இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி 101 மில்லியன் மக்கள், நீரிழிவு நோயுடன் வாழ்ந்துகொண்டிருப்பதாகவும்,136 மில்லியன் மக்களுக்கு விரைவில் நீரிழிவுக்கு முந்தைய நிலையில் இருப்பதாகவும் சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு, மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி நிறுவனம் (Madras Diabetes Research foundation) மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தால் (Indian Council of Medical Research) இணைந்து நடத்தப்பட்டதாக, இந்தியாஸ்பெண்ட் இணையதளம் வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில், நீரிழிவு நோய் குறித்து மட்டுமல்லாமல் ரத்த அழுத்தம், உடல் பருமன், அதிக கொலஸ்ட்ரால் போன்ற பல்வேறு நோய்கள் பற்றியும் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. மொத்தம் 31 மாநிலங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவில், ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு நோய்களின் எண்ணிக்கை குறித்து விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. நீரிழிவு நோய் எண்ணிக்கையில், இந்தியாவிலேயே கோவாவில் (26.4%) அதிகமாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அடுத்த இடங்களில் கேரளா மற்றும் புதுச்சேரி (25%) உள்ளன.
இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 11.4 சதவிகிதம் பேர், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 15.3 சதவிகிதம் பேர் விரைவில் நீரிழிவு நோய் ஏற்படும் சாத்தியக்கூறுகளுடன் உள்ளனர். அதேபோல், 35.5 சதவிகிதம் பேருக்கு ரத்த அழுத்த பாதிப்பு உள்ளது. 28.6 சதவிகிதம் பேர் உடல் பருமன் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.