ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கொசப்பாளையம் பகுதியில் ஆரணி பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி விற்பனை சங்கம் செயல்பட்டு வருகிறது. கடந்த 2018 முதல் சங்கத்தில் அதிமுகவை சேர்ந்த ஒன்றிய அவைத்தலைவரான சம்பத் பட்டு கூட்டுறவு சங்க தலைவராகவும், துணை தலைவராக சுந்தரமூர்த்தி மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் 7 பேர் உள்ளனர். இச்சங்கத்தில் 1450க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினராக உள்ளனர்.
ஏற்கனவே கடந்த 2000ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது ஆரணி அடுத்த இரும்பேடு ஊராட்சிக்குட்பட்ட அரிகரன் நகர் பகுதியில் ஆரணி பட்டு கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான இடத்தில் நெசவாளர்கள் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு, இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டு, அந்த இடத்தில் நெசவாளர்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர். அப்பகுதியில் அடிப்படை வசதிகள், சிறுவர் பூங்கா, நியாவிலை கடைகள் கட்ட இடம் ஒதுக்கப்பட்டது.
ஆனால், கடந்த 2020ல் அதிமுக ஆட்சியின்போது பல கோடி மதிப்புள்ள அந்த இடத்தை கூட்டுறவு சங்க தலைவர் சம்பத் தனது, ஆதரவாளரான சங்க உறுப்பினர் ஒருவருக்கும், உறவினர்கள் சிலரிடம் பணம் பெற்றுக் கொண்டும் முறைகேடாக விற்றுள்ளார். அதேபோல் கூட்டுறவு சங்கத்தில் உற்பத்தி செய்யப்படும் பட்டு, ஜரிகை உள்ளிட்ட மூலப்பொருட்களையும் முறைகேடாக விற்று மோசடியில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, சென்னை கைத்தறி ஆணையர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், ஆரணி பட்டு கூட்டுறவு சங்க நிர்வாக குழுவை முழுமையாக சென்னை கைத்தறி இணை இயக்குநர் கிரிதரன் கலைத்தார்.
இதையடுத்து, சங்க மேலாண்மை இயக்குநர் மோகன்ராம், சங்கத்தின் நிர்வாக பொறுப்புகளை கவனிக்க தனி செயல் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், 6 மாதத்திற்கு பிறகு மீண்டும் கூட்டுறவு சங்க விதிகளின்படி, தேர்தல் நடத்தி நிர்வாக குழு வை தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாக கைத்தறி இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.