இந்த seborrheic dermatitis என்னும் பூஞ்சை நோயை பொறுத்தவரை ஆண், பெண் என்று எல்லா பாலினத்தவர்களையும் பாரபட்சமின்றி தாக்கும். ஆண்களுக்கு மீசை, தாடியைச் சுற்றியும், காது மடல்களுக்குப் பின்பும் இது தாக்கும். பெண்களுக்கும் உதட்டுப்பகுதியை சுற்றியும், மூக்கு பகுதியின் ஓரங்களிலும் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் புருவங்கள், கண்ணிமைகள் என இதன் தாக்கம் இருக்கும்.
இதற்கு காரணம் அந்தப் பகுதியில் அதிகமாக காணப்படும் எண்ணெய் தன்மை. இது malassezia வகை பூஞ்சைகள் அதிகமாக வளர வழிவகுக்கிறது. இதற்கு இதன் ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை எடுக்க தவறும் பட்சத்தில், பாதிக்கப்பட்ட தோல் பகுதியின் மென்மை தன்மை குறைந்து தடித்து காணப்படுவதுடன், எரிச்சலும் அதிகமாக இருக்கும். அதோடு அந்த தோல் பகுத்து செந்நிறமாகவும் மாறும். ஒரு சிலருக்கு மூக்கின் ஓரத்தில் இது ஏற்பட்டது போன்று இருக்கும். இது எண்ணெய்த்தன்மை அதிகமாக இருக்கும் பட்சத்தில் மீண்டும் மீண்டும் பரவும் தன்மை கொண்டது.
ஒருசிலர் இந்த seborrheic dermatitis குளிர்காலத்தில் மட்டும் தான் வரும் என்று கருதுகின்றனர். ஆனால் அது உண்மையல்ல. பொதுவாகவே நம் சருமத்தில் பூஞ்சைகள் இருக்கும். ஆனால் அவை வளர நம் சருமத்தில் அவற்றுக்கேற்ற ஒரு எண்ணெய்த்தன்மை நிறைந்த சருமநிலை கிடைக்கும்போது, இன்னும் அதிகமாக வளரும்.
பூஞ்சைத்தொற்றை கட்டுக்குள் வைத்திருக்க சிகிச்சைகளும் உண்டு. உதட்டுப்பகுதியை சுற்றி ஏற்படும் அந்த எரிச்சல் உணர்வு, பக்கு இவற்றை 3 வாரங்களில் சரி செய்ய முடியும். ஆனால், தோலில் ஏற்படும் செந்நிறம் குணமாக 3 மாதங்கள் ஆகலாம். இதற்கு மருத்துவர் ஆலோசனைப்படி anti-fungal மருந்துகளை பயன்படுத்தலாம். தடிப்புகள் இருக்கும்பட்சத்தில் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.