இந்திய கிரிக்கெட் அணியின் வரலாற்றில் மிக முக்கியமான வெற்றிகளில் 2020-21 ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடர் வெற்றியும் ஒன்று. ஆஸ்திரேலியாவின் சொந்த மண்ணிலேயே, 32 வருடங்கள் அவர்கள் ஆண்டுவந்த Gabba கோட்டையைத் தகர்த்திய இந்திய அணியின் கதை ஆவணத் தொடராகத் தயாராகியுள்ளது.
கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத சம்பவங்கள் பல நிறைந்தது இந்த டெஸ்ட் தொடர். நான்கு போட்டிகளில் முதல் போட்டியில் 36 ரன்களில் மிக மோசமாக இந்திய அணி தோற்றது. விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தியா திரும்ப நேர்ந்தது. இந்திய அணியின் வீரர்கள் அடுத்தடுத்து காயமடைந்தனர். ரஹானே இரண்டாவது போட்டியில் சதமடித்து அணியைக் காப்பாற்றினார்.
ஒரு பக்கம் சரிந்து வரும் இந்திய வீரர்கள், மறுபுறம் அரக்கத்தனமான ஆஸ்திரிலேய வீரர்கள். இந்திய அணி எல்லாவற்றையும் சமாளித்து எப்படி வெற்றி பெற்றது என்கிற கதையை உணர்ச்சிபூர்வமான ஆவணத் தொடராக மாற்றியுள்ளனர்.
ரஹானே, புஜாரா, ரவிச்சந்திரன் அஷ்வின், சிராஜ், பண்ட், விஹாரி, பயிற்சியாளர்கள், ஊடகவியலாளர்கள் என அந்த டெஸ்டின் அங்கத்தினர் பார்வையில் இந்த வரலாறு மற்றொரு முறை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
“இதிலுள்ள மனிதர்களின் கதைகள் கிரிக்கெட் ரசிகர்களைத் தாண்டி இந்தியர்கள் அனைவரையும் பரவசப்படுத்தும். விளையாட்டிலும் கிரிக்கெட்டிலும் மிகச் சிறந்த கம்பேக்குகளில் ஒன்று இது. இந்தக் கதையைச் சொல்வதற்கு எங்களைத் தூண்டியதே இந்திய ரசிகர்களுக்கு அணியின் மீதான பிடிப்புதான்” என்கிறார் நீரஜ் பாண்டே.