்னையில் இருந்த தனது ‘கில்கிரிஸ்ட் கார்டன்ஸ்’ இல்லத்தை காங்கிரசின் பணிகளுக்குத் திறந்துவிட்டார். பல தலைவர்கள் இங்கு வந்து விவாதம் நடத்தினர்.
ஆனால், அம்முவின் பங்கேற்பை அவரது குழந்தைகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி எதிர்கொண்டனர். லக்ஷ்மி அதை ஆர்வத்துடன் ஏற்றுக்கொண்டார். கோவிந்த்தை பொறுத்தவரை, காங்கிரஸின் அரசியலை சந்தேகத்துடனேயே பார்த்தார்.
பின்னாளில் அரசியலமைப்பு சபையில் அம்முவுடன் இணைந்து செயல்பட்ட அம்ரித் கௌர் பெண்களுக்கான வாக்குரிமையை வலியுறுத்த லண்டனுக்கும் ஜெனீவாவிற்கும் சென்றபோது, அவருடன் அம்முவும் சென்றார். அதற்குப் பிறகு சென்னை மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட்டு, 1934 முதல் 39 வரை அதன் உறுப்பினராக இருந்தார் அம்மு. இதற்கிடையில் 1935ஆம் ஆண்டின் இந்திய அரசு சட்டப்படி, 21 வயது நிரம்பிய அனைத்துப் பெண்களுக்கும் வாக்களிக்கவும் போட்டியிடவும் உரிமை அளிக்கப்பட்டது.
இதற்குப் பிறகு காங்கிரஸ் கட்சிக்குள் உரிய இடத்திற்காகப் போராட ஆரம்பித்தார் அம்மு. காங்கிரஸ் காரியக் கமிட்டியில் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லாததைச் சுட்டிக்காட்டி, ஒரு பெண்ணுக்காவது இடமளிக்க வேண்டுமென ஜவஹர்லால் நேருவிடம் வலியுறுத்தினார் அம்மு. ஆனால், நேருவின் பதில் அவருக்கு ஏமாற்றமளித்து.
இதற்குப் பிறகு 1942இல் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் அம்மு தீவிரமாக ஈடுபட்டார். கைதுசெய்யப்பட்ட அவர், வேலூர் சிறையில் ஓராண்டுக்கு அடைக்கப்பட்டார். தனது கணவரின் வீட்டில் சாதிய ஒதுக்குதலை அனுபவித்ததாலோ என்னவோ, இதுபோன்ற பாகுபாடுகளுக்கு எதிராகவே இருந்தார்.
வேலூர் சிறையில் இருந்தபோது சக கைதி ஒருவர், துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த பெண்ணை ‘ஏய் சூத்திரச்சி’ என்று அழைத்ததைப் பார்த்து ஆத்திரமடைந்தார். அவரிடம் சென்று ‘நானும் சூத்திரச்சிதான், என்ன சொல்ல வேண்டுமோ அதை என்னிடம் சொல்’ என்று சொல்லி அதிர வைத்தார்.
அதேபோல, நேரு தனது பெயருக்கு முன்பாக ‘பண்டிட்’ என்று குறிப்பிடுவதைச் சுட்டிக்காட்டி, அது சாதி மேலாதிக்கத்தைக் காட்டுவதாகச் சொன்னார். தன்னை ‘பண்டிட்’ என அழைக்கும்படி யாரிடமும் தான் சொல்வதில்லை என்றார் நேரு. இருந்தாலும் அப்படி அழைக்கும்போது அதற்கு பதிலளிப்பதன் மூலம் நேரு அதை ஏற்பதாகக் கூறினார் அம்மு.
பட மூலாதாரம், Mallika Sarabhai/Instagram
இதற்குப் பிறகு 1945இல் மத்திய சட்டப்பேரவைக்கு (தற்போதைய நாடாளுமன்ற மக்களவை) சென்னையிலிருந்து அம்மு தேர்வானார். அதன்மூலம் 1946இல் அரசமைப்பு அவையின் உறுப்பினராகவும் ஆனார். 1948 பிப்ரவரியில் வரைவுக் கமிட்டியின் தலைவரான டாக்டர் அம்பேத்கர் இந்து சட்ட மசோதாவை அரசமைப்பு சபையில் அறிமுகம் செய்தார்.
