கிரிக்கெட்டும் இந்திய ரசிகர்களும் பிரித்தே பார்க்க முடியாத ஒன்று. இந்திய அணி மற்ற அணியோடு மோதும் போது இந்திய அணி வீரர்களும் அந்த எதிரணி வீரர்களுமே விளையாட்டில் பங்கேற்பார்கள். ஆனால், இந்தியா பாகிஸ்தானுடன் மோதும் போது மட்டுமே இந்திய வீரர்களுடன் இந்திய அரசியல்வாதிகளும் செலிப்ரிட்டிகளும் பாகிஸ்தான் வீரர்களுடன் பாகிஸ்தான் அரசியல்வாதிகளும் செலிப்ரிட்டிகளும் சேர்ந்து மோதிக்கொள்வர்.
இந்தப் போக்கு மாறாத தொடர்கதையாக இருந்து வருகிறது. அவர்கள் மோதிக்கொள்ளட்டும். ஆனால், அதைச் சுற்றி பரப்பப்படும் ஒரு கட்டமைக்கப்பட்ட தேசியப்பற்றும் வெறுப்பரசியலுக்கும் இரு நாட்டு ரசிகர்களும் இரையாவது தவிர்க்கப்பட வேண்டும். அதற்கு கிரிக்கெட் கிரிக்கெட்டாக மட்டுமே அணுகப்பட வேண்டும். இதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் நம் தமிழ்நாட்டிலேயே நடந்திருக்கிறது. இதேநாளில் நடந்த அந்த உணர்வுப்பூர்வமான சம்பவத்தை அசைபோட்டு பார்ப்போம்.
ஜனவரி 1999. வழக்கம்போல இந்தியா-பாகிஸ்தான் இடையே உரசல் காணப்பட்ட காலகட்டமே. (அந்த ஆண்டின் மே மாதத்தில்தான் கார்கில் போரும் நடந்திருந்தது.)

ஜனவரியில் வாசிம் அக்ரம் தலைமையிலான பாகிஸ்தான் அணி இந்தியாவில் தொடர் ஆட வருகிறது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு வந்திருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியே சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது. போட்டி தொடங்குவதற்கு முன்பு ட்ரெஸ்ஸிங் ரூமில் வீரர்களுடனான மீட்டிங்கில் கேப்டன் வாசிம் அக்ரம் ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டுப் பேசுகிறார்.
‘நாம் இந்தியாவில் இந்திய ரசிகர்கள் மத்தியில் கிரிக்கெட் ஆடப் போகிறோம். நம்முடைய பெர்ஃபார்மென்ஸை ரசிகர்களின் ரியாக்சனை வைத்தே அளவிட்டுக் கொள்ள முடியும். ரசிகர்கள் ரொம்பவே அமைதியாக சலனமே இல்லாமல் இருந்தால் நாம் சிறப்பாக ஆடிக்கொண்டிருக்கிறோம் என அர்த்தம். அதுவே, ரசிகர்கள் கூச்சலும் ஆராவாரமுமாக இருந்தால் நாம் மோசமாக ஆடுகிறோம் என்று எடுத்துக் கொள்ளலாம்’ எனக் கூறியிருக்கிறார்.
அதாவது, இந்திய ரசிகர்கள் எப்படியும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கமாட்டார்கள் என்பது வாசிம் அக்ரமின் எண்ணம். ஆனால், நடந்தது வேறு.
பாகிஸ்தான் சிறப்பாக ஆடும்போது, நல்ல விக்கெட்டுகளை வீழ்த்தும் போது ரசிகர்கள் பெரும் ஆராவாரம் எழுப்புகின்றனர். சக்லைன் முஷ்தாக் 5 விக்கெட் எடுத்ததற்கு எழுந்து நின்று கைத்தட்டுகின்றனர்.
