இந்த அறுவை சிகிச்சை குறித்துப் பேசியுள்ள, உறுப்பு மீட்புக் குழுவை வழிநடத்திய அறுவை சிகிச்சை நிபுணர் ரிச்சர்ட் ஸ்மித், “இங்கிலாந்தின் 25 வருட கருப்பை அறுவை சிகிச்சை ஆய்வுக்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றி இது. அறுவை சிகிச்சை நடந்த முழு செயல்முறையும் மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தது. தானம் பெற்ற பெண் நலமுடன் உள்ளார். அவரால் இனி ஒன்று அல்ல இரண்டு குழந்தைகளை பெற முடியும். அவரது கருப்பை மிகச்சரியாகச் செயல்படுகிறது. அவரின் உடல்நலத்தை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்” என்று கூறியுள்ளார்.
“இங்கிலாந்தில் தற்போது 15,000-க்கும் மேற்பட்ட, குழந்தை பிறக்கும் வயதுடைய பெண்கள் கருத்தரிக்க இயலாத உடல்நிலையுடன் உள்ளனர் என்பது அதிர்ச்சியூட்டும் உண்மை. அவர்களில் பலர் பிற அசாதாரணக் காரணங்களால் கருப்பை நீக்கம் செய்யப்பட்டவர்கள். தற்போது இந்தப் பெண்ணுக்கு செய்துள்ள கருப்பை மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் நல்ல முறையில் குழந்தை பிறந்தால், இது மற்ற பெண்களுக்கும் நம்பிக்கை கொடுக்கும்” என்று இங்கிலாந்தின் கருப்பை மாற்று அறுவை சிகிச்சையின் தலைவர் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
2014-ல் ஸ்வீடனில் ஒரு பெண் கருப்பை மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தை பெற்ற முதல் பெண் ஆனார். அவர் தனது 60 வயதில், தானமாகக் கருப்பையைப் பெற்றார். பிறகு உலகளவில் 100 -க்கும் அதிகமான கருப்பை மாற்று அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன. இதன் மூலம் சுமார் 50 குழந்தைகள் பிறந்துள்ளன. அமெரிக்கா, ஸ்வீடன், துருக்கி, இந்தியா, பிரேஸில், சீனா, செக் குடியரசு, ஜெர்மனி மற்றும் ஃபிரான்ஸ் ஆகிய நாடுகளில் கருப்பை மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளன.