கான்பூர்: இந்தியா – வங்கதேச அணிகளிடையிலான 2-வது மற்றும் கடைசி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் ஆட்டமும் மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள வங்கதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சென்னையில் நடைபெற்ற முதலாவது டெஸ்டில் இந்தியா 280 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் கடந்த 27-ம் தேதி தொடங்கியது.
முதல் நாள் ஆட்டத்திலேயே மழையின் பாதிப்பு இருந்தது. இதனால் ஆட்டம் ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கியது. முதலில் விளையாடிய வங்கதேச அணி 35 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 107ரன்கள் எடுத்து இருந்தபோது, போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து கனமழையும் பெய்ததால் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது. மொமினுல் ஹக் 40 ரன்னுடனும், முஷ்பிகுர் ரஹிம் 6 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் 2-ம் நாள் ஆட்டம் நடைபெறவிருந்தது. ஆனால் மழைப்பொழிவு, மைதானத்தில் ஈரப்பதம் ஆகியவற்றின் காரணமாக 2-ம் நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இந்நிலையில் நேற்று 3-ம் நாள் ஆட்டம் நடைபெற இருந்தது . ஆனால் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழை காரணமாக மைதானம் ஈரப்பதம் நிறைந்து காணப்பட்டது. காலை முதலே பலமுறை களத்தில் விளையாடுவதற்கு ஏற்ற நிலைமை உள்ளதா என்று கள நடுவர்களும், போட்டி நடுவர்களும் ஆய்வு செய்து வந்தனர். மைதானத்தை உலர வைப்பதற்கான பணிகளிலும் மைதான ஊழியர்கள் ஈடுபட்டனர். இருப்பினும், பிற்பகல் வரையிலும் ஆடுகளம் போட்டியை நடத்த அனுமதிக்காத காரணத்தால், மூன்றாம் நாள் ஆட்டமும் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.