ஆந்திரா: வெங்கடேஷ்வரா கோயிலில் கூட்ட நெரிசலில்; பெண்கள், குழந்தைகள் உட்பட 10 பேர் பலி; என்ன நடந்தது?

Share

ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் அருகில் உள்ள காசிபுக்கா என்ற இடத்தில் இருக்கும் வெங்கடேஷ்வரா என்ற கோயிலில் நேற்று ஏகாதசி பண்டிகை கொண்டாடப்பட்டது.

இதையடுத்து கோயிலில் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் கூடியிருந்தனர். அப்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பெண்கள் பூஜை தட்டுக்களுடன் படிக்கட்டுகளில் சாமி தரிசனத்திற்காக நின்று கொண்டிருந்த போது, இந்தச் சம்பவம் நடந்தது.

கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிலிருந்து தப்பிக்கப் போராடினர். ஆனாலும் முடியாமல் அவர்கள் கீழே விழுந்தனர். விழுந்தவர்கள் மீது மற்ற பக்தர்கள் ஏறிச்சென்றனர்.

இதில் படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 10 பேர் உயிரிழந்தனர். கோயில் வளாகத்தில் ஏராளமான பக்தர்கள் மயங்கிய நிலையில் கிடந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடம்
கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடம்

இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. போலீஸார் விரைந்து செயல்பட்டு மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். பெண்கள் ஒருவருக்கொருவர் முட்டி மோதிக் கொண்டு, கூட்ட நெரிசலில் இருந்து தப்பிக்க தடுப்புகளில் ஏறி குதிக்க முயற்சி செய்தனர்.

சில ஆண்கள் அவர்களைப் பாதுகாப்பாக இழுக்க முயற்சி செய்தனர். சில இடங்களில் பெண்கள் அழுதபடி நின்ற காட்சிகள் சமூக வலைத்தளப் பக்கத்தில் வைரலாகி இருக்கிறது.

கோயிலில் இருந்து வரும் வீடியோக்கள் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் பெண்கள் என்பதைக் காட்டுகின்றன. இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிர்ச்சி தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுக்கும்படி மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

சம்பவம் நடந்த கோயில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. அக்கோயிலை தனியார் நிர்வாகம் நடத்தி வருகிறது. ஏகாதசி பண்டிகை குறித்தும், பக்தர்கள் ஆயிரக்கணக்கில் கூடுவார்கள் என்பதும் குறித்தும் கோயில் நிர்வாகம் அரசுக்கோ அல்லது போலீஸாருக்கோ தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் போதிய அளவில் போலீஸார் குவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மாநில அமைச்சர் அட்சன்நாயுடு நேரில் சென்று மீட்புப்பணிகளைப் பார்வையிட்டு வருகிறார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com