ராவ் கமிட்டின் பரிந்துரையில் பெற்றோரின் சொத்தைப் பெறுவதற்கு பெண்களுக்கு இருந்த தடையை நீக்க இந்த மசோதா பரிந்துரைத்தது. ஆனால், இது இந்து கலாசாரத்தையும் குடும்பத்தையும் சிதைத்துவிடும் என ஆண் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மசோதா நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. அதில் அம்மு இடம் பெற்றார். நிலைக்குழுவின் பரிந்துரைகளையும் உறுப்பினர்கள் ஏற்க மறுத்ததால், அந்தச் சட்டத்தை நேரு ஒத்தி வைத்தார்.
கடந்த 1949 நவம்பர் 24ஆம் தேதி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்கும் தீர்மானம் வந்தபோது, அதில் பேசிய அம்மு, 40 கோடி மக்களின் கனவு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் நனவாகியிருப்பதாகக் குறிப்பிட்டார். அரசமைப்புச் சட்டத்தில் இருக்கும் சிந்தனைகளும் உரிமைகளும் லட்சியங்களும் செயல்பாட்டிற்கு வராவிட்டால் அதற்குப் பலன் இருக்காது என்றும் கூறினார்.
ஒருமுறை இந்து சட்ட மசோதா குறித்து ஒரு ஆலோசனைக் குழுவை அமைக்க இருப்பதாக சட்ட அமைச்சர் டாக்டர் அம்பேத்கர் நாடாளுமன்றத்தில் கூறியபோது, எழுந்து நின்ற அம்மு, அந்த ஆலோசனைக் குழுவில் பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு இடம் இருக்கிறதா எனக் கேள்வியெழுப்பினார். அந்தச் சட்டம் ஆண்களைவிட பெண்களையே அதிகம் பாதிக்கும் என அவர் கூறியபோது, அவையில் இருந்த ஆண் உறுப்பினர்கள் பெரிதாகச் சிரித்தனர்.
“பெண்களின் உரிமை குறித்துப் பேசும்போதெல்லாம் ஏதோ ஜோக் சொல்வதைப் போல சிரிப்பொலி எழுகிறது. நான் ஜோக் எதையும் சொல்லவில்லை. டாக்டர் அம்பேத்கர், பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் வருகிறார்களா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்” என்றார். அவர்கள் விரைவில் அழைக்கப்படுவார்கள் என அம்பேத்கர் கூறும்வரை அம்மு விடவில்லை.
இந்தியா சுதந்திரமடைந்த பிறகு நடந்த முதல் நாடாளுமன்றத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்ட அம்மு சுவாமிநாதன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளரை சுமார் பத்தாயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். 1957 முதல் 1960 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார் அம்மு.
நாடகம், சினிமா போன்றவற்றின் மீதான அவரது ஆர்வமும் குறையவில்லை. 1959இல் சத்யஜித் ரே தலைமையில் ஃபெடரேஷன் ஆஃப் ஃபிலிம் சொசைட்டீஸ் ஆஃப் இந்தியா உருவாக்கப்பட்டபோது, அதன் துணைத் தலைவரானார் அம்மு. 1960 – 65 பாரத சாரணீயர் இயக்கத்தின் தலைவராகவும் செயல்பட்டார். அந்தப் பதவியில் இருந்த ஒரே பெண் இவர்தான்.
கடந்த 1978ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி தனது 84வது வயதில் அம்மு காலமானார்.
ஒடுக்குமுறைகளை வென்று சாதித்த தாக்ஷாயிணி வேலாயுதன்
பட மூலாதாரம், amritmahotsav.nic.in
அம்மு சுவாமிநாதனைப் போலவே, பல தடைகளைத் தாண்டி அரசியலுக்குவந்து, குரல் எழுப்பிய மற்றொருவர் தாக்ஷாயிணி வேலாயுதன்.
அம்மு சுவாமிநாதனைப் போலவே கேரளாவைச் சேர்ந்தவர்தான் தாக்ஷாயிணி வேலாயுதன். ஆனால், முற்றிலும் வேறான சமூகப் பின்னணியில் இருந்து வந்தவர் அவர். கொச்சி, திருவிதாங்கூர் பகுதியில் இருந்த புலயர் வகுப்பைச் சேர்ந்தவர் அவர். தீண்டத்தகாத சாதியினராகக் கருதப்பட்டவர்களிலேயே, மிகக் கீழான அடுக்கில் வைக்கப்பட்டிருந்த சாதி அது.
இந்த சாதியில் 1912ஆம் ஆண்டு கொச்சிக்கு அருகில் இருந்த முழவுக்காடு என்ற தீவில் குஞ்சன் – மாணி தம்பதியின் 4வது குழந்தையாகப் பிறந்தார் தாக்ஷாயிணி. தாக்ஷாயிணியின் குடும்பத்தை வறிய குடும்பம் எனச் சொல்ல முடியாது. வீடு, நிலம் ஆகியவை இருந்தன. ஆனால், அவருக்கு மூன்று வயதாகும்போது அவரது தந்தை காலமானார்.
