
மாலதி, ஹரீஷ்
ஆருத்ரா கோல்ட் என்ற நிறுவனத்தின் மூலம் அதிக வட்டி தருவதாக ஆசைகாட்டி ஒரு லட்சம் பொதுமக்களிடமிருந்து சுமார் 2,400 கோடி ரூபாய் அளவுக்கு நிதி திரட்டி ஏமாற்றிய விவகாரத்தில் அந்த நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவருமான ஹரீஷ், அந்த நிறுவனத்தைச் சேர்ந்த மாலதி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஹரீஷ் பா.ஜ.கவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் மாநிலச் செயலராக நியமிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், பிறகு அவர் அந்தப் பதவியை ஏற்கவில்லை; அவர் அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதாக பா.ஜ.க. தற்போது கூறுகிறது.
ஆருத்ரா கோல்ட் டிரேடிங் பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக சென்னை அமைந்தகரையில் திறக்கப்பட்டது. பொதுமக்களிடமிருந்து பெறப்படும் வைப்பு நிதிகளுக்கு வட்டியாக 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும் என அறிவித்தது இந்த நிறுவனம்.
சுமார் 20 இடங்களில் இந்த நிறுவனத்திற்குக் கிளைகள் திறக்கப்பட்டு, முதலீடுகள் பெறப்பட்டன. பல இடங்களில் தீவிர விளம்பரமும் செய்யப்பட்டது.
ரூ. 2,400 கோடி வரை முதலீடு
பட மூலாதாரம், Getty Images
இதனால் 2020ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 2022ஆம் ஆண்டு மே மாதம் வரை பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.
ஒரு லட்சம் பேர் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்ததாகச் சொல்லப்படுகிறது. இவர்கள் முதலீடு செய்த தொகை 2,400 கோடி ரூபாய் அளவுக்கு இருக்கும் என காவல்துறையின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
ஒரு கட்டத்தில் முதலீட்டாளர்களுக்கு வட்டி கொடுப்பதை நிறுத்திய இந்த நிறுவனம் அசலையும் தர மறுத்தது. இதையடுத்து முதலீட்டாளர்கள் கொடுத்த புகாரின் பேரில் 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் பொருளாதார குற்றப் பிரிவு காவல் துறை இந்த நிறுவனத்தின் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தது.
ஆருத்ரா கோல்ட் நிறுவனம், இதன் ஐந்து துணை நிறுவனங்கள், இயக்குநர்கள், முக்கிய ஏஜென்ட்கள் ஆகியோர் இந்த வழக்கில் எதிரிகளாக சேர்க்கப்பட்டனர்.
இவர்களில் இந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் பாஸ்கர், மோகன்பாபு, செந்தில்குமார், பட்டாபிராமன், நிர்வாகிகள் பேச்சிமுத்துராஜா, அய்யப்பன், ஏஜென்டுகள் ரூசோ, நாகராஜ் ஆகியோர் ஏற்கெனவே கைதுசெய்யப்பட்டு விட்டனர்.
இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் மற்றொரு இயக்குநரான ஹரீஷ் என்பவர் தேடப்பட்டு வந்தார். இவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்களிடம் இருந்து 210 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்து தனது வங்கிக் கணக்குகள் மூலம் ஆருத்ரா கோல்ட் நிறுவனத்திற்கு அனுப்பியதாக பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை கூறுகிறது.
இவர் தனது பெயரிலும் தனது உறவினர்கள் பெயரிலும் சுமார் 30 சொத்துகளை வாங்கியிருப்பதைக் கண்டறிந்த பொருளாதார குற்றப் பிரிவு, இந்த சொத்துகளையும் சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளையும் முடக்கியுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
அதேபோல, தண்டையார்பேட்டை முகவரியைக் கொண்டுள்ள இந்த நிறுவனத்தில் கூடுதல் இயக்குநர் பொறுப்பு வகித்த மாலதி என்பவரையும் காவல்துறை கைது செய்துள்ளது. இவர், வேலூர், காட்பாடி, திருச்சி கிளைகளுக்கு பொறுப்பாக இருந்து ஆயிரக்கணக்கானவர்களிடம் இருந்து முதலீடுகளைப் பெற்றிருக்கிறார்.
கடந்த 10 மாதங்களாகத் தேடப்பட்டு வந்த இவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பயன்படுத்திய இரண்டு கார்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஆருத்ரா கோல்ட் நிறுவன மோசடி விவகாரம் உச்சகட்டத்தை எட்டியிருந்த நேரத்தில் அந்த நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராக இருந்த ஹரீஷ், காஞ்சிபுரம் மாவட்ட பாஜக மாநில செயலராக கடந்த ஜூன் 2ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.
இது குறித்து ஊடகங்கள் கேள்வி எழுப்பியபோது, அவர் அந்த நிறுவனத்தில் இயக்குநராக இல்லையென்றும், பங்குகள் எதையும் வைத்திருக்கவில்லை என்றும் பா.ஜ.க விளையாட்டு அணியின் தலைவரான அமர் பிரசாத் ரெட்டி பதிலளித்தார். இது தொடர்பாக ட்விட்டரிலும் அவர் விளக்கம் அளித்திருந்தார்.
இப்போது ஹரீஷ் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், அமர் பிரசாத் ரெட்டி ஹரீஷிற்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 22ஆம் தேதி அனுப்பியதாக கூறப்படும் கடிதம் ஒன்று பா.ஜ.க ஆதரவாளர்களால் ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் ஹரீஷ் பல கேள்விகளுக்கு பதிலளிக்காததால், அவருக்கு அளிக்கப்பட்ட பொறுப்பிலிருந்து நிறுத்தி வைக்கப்படுவதாக கூறப்பட்டிருக்கிறது. ஆனால், அதே ஜூன் 22ஆம் தேதிதான் அமர் பிரசாத் ரெட்டி ஹரீஷிற்கு ஆதரவாக ட்விட்டர் பதிவையும் வெளியிட்டார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: