`இதுவரை 80 லிட்டர்!’ – தாய்ப்பால் தானம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் தன்னார்வலர்கள் #BreastFeedingWeek

Share

ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரம் (1 முதல் 7 வரை) உலகம் முழுவதும் தாய்ப்பால் வாரமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. முன்பு இருந்த சூழலுடன் ஒப்பிட்டால், இன்றைக்கு தாய்ப்பால் புகட்டுதல் குறித்த விழிப்புணர்வு பெரும்பாலான தாய்மார்களிடம் இருக்கின்றது. அதே சமயம், தாய்ப்பால் தானம் பற்றிய விழிப்புணர்வு என்பது மிகவும் குறைவாகவே உள்ளது.

கெளசல்யா

தாய்ப்பால் தானம் செய்வது பற்றி மக்களிடையே தன்னார்வலர்கள், தொண்டு அமைப்பினர் பலரும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், கரூரைச் சேர்ந்த தன்னார்வலர்கள் கௌசல்யா மற்றும் பார்கவி இருவரும் தாய்ப்பால் தானம் கொடுக்கும் அமைப்பை உருவாக்கியுள்ளனர். தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கும், எப்படியாவது தாய்ப்பால் கிடைக்க வழிவகை செய்வதே இதன் நோக்கம்.

ஆசிரியராகவும், தாய்ப்பால் ஆலோசகராகவும் உள்ள கௌசல்யாவிடம் பேசினோம். “நானும் பார்கவியும் ஸ்கூல்ல இருந்தே ஃப்ரெண்ட்ஸ். பார்கவிக்குத் திருமணம் முடிஞ்சப்போ, கர்ப்பகால பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு, தாய்ப்பால் கொடுக்குறது பத்திலாம் அவருக்கு நிறைய சந்தேகங்கள் இருந்தது. இதில் தெளிவு கிடைச்சதால, குழந்தை பிறந்த பிறகு, தாய்ப்பால் தானம் கொடுத்துட்டு இருந்தாங்க.

தாய்ப்பால் தானம் விழிப்புணர்வு

அப்போதே, நானும் தாய்ப்பால் தானம் கொடுக்கணும்னு முடிவு செஞ்சேன். எனக்குத் திருமணம் முடிஞ்ச பிறகு, தாய்ப்பால் சார்ந்த சில விஷயங்கள்ல சந்தேகங்கள் இருந்துச்சு. அப்போ எனக்கு பார்கவிதான் ரொம்ப உதவினாங்க. இதே மாதிரி, நாம ஏன் மத்தவங்களுக்கு உதவி செய்யக்கூடாதுன்னு தோணுச்சு. இதுக்காகவே நாங்க ரெண்டு பேரும் புனேவில் இருக்குற ஒரு இன்ஸ்டிட்யூட்டில் Lactation Consultants கோர்ஸ் படிச்சோம். போன வருஷம் ஜூனில், ’Karur Parenting Tribe’ என்கிற என்.ஜி.ஓ அமைப்பை ஆரம்பிச்சோம். இதுல தாய்ப்பால் தானம் மட்டுமில்லாம பெண்கள் நலன் சார்ந்த இன்னும் பல முயற்சிகளையும் செய்துட்டு இருக்கோம்.

இதுதவிர பள்ளி, கல்லூரிகளுக்கு நேரடியாகப் போய் மென்ஷுரல் கப் பத்தி மாணவிகளிடம் பேசுறோம். பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்திட்டு வர்றோம். இதுக்கு ரொம்ப குறைவாதான் கட்டணம் வாங்குறோம். இந்தத் தொகையை வெச்சுத்தான, தாய்ப்பால் சேமிச்சு வைக்கத் தேவையான சில மருத்துவ உபகரணங்கள் வாங்கிக்குவோம். தாய்ப்பால் தானம் பத்தி பலரிடம் பேசி அதற்கு ஏற்பாடு செஞ்சுட்டு வர்றோம்.

தானம் பெறப்பட்ட தாய்ப்பால் வழங்கப்படுகிறது

இதுக்காக Aadhini Breastmilk Donation Drive என்கிற அமைப்பும் நடத்திட்டு இருக்கோம். திருச்சி, திருச்செங்கோடு பகுதிகளிலே யாருக்காவது தாய்ப்பால் தேவைப்படும்போது, நாங்க ஏற்பாடு செய்வோம். எங்க அமைப்பு மூலமா, இதுவரை 80 லிட்டருக்கும் மேல் தாய்ப்பால் தானம் கொடுத்திருக்கோம். இதுல நிறைய சிரமங்களும் இருக்கு. நாங்க ஒவ்வொருத்தர் கிட்டயும் இதைப்பத்தி பேசி, புரிய வெச்சு அதன் பிறகுதான் அவங்க ஒத்துப்பாங்க.

இன்னும் பல பேர், `என் குழந்தைக்கு பால் இல்லாம போயிடுமோ’ன்னு பயப்படுவாங்க. கரூரில் தாய்ப்பால் தானம் பண்ணனும்னுதான் ஆரம்பிச்சோம். ஆனா, இங்க சேமிச்சு வைக்க பேங்க் இல்ல. அதனால, தாய்ப்பால் தானம் கொடுக்குறவங்ககிட்ட இருந்தே நேரடியா வாங்கிக்கச் சொல்லி ஒருங்கிணைக்கிறோம். தாய்ப்பால் 4 மணி நேரம் கெட்டுப் போகாம இருக்கும். தாய்ப்பால் சேகரிக்கத் தேவையான கிட் பேக் கொடுத்து, அதற்கான செய்முறையைச் சொல்லிக் கொடுத்து அனுப்பிடுவோம்.

தாய்ப்பால் சேகரிக்க பயன்படுத்தப்படும் பேக்

எங்க ரெண்டு பேரையும் பார்த்து, நிறைய பேர் தாய்ப்பால் தானம் கொடுக்க முன் வர்றாங்க. இதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியா இருக்கு.

பச்சிளம் குழந்தைக்கு தாய்ப்பால் ரொம்ப முக்கியம். குழந்தையோட எல்லாவிதமான வளர்ச்சிக்கும் தாய்ப்பால் தான் காரணம். தாய்ப்பால் தானத்துக்கு நிறைய பேர் முன் வரணும். உங்களோட குழந்தைக்கு போதுமான பால் கொடுத்த பிறகு, தானம் கொடுக்கலாம். இதைப் பத்தி நிறைய சந்தேகங்கள் இருந்தால், முழுசா புரிஞ்சிக்கிட்ட பிறகு தாய்ப்பால் தானம் கொடுக்கலாம்” என்கிறார் கெளசல்யா.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com