பள்ளிப்படிப்பை முடித்த பிறகு பி.எஸ்.சி. வேதியியல் வகுப்பில் சேர்ந்தார் தாக்ஷாயிணி. அந்த வகுப்பில் இவர் மட்டுமே பெண்ணாக இருந்தார். கொச்சி மாகாணத்தில் கல்லூரியில் சேர்ந்து படித்த முதல் தலித் பெண்ணும் இவர்தான். இவரது படத்தை எடுக்கவும் கட்டுரை எழுதவும் ஊடகங்கள் போட்டியிட்டாலும், கல்லூரிக்குள் நிலைமை அவ்வளவு சுலபமாயில்லை. பாகுபாடுகள் நிலவின. இருந்தபோதும் வெற்றிகரமாக படிப்பை முடித்த பிறகு திருச்சூரில் ஆசிரியராக வேலை பார்த்தார். இந்த காலகட்டத்திலும் சாதி ரீதியான ஒதுக்குதலை அவர் எதிர்கொள்ள நேர்ந்தது.
பட மூலாதாரம், constitutionofindia.net
விரைவிலேயே காந்திய கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். 1940இல் சமூக சேவகரான ஆர்.வேலாயுதனை வார்தாவில் காந்தி – கஸ்தூரிபாய் முன்னிலையில் திருமணம் செய்தார். பள்ளிக்கூட பணியால் ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை என்றாலும் ஐக்கிய கேரளத்திற்கான கூட்டங்களில் பங்கேற்றுப் பேசினார்.
திருமணத்திற்குப் பிறகு, தாக்ஷாயிணியின் பொருளாதார சிரமங்கள் குறைந்தன. சமூகப் பணிகளில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தார். பிறகு கொச்சி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தேர்வானார். 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி முதன்முதலில் சட்டமன்றத்தில் பேசும்போது, ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார் தாக்ஷாயிணி. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு என ஒதுக்கப்படும் நிதி, அமைச்சர்களால் தவறாக செலவழிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டினார். உள்ளூராட்சி சபைகளில் பட்டியலினத்தோருக்குப் போதுமான பிரதிநிதித்துவம் இல்லாததையும் அவர் சுட்டிக்காட்டினார்.
தாக்ஷாயிணிக்கு 34 வயதே ஆகியிருந்தபோது சென்னை மாகாணத்தின் சார்பில் மலபார் மாவட்டத்தில் இருந்து அரசியலமைப்பு சபைக்குத் தேர்வானார். அரசியலமைப்பு சபை விவாதங்களில் தொடர்ந்து பட்டியலினத்தோர் பிரச்னைகள் குறித்து அவர் பேசினார். இந்தியா குடியரசாக மலரும்போது சாதியற்ற சமூகமாக மலரும் என நம்பிக்கை தெரிவித்தார்.
ஆனால், பட்டியலினத்தோர் பிரதிநிதித்துவம் குறித்து அவருக்கு அம்பேத்கருடன் முரண்பட்ட பார்வை இருந்தது. “பட்டியலினத்தோருக்கு என ‘தனியாக வாக்காளர் தொகுதி’ (seperate electorate for dalits) முறையை வலியுறுத்த வேண்டாம் என அரசியலமைப்பு சபையில் குறிப்பிட்ட அவர், அம்பேத்கர் தேசியவாத சக்திகளுடன் இணைந்து செயல்பட வேண்டுமெனவும் பேசினார். ஒரு சமூகத்தை மேம்படுத்த சிறப்புச் சலுகைகள் அளிக்காமல், மற்றவர்களின் மனமாற்றத்தின் மூலம் அதைச் சாதிக்க வேண்டுமென்றும் சொன்னார்.
அரசியலில் இருந்து விலகியது ஏன்?
அவர் பட்டியலினத்தோர் இட ஒதுக்கீட்டிற்கும் எதிராக இருந்தார். எந்த இடத்திலும் எவ்விதமான இட ஒதுக்கீட்டை அளிப்பதற்கும் நான் ஆதரவாக இல்லை என்றார் தாக்ஷாயிணி. அரசியலமைப்பு வரைவின் மீதும் கடும் விமர்சனங்களை முன்வைத்தார். ‘நமக்கு அது அந்நியமாக இருக்கிறது. இம்மாதிரி வரைவு நம் முன்பாக வைக்கப்படுவது மிகப் பெரிய துயரம்’ என்றார். 1935ஆம் ஆண்டின் இந்திய அரசுச் சட்டமே, எவ்வித மாற்றமும் இன்றி அரசியலமைப்புச் சட்டமாக ஆக்கப்பட்டிருப்பதாகவும் கருதினார்.