இந்தியா முதல் இன்னிங்ஸிலேயே சுமாராக ஆடியிருந்தது. சச்சின் டக் அவுட் ஆகியிருந்தார். வெங்கடேஷ் பிரசாத் ஒரு விக்கெட் கூட எடுத்திருக்கவில்லை. இரண்டாவது இன்னிங்ஸில் போட்டியைக் காப்பாற்ற இந்தியா போராடுகிறது. பௌலிங்கில் வெங்கடேஷ் பிரசாத் 6 விக்கெட்டுகளை வீழ்த்துகிறார். சச்சின் ஒற்றை ஆளாக நின்று சதமடிக்கிறார். ஆனாலும் இந்திய அணியால் வெல்ல முடியவில்லை. இந்திய அணி வெற்றியை நெருங்கி வந்து தோற்கிறது. பாகிஸ்தான் வெறும் 12 ரன்கள் வித்தியாசத்தில் முதல் போட்டியை வென்றது.

இப்போது மீண்டும் ஆச்சர்யம். வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணிக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக ஒட்டுமொத்த ரசிகர் கூட்டமும் எழுந்து நின்று கைத்தட்டி ஆராவாரம் செய்கிறது.
வாசிம் அக்ரம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த பாகிஸ்தான் அணியும் ஆச்சர்யத்தில் உறைகிறது. சென்னை ரசிகர்களின் அன்பில் திக்குமுக்காடுகிறது. பாகிஸ்தான் என்பதற்காகவே அவர்களை வெறுக்க வேண்டும் என்ற எண்ணம் சென்னை ரசிகர்களிடம் இல்லை. நல்ல கிரிக்கெட் ஆடும் அணியை வாழ்த்துவதில் எந்த தவறுமில்லை. அவர்கள் நம் நாட்டையே கூட வீழ்த்தியிருந்தாலும்! என்கிற மேம்பட்ட எண்ணத்தை சேப்பாக்கத்தில் குழுமியிருந்த ரசிகர்கள் வெளிக்காட்டியிருந்தனர். 1996 உலகக்கோப்பையில் இலங்கைக்கு எதிராக இந்தியா வீழ்ந்த போது அங்கு கூடியிருந்த ரசிகர்கள் என்ன மாதிரியாக ரியாக்ட் செய்திருந்தார்கள் என்பதை கிரிக்கெட் உலகமே தலைகுனிவோடு கண்டிருந்தது. அத்தோடு ஒப்பிடும்போது பாகிஸ்தான் வீரர்களை தமிழ்நாட்டு ரசிகர்கள் ட்ரீட் செய்த விதம்தான் காலம்கடந்தும் பேச வைக்கிறது. சென்னை ரசிகர்களுக்கு ‘Knowledgeable Crowd’ என்கிற பட்டத்தையும் இந்த சம்பவமே பெற்றுக் கொடுத்தது.
24 years ago, Pakistan won a test game at India and it was the Knowledgeable Chennai Crowd that gave them a standing ovation! #AndhaNaalGnyabagam of Anbuden's #SpiritOfCricket pic.twitter.com/A6IlarEmgI
— Chennai Super Kings (@ChennaiIPL) January 31, 2023
பல வருடங்கள் கழித்து இப்போது வாசிம் அக்ரமிடம் மைக்கை நீட்டி, ‘இந்தியா-பாகிஸ்தான் மோதலில் உங்களுக்கு பிடித்தமான சம்பவம் எது?’ என்று கேட்டாலும் அந்த சென்னை டெஸ்ட்டையும் ரசிகர்களின் ஆராவாரத்தையுமே தன்னுடைய பிடித்தமான மொமண்டாக வாசிம் அக்ரம் கூறுகிறார்.
I get goosebumps every time I watch this video
1999. Pakistan defeated India by 12 runs in a thrilling test match
Pak team took a victory lap, and every single person stood up & clapped
Today, the entire Chepauk stadium would be charged with seditionpic.twitter.com/6h0SGp8k9i
— Parth MN (@parthpunter) October 28, 2021
இந்தியா vs பாகிஸ்தான் போட்டிகளின் போது ஊதி பெரிதாக்கப்படும் வெறுப்பரசியலை புறந்தள்ள இரு நாட்டு ரசிகர்களும் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டிய சம்பவமாக இந்த சேப்பாக்கம் சம்பவம் என்றைக்குமே வரலாற்றில் நிற்கும்!