கடந்த 2016-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நல குறைவால் காலமானார். அவரின் மரணத்தில் மர்மம் இருந்ததாக அப்போதைய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டினார். இதையடுத்து, இரண்டு அணிகளாக பிரிந்திருந்த ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்த பின்னர் 2017-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, தீபாவின் தம்பி ஜெ.தீபக், ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் பணியாற்றிய சமையலர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி சாட்சியம் பதிவு செய்தது. இதேபோல், அப்போலோ மருத்துவர்கள், தொழில்நுட்புநர்கள் உட்பட 151 சாட்சிகள் மற்றும் பிரமாண பத்திரம் அளித்த 8 பேரிடம் விசாரணை நடத்தி சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.
இதில், சசிகலா நேரில் ஆஜராகாமல் பிரமான பத்திரம் தாக்கல் செய்திருந்தார். சுமார் நான்கரை ஆண்டுகள் கழித்து ஜெயலலிதா மரணம் தொடர்பான முழு அறிக்கையைக் கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி முதல்வர் ஸ்டாலினிடம் நீதிபதி ஆறுமுகசாமி வழங்கினார். சமீபத்தில் அமைச்சரவை கூட்டத்தில் அறிக்கையைத் தாக்கல் செய்வதற்கு ஒப்புதல் பெறப்பட்டது. இதையடுத்து, சட்டப்பேரவையில், ஆணையத்தின் 608 பக்க அறிக்கை கடந்த 18ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், “சசிகலாவின் உறவினரான கிருஷ்ணப்பிரியா அளித்த சாட்சியத்தின்படி சசிகலா, ஜெயலலிதா இடையே நல்லுறவு இல்லை. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, மருத்துவமனையில் சசிகலா உறவினர்களால் 10 அறைகள் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டதாகக் கூறப்பட்டதைத் தவிர, அப்போலோ மருத்துவமனையால் வேறு ஆதாரங்களோ, ஆவணங்களோ வைக்கப்படவில்லை.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடந்த அடுத்தடுத்த நிகழ்வுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சசிகலாவைக் குற்றம் சாட்டுவதைத்தவிர, ஆணையம் வேறு எந்த முடிவுக்கும் வர இயலாது. சசிகலா, மருத்துவர் சிவக்குமார், அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், ஆகியோரை குற்றம் செய்தவர்களாக ஆணையம் முடிவு செய்து நால்வர் மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ஆணையம் அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, அவர் எந்த நேரத்திலும் டிஸ்சர்ஜ் செய்யப்படலாம் என வெளியிடப்பட்ட அறிக்கை பொய்யானது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் உள்ளடக்கியதாக இருந்தது.
விசாரணை ஆணையத்தின் அறிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில் அன்றைய தினமே அறிக்கை வெளியிட்ட சசிகலா, “நம் இதயதெய்வம் அம்மா என் அருகிலேயே இருந்து நடப்பவை எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார். என் மீது பழி போடுவதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இது போன்று என் மீது பழிபோடுவது ஒன்றும் புதிது இல்லை என்றைக்கு நான் அம்மா அவர்களின் கரத்தை பிடித்தேனோ அன்று ஆரம்பமானது என் மீது இந்த பழி போடும் படலம். அது இந்த நொடிவரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதைப்பற்றிக் கவலைப்பட்டு இருந்தால் எங்களால் அரசியலில் இந்த அளவுக்குச் சாதித்து இருக்கமுடியாது. ஆனால் அதே சமயம் என் அக்கா, நம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் புகழுக்குக் களங்கம் ஏற்படுத்துவதுதான் எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது.
புரட்சித்தலைவி அம்மாவின் மரணத்தைச் சர்ச்சையாக்கி, அதற்காக ஒரு விசாரணை ஆணையம் நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் அமைத்து, அதன் அறிக்கையும் அரசியலாக்கி விட்டார்கள். தற்போது, இவர்கள் பங்குக்கு என்னை விசாரிப்பதாகச் சொல்கிறார்கள். எத்தனை முறை எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் அம்மா அவர்கள் மரணத்தைப் பற்றி விசாரித்துக் கொண்டே இருக்கலாம். ஆனால், உண்மை என்றைக்கும் மாறாது. நம் அம்மாவின் மரணத்தில் எந்த வித சந்தேகமும் கிடையாது. அம்மா அவர்கள் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் முறையான சிகிச்சைகள் அளித்து நன்றாக குணமடைந்து வீட்டிற்கு திரும்ப இருந்த நிலையில் துரதிருஷ்டவசமாக நம்மையெல்லாம் நிர்கதியாக விட்டுச் சென்றார் என்பதுதான் எதார்த்தமான உண்மை. இந்த எதார்த்தத்தை கழகத் தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் புரிந்துகொண்டுள்ளனர்” என்று கூறியுள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கை வெளியாகியுள்ள நிலையில் தமிழக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து, திமுக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா, “நீதியரசரின் ஆணையம் யார் யாரெல்லாம் குற்றவாளிகள் என்பதை அடையாளப்படுத்தியிருக்கிறது. அந்த காலகட்டங்களில் அதிகாரத்தை பயன்படுத்தியவர்கள் யார்? தலைமை செயலாளரின் நிலைப்பாடு, பழனிசாமி, பன்னீர் செல்வத்தின் நிலைப்பாடு என்ன என்பதை முழுமையாக பட்டியலிட்டு சமர்பித்துள்ளது. இந்த ஆணையத்தையே தன்னுடைய அரசியல் லாபத்திற்காக பன்னீரும், எடப்பாடியும் விளையாடினார்கள். ஆணையம் அமைத்தால் உங்களோடு சேர்வதற்கு தயார் என்று கோரிக்கை வைத்து தான் இணைந்தார்கள். ஜெயலலிதாவுக்கு தேவையான சிகிச்சையை வழங்க விடாமல் அதிகாரத்தில் இருந்தவர்கள் தடுத்தார்கள் என்று ஆணையமே சொல்கிறது. மக்களுக்கும், அதிமுக தொண்டர்களுக்கும் ஒரு உண்மையை அரசு கொடுத்திருக்கிறது. சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த அறிக்கை அடிப்படையில் அடுத்தகட்டமாக அரசு தலைமை வழக்கறிஞரிடம் சட்டப்பூர்வமான கருத்துருக்களை பெற்று அதனடிப்படையில் அரசு வழக்கு பதிவு செய்து வழக்கை நடத்தும்” என்றார்.