பின்னர் பேரணியாக மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். இதையடுத்து பேசிய ரஜினி.கணேசன், “ஆன்மிக அரசியலைத் தேடி பா.ஜ.க-வில் இணைந்திருக்கிறோம். சாதி, மதம் கடந்த லஞ்சம் ஊழலற்ற வெளிப்படைத் தன்மையான ஆட்சியினை பா.ஜ.க வழங்கி வருகிறது. அதில் ஈர்க்கப்பட்டு பா.ஜ.க-வில் இணைந்திருக்கிறோம்” என்றார்.
அவரைத் தொடர்ந்து அண்ணாமலை, “தமிழ்நாட்டில் எப்போதும் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினி மட்டுமே. அவரின் மனிதத் தன்மையைப் பார்த்து மக்கள் கொடுத்த பெயர்தான் சூப்பர் ஸ்டார். அது எப்பவும் ரஜினியிடம் மட்டுமே இருக்கும். தமிழ்நாட்டில் வேறு யாருக்கும் போகாது.
நடிகர் என்பதைத் தாண்டி நல்ல பண்பாளர், தேசத்தை நேசிக்கக் கூடியவர். ஆன்மிக பாதையில் பயணம் செய்யக் கூடிய பண்புடையவர். சின்ன பொறுப்புக்காக அடித்துக்கொள்ளும் உலகத்தில், பதவி நாற்காலி தயாராக இருந்தும் வேண்டாம் என்று சொன்னவர். கட்டுக்கோப்பான அவரது மன்றத்திலிருந்து அவருடைய ரசிகர்கள் பா.ஜ.க-வில் இணைந்திருப்பது பெருமையாக உள்ளது. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் தேவை, காரணம் கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை லஞ்சம் நிறைந்துள்ளது. அலுவலர்கள், அமைச்சர்கள் வரை 20 சதவிகிதம் கமிஷன் என்ற வார்த்தை பேசும் பொருளாக மாறி விட்டது.