கடந்த 2022 ஜூலை மாதம் நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமையை வலியுறுத்தி, கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்றும், இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்க முடியாது என்றும், ஏற்கெனவே கட்சியின் விதிகளின்படி ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ் நீடிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுமீதான விசாரணை முடிவுற்ற நிலையில், அ.தி.மு.க-வினரால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. இந்தத் தீர்ப்பில், அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்றும், பொதுக்குழுவின் முடிவுகளை ஏற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுவிட்டது.
இந்தத் தீர்ப்பால் குஷியடைந்த அ.தி.மு.க தொண்டர்கள், தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர். இன்று காலை மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி, அங்கிருந்து ஈரோடு வில்லரசம்பட்டிக்கு மாலை 4:30 மணியளவில் வந்து சேர்ந்தார்.
இங்குள்ள தனியார் ரிசார்ட்டுக்கு வந்த அவரை 10,000 வாலா பட்டாசு வெடித்தும், வானவெடிகளை வெடிக்கச் செய்தும் பிரமாண்டமாக வரவேற்றனர் கட்சித் தொண்டர்கள். ரோஜாப்பூக்களை எடப்பாடி பழனிசாமிமீது தூவி அவரை வரவேற்றனர்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பையடுத்து, ஏராளமான கட்சித் தொண்டர்களும், முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.பி.முனுசாமி, பொள்ளாச்சி ஜெயராமன், வேலுமணி, தங்கமணி, நந்தம் விஸ்வநாதன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ், கே.வி.ராமலிங்கம், கே.சி.கருப்பணன், விஜயபாஸ்கர், தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி தலைவர் யுவராஜா, அந்தக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர் உள்ளிட்ட பல்வேறு கூட்டணிக் கட்சியினரும் வரவேற்றனர். எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பளிக்கும் வகையில் மேடையில் வைக்கப்பட்டிருந்த பேக்-ட்ராப்பில் `கழகத்தின் நிரந்தரப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.