அரசியலமைப்புச் சட்டம் குறித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும். பெரும்பான்மை மக்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே அதை அமல்படுத்த வேண்டும் என்றும் சொன்னார். அவரது ஆலோசனை ஏற்கப்படவில்லை. அரசியலமைப்பு சபையில் பலரோடு அவருக்கு முரண்பாடுகள் இருந்தன. இருந்தாலும் ஆனி மாஸ்கரென், துர்காபாய் தேஷ்முக் ஆகியோருடன் நல்ல உறவிருந்தது.
கடந்த 1949 நவம்பர் 26ஆம் தேதி அரசியலமைப்புச் சட்டம் ஏற்கப்பட்ட பிறகு, அரசியலமைப்பு சபை தற்காலிக மக்களவையாகச் செயல்பட்டது. புதிதாக சில உறுப்பினர்களும் அவையில் நியமிக்கப்பட்டனர். தாக்ஷாயிணியின் கணவரான வேலாயுதனும் அவைக்கு நியமிக்கப்பட்டார். ஆகவே, இந்திய மக்களவையில் இடம்பெற்ற முதல் தலித் தம்பதி தாக்ஷாயிணி – வேலாயுதன் தம்பதிதான். விரைவிலேயே காங்கிரசிலிருந்து வெளியேறிய வேலாயுதன், முதல் பொதுத் தேர்தலில் கொல்லம் தொகுதியில் இருந்து தேர்வானார்.
இதற்குப் பிறகு குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதற்காக அரசியலை விட்டு விலகினார் தாக்ஷாயிணி. ஒரு காப்பீட்டு நிறுவனத்தில் டெல்லியில் பணிபுரிந்தார். 1971இல் மீண்டும் அரசியலுக்குத் திரும்பி அடூர் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டாலும், தாக்ஷாயிணிக்கு வெற்றி கிடைக்கவில்லை.
அம்மு சுவாமிநாதன், சரோஜினி நாயுடு, ரேணுகா ரே போன்றவர்களைப் போல, பெண்கள் இயக்கத்தில் இவர் ஆர்வம் காட்டவில்லை. அது மேட்டுக்குடியினருக்கானது எனக் கருதினார். தினந்தோறும் போராட்டம் நடத்தியே மேலே வந்த ஒருவருக்கு, அப்படித் தோன்றுவது இயல்புதான்.
அம்பேத்கரியத்தின் மீது ஆர்வமுடைய பெண்களோடு இணைந்து 1977வாக்கில் தலித் பெண்களுக்காகச் செயல்பட்டார். மகிளா ஜாகிரிதி பரிஷத் என்ற அமைப்பையும் உருவாக்கினார். அம்பேத்கரோடு முரண்பாடுகள் இருந்தாலும் அவரோடு பணியாற்றியதைப் பெரும் பேறாகவே அவர் கருதினார். சிறிது காலம் உடல்நலம் குன்றியிருந்த தாக்ஷாயிணி 1978 ஜூலை 20ஆம் தேதி காலமானார். பெண்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுபவர்களுக்கு தாக்ஷாயிணி வேலாயுதன் பெயரில் ஒரு விருதை கேரள அரசு வழங்கி வருகிறது.
இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் மற்ற 13 பெண்களில் ஆனி மாஸ்கெரன், துர்காபாய் தேஷ்முக் ஆகியோரைத் தவிர்த்த மற்றவர்கள் பெரும் செல்வாக்குமிக்க குடும்பங்களில் இருந்தோ, அரச குடும்பங்களில் இருந்தோ வந்தவர்கள். இந்தப் பின்னணியை வைத்துப் பார்க்கும்போதுதான் அம்மு சுவாமிநாதனும் தாக்ஷாயிணி வேலாயுதனும் தனித்துத் தெரிகிறார்கள்.
இந்தப் புத்தகம், அரசியலமைப்பு உருவானதில் பெண்களின் பங்களிப்பை மட்டும் குறிப்பிடவில்லை. அக்காலகட்டத்தில் பல்வேறுவிதமான பார்வைகளுக்கும் பல்வேறு பின்னணியைச் சேர்ந்தவர்களுக்கும் இடம் இருந்ததையும் சுட்டிக்காட்டுகிறது. இருந்தபோதும், 100 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பெண்கள் எதிர்கொண்ட நிலைமையில் பெரிய மாற்றமில்லை என்பதையும் சொல்கிறது இந்த நூல்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு