“அந்த வெள்ளத்தோடு நாங்களும் அடித்து செல்லப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றே தோன்றுகிறது. எங்கள் நிலை மோசமாகிவிட்டது. வீடு முழுவதும் நீரில் மூழ்கிவிட்டது. எங்கள் உடைமைகள் எதுவுமே இப்போது இல்லை. என்ன செய்வது என்று தெரியவில்லை. எனக்கும் எனது இரண்டு குழந்தைகளுக்கும் மீதமிருப்பது உயிர் மட்டும்தான்” என கௌசியா கண்ணீர் மல்க கூறுகிறார்.
ஆந்திர மாநிலத்திலுள்ள மிகப்பெரிய நகரமான விஜயவாடாவின் ராமகிருஷ்ணாபுரத்தில், புடமேரு நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள சிறிய வீட்டில் வசித்து வருபவர் கௌசியா.
தனது இரண்டு மகள்களுடன் வசித்து வரும் இவர் தையல் வேலை செய்து வருகிறார். வெள்ளம் அவரது குடும்பத்தை நிலைகுலைய செய்துவிட்டது.
தெலங்கானாவில் தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் கம்மம் மாவட்டம் பாலேரு தொகுதியை சேர்ந்த யாகூப் என்பவரின் குடும்பம் முழுவதுமாக அடித்து செல்லப்பட்டது. யாகூப்பின் மகன் ஷெரீப் மட்டும் உயிர் பிழைத்திருக்கிறார். யாகூப் இறந்துவிட்டார். அவரது மனைவி சைதாபி காணாமல் போனார்.
“திடீரென்று வெள்ளம் சூழ்ந்தது. என்ன செய்வது என்று தெரியாமல், நானும், அப்பாவும், அம்மாவும் வீட்டின் மேற்கூறைக்கு மேல் ஏறினோம். மதியம் ஒன்றரை மணி வரை அங்கேயே இருந்தோம். எங்கள் வீட்டின் நான்கு அறைகளும் ஒவ்வொன்றாக இடிந்து விழுந்தன. இறுதியில், நாங்கள் நின்றிருந்த அறையும் இடிந்து விழுந்து, நானும், அம்மாவும், அப்பாவும் தண்ணீரில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டோம்” என்று வெள்ளத்தின் தீவிரத்தை பிபிசியிடம் விளக்கினார் ஷெரீப்.
ஆந்திரா, தெலங்கானாவில் வெள்ளம் ஏற்படுத்திய அழிவுகளை விவரிக்கவே முடியாது. அதே சமயம், தொலைந்து போன உறவுகள், உடைமைகளை இழந்து, வாழ்வாதாரத்தை இழந்து, செய்வதறியாது நிற்பவர்களின் வேதனையையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
ஒரு வாரத்திற்கு பிறகும் விஜயவாடாவில் சில தெருக்களில் முழங்கால் அளவு தண்ணீர் காணப்பட்டது. கம்மம், முன்னேறு ஆற்றில் கடந்த செப்டம்பர் 8-ஆம் தேதி மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
‘மிதக்கும் விஜயவாடா’
பட மூலாதாரம், Getty Images
செப்டம்பர் 2-ஆம் தேதி அதிகாலை 4 மணி. கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் பிரகாசம் தடுப்பணையின் 70 கதவணைகளில் இருந்தும் வெள்ள நீர் பாய்ந்தோடும் சத்தம் விஜயவாடா முழுவதும் கேட்டது.
தடுப்பணை மேல் இருந்து பார்த்தபோது, கிருஷ்ணா நதியின் மீதுள்ள ரயில் பாலத்தை தொடும் அளவுக்கு தண்ணீர் பாய்ந்தோடியது. எந்த நேரம் வேண்டுமானாலும் பாலத்தின் உயரத்தை தொடும் அளவுக்கு தண்ணீர் வேகமாக பாய்ந்தது. இது அங்குள்ள மோசமான நிலையைப் பிரதிபலித்தது.
அந்த பகுதியில் இருந்து, ஏற்கனவே புடமேரு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கிய சிங் நகர் சுற்றுவட்டார பகுதிகளுக்கு செல்ல முயன்றோம்.
ஆனால் எங்கு பார்த்தாலும் தண்ணீர் சூழப்பட்டதால் போலீசார் யாரையும் அங்கு செல்ல அனுமதிக்கவில்லை. நூற்றுக்கணக்கான படகுகளை ஏற்றிச் செல்லும் லாரிகளும் அங்கு காணப்பட்டன. அவை அனைத்தும் வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு உதவுவதற்காக அரசு கொண்டு வந்த படகுகள்.
ஒரு படகின் உதவியுடன் உள்ளே சென்றோம். முதலில் ராமகிருஷ்ணாபுரம் காலனியை அடைந்தோம். அந்த பகுதியில் எந்த வீட்டின் தரை தளத்தையும் எங்களால் பார்க்க முடியவில்லை. வீடுகளின் முதல் மாடி அளவுக்கு வெள்ளத்தில் மூழ்கி இருந்தன.
மக்கள் வீட்டின் இரண்டாவது அல்லது மூன்றாவது மாடிகளில் நின்றபடி உதவி கேட்டுக்கொண்டிருந்தனர். சிங் நகர் மேம்பாலத்தின் உச்சியில் இருந்து பார்த்தபோது, மூன்று லட்சம் மக்கள் வசிக்கும் அந்த பகுதி முழுவதும் ஒரு ஆற்றில் மிதப்பது போல் இருந்தது.
விஜயவாடா வெள்ளத்தில் மூழ்கியதற்கான காரணம் என்ன?
விஜயவாடா தொடர் மழையில் பாதிக்கப்பட்டு வெள்ளத்தில் மூழ்கியதற்கு மூன்று காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
ஆகஸ்ட் மாதத்தில் (30-31-ஆம் தேதி) ஒரே நாளில் 26 செ.மீ. என்ற அளவில், விஜயவாடா வரலாற்றில் இல்லாத அளவில் மழை பதிவாகியுள்ளது. இது எதிர்பாராதது.
ஒருபுறம் இடைவிடாத மழை, மறுபுறம் கிருஷ்ணா நதியின் பெருக்கெடுத்த வெள்ளம், அதே நேரத்தில் புடமேருவில் இருந்து பாய்ந்த 45 ஆயிரம் கன அடி நீர், நகருக்குள் நுழைந்தது என மூன்று காரணங்களால் விஜயவாடாவின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகள் தண்ணீரில் மூழ்கியதாக என்டிஆர் மாவட்ட ஆட்சியர் ஜி.ஸ்ரீஜனா தெரிவித்துள்ளார்.
இந்த மூன்று காரணங்களில் புடமேரு ஆறு கொண்டு வந்த அச்சுறுத்தல் மிகப்பெரியது என்று அவர் விளக்கினார்.
அஜித் சிங் நகர், ஸ்ரீராஜராஜேஸ்வரி பேட்டை, அருணோதயா காலனி, ராமகிருஷ்ணாபுரம், ஜக்கம்பூடி, ஒய்எஸ்ஆர் காலனி, கண்ட்ரிகா, நுன்னா, பயக்காபுரம் போன்ற உள்பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டது.
“மழை நீர்தான் என்று நினைத்தோம். ஆனால், முதல் தளம் வரை வெள்ளம் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. வெள்ள நீர் வந்த போது, அனைவரும் முதல் தளத்தை அடைந்தோம். அதற்கு முன்னதாக, பலர் கவனமாக வீடுகளை பூட்டிவிட்டு வேறு பகுதிகளுக்கு சென்று விட்டனர். அவர்களில் பலர் செல்லும் போது வெள்ளம் வந்து சிக்கி இறந்தனர்.” என டபகோட்லு சென்டர் பகுதியை சேர்ந்த பூர்ணா பிபிசியிடம் தெரிவித்தார்.
துணிக்கடை வைத்திருக்கும் பூர்ணா, அவரது வீடு மற்றும் கடை 7 முதல் 8 அடி தண்ணீரில் மூழ்கியது என்கிறார். சில லட்சங்களை இழந்ததாகவும் பூர்ணா கூறுகிறார்.
இந்த வெள்ளம் பாதித்த பகுதிகள் அனைத்தும் புடமேரு நீர்ப்பிடிப்புப் பகுதியில் அமைந்துள்ளன. இவை தவிர, இப்ராகிம்பட்டினம் அருகே உள்ள சிட்டிநகர், பால் தொழிற்சாலை, ராயனபாடு, பைதூர்பாடு, கவுளூர், கஜூலாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. விஜயவாடா அனல் மின் நிலையத்திற்குள்ளும் தண்ணீர் புகுந்தது.
இப்ராகிம்பட்டினம் அருகே உள்ள கஜூலாப்பேட்டை வெள்ளத்தில் மூழ்கியதால், அப்பகுதி மக்கள் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் கூடாரம் அமைத்து தங்கினர்.
அதே நேரத்தில் 11.43 லட்சம் கனஅடி வெள்ளம் கிருஷ்ணா நதியில் வந்ததால், புடமேறு ஆற்றின் வெள்ளம் கிருஷ்ணா நதிக்குள் நுழைய முடியாமல் திரும்பிச் செல்லத் தொடங்கியது.
ட்ரோன் மூலம் உதவி
ஞாயிற்றுக்கிழமை மதியம் முதல் நிவாரணப் பணிகள் வேகமெடுத்தன.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, சிங் நகர் பகுதிக்கு சென்று நிலைமையை ஆய்வு செய்தார்.
மாநில பேரிடர் மீட்புப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர் மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து விஜயவாடாவில் குவிந்துள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ட்ரோன் மூலம் உணவு, பால் மற்றும் அவசர மருந்துகள் வழங்கப்பட்டன.
பல தெருக்களில் வெள்ள நீர் குறைந்ததால் நிலைமை சற்று சீரானது. மக்கள் வெளியே வரத் தொடங்கினர். அவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்தனர்.
இதனால், லூனா சென்டர், டபகோட்லு சென்டர், கங்கணம்மா குடி தெரு போன்ற பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகள் பூட்டியே காணப்பட்டன. இங்கு தெருக்கள் முழுவதும் காலியாக உள்ளன.
மறுபுறம் அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் உதவிகள் செய்தாலும் அது அனைவரையும் சென்றடையவில்லை. நீரில் மூழ்கிய வீடுகளில் இருக்கும் சிலரால் படகை அணுக முடியவில்லை.
பாதிக்கப்பட்டவர்களில் சிலர் வெள்ளத்தில் இருந்து தங்கள் உறவினர்களை மீட்க டியூப்கள் மற்றும் பிளாஸ்டிக் டயர்களை வாங்கி அவற்றின் உதவியுடன் வெளியே கொண்டு வர முயன்றனர்.
நுன்னா, கண்டிரிகா, பயகபுரம் ஆகிய பகுதிகளில், தங்கள் வீடுகளைச் சுற்றி சடலங்கள் கிடப்பதாகவும், குழந்தைகளுடன் இங்கு வசிப்பது கடினம், எங்களைக் காப்பாற்றுங்கள் என்றும் பலர் சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டுள்ளனர்.
பிபிசி அங்கு சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களிடம் பேசி நிலைமையை அறிந்து கொண்டது.
சடலங்கள் மிதப்பது உண்மை எனவும் அதை அவர்கள் கண்ணால் பார்த்ததாகவும் கந்திரிகா பகுதியை சேர்ந்த சிலர் பிபிசியிடம் தெரிவித்தனர்.
சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோக்களில், நான்கைந்து சடலங்கள் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் ஐம்பதுக்கும் மேற்பட்ட சடலங்களை பார்த்தோம் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, சில கால்நடைகளும் இறந்து கிடந்தன.
பட மூலாதாரம், Getty Images
‘வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை’
செப்டம்பர் 6-ஆம் தேதி வரை விஜயவாடா பகுதியில் 29 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது. குண்டூர் மற்றும் பல்நாடு மாவட்டங்களில் மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
விஜயவாடா அரசு மருத்துவமனை பிணவறை அருகே சடலங்களை கண்டு பலரும் அச்சத்துடன் தங்கள் குடும்பத்தினர் உள்ளனரா என்பதை சோதனை செய்கின்றனர்.
“இங்கே வந்து மூன்று நான்கு நாட்களாகிறது. காணாமல் போன கணவரை பற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். வியாழன் அன்று சிங் நகரில் இருந்து ஒரு சடலம் வந்திருப்பதாக கேள்விப்பட்டதும், நாங்கள் சென்று பார்த்தோம். அவர் என் கணவர்தான்” என்று தாரா சாந்தகுமாரி கண்ணீர் வடித்தார்.
கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்த சாந்தகுமாரியின் வாழ்க்கையை திடீரென வந்த வெள்ளம் புரட்டி போட்டது.
சாந்தகுமாரியின் கணவர் தாரா மகேஷ் பாபு எக்ஸ்ரே டெக்னீஷியனாக பணியாற்றி வந்தார். ஞாயிற்றுக்கிழமை, சிங் நகருக்குச் சென்று திரும்பும் போது, அவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இறந்தார்.
தொடரும் நிவாரணப் பணிகள்
கடந்த வெள்ளிக் கிழமைக்குள் வெள்ளம் குறைந்தது. எனவே ஆந்திர அரசு நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. சுமார் 1,200 வாகனங்களில் அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களை கொண்டு வந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகம் செய்தனர்.
தீயணைப்பு வீரர்கள் 150 பேரை கொண்டு தெருக்களை சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. குப்பை அகற்றும் பணியும், கொசு மருந்து அடிக்கும் பணியும் நடந்தது.
பிரகாசம் தடுப்பணையில் சேதமடைந்த கதவுகளை அதிகாரிகள் சீரமைத்தனர். கிருஷ்ணா நதியிலும் வெள்ளம் குறைந்துள்ளது.
தெலங்கானா மாநிலம் கம்மத்தில் உள்ள வெங்கடேஸ்வரா நகருக்கு செப்டம்பர் 2-ஆம் தேதி பிபிசி சென்றது.
முன்னேறு ஆற்றில் இருந்து 200 மீட்டர் தொலைவில் இது அமைந்துள்ளது. அங்கு ஒரு தெருவில் நடந்து சென்றபோது, ரேக்லாவின் வீட்டின் மேல் ஒரு ஐஸ்கிரீம் வண்டி காணப்பட்டது.
முன்னேறு வெள்ளப்பெருக்கு எந்த அளவிற்கு இருந்திருக்கும் என்பதற்கு இதுவே நேரடி உதாரணம். இங்கு இரண்டு மாடி வீடுகள் கூட நீரில் மூழ்கியதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் முற்றிலுமாக தண்ணீரில் நனைந்து, சேறும் சகதியுமாக இருந்ததால் அவற்றை ரோட்டில் வீசினர்.
அரிசி, டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், கூலர், படுக்கை, மெத்தை, சான்றிதழ், புத்தகம் போன்றவற்றில் தொடங்கி, அனைத்தையும் இழந்து நிற்கின்றனர்.
“இனி எங்களுக்கென்று ஒன்றுமே இல்லை. எல்லாம் தண்ணீரில் நனைந்துவிட்டது. 16 அடி வீடு நீரில் மூழ்கியது. பொருள்கள் மட்டுமின்றி உயிர்களும் பலியாகின. இதில் இருந்து மீண்டு வர நான்கைந்து ஆண்டுகள் ஆகும்” என்கிறார் வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்த பாலகிருஷ்ணா.
அங்கிருந்து அருகே உள்ள ரங்கநாயகுலா குட்டா சாலை மற்றும் மோதிநகர் பகுதிகளுக்கும் பிபிசி சென்றது.
அங்குள்ள தெரு முழுவதும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெரிய மரக்கட்டைகளால் நிறைந்திருந்தது. அங்கு வசிக்கும் மக்கள் சேற்றை அகற்றி வீட்டில் உள்ள ஈரமான பொருட்களை ஒவ்வொன்றாக வெளியே கொண்டு வருகின்றனர்.
“திடீரென்று தண்ணீர் வந்தது. அனைத்து பொருட்களும் அடித்து செல்லப்பட்டன. எல்லாம் சரியாகும் என நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம்” என்று மோதி நகரைச் சேர்ந்த ஷேக் பர்சானா கூறினார்.
சாலையில் இருந்து வயல்களுக்குள் அடித்து செல்லப்பட்ட கார்கள்
கடந்த சில ஆண்டுகளில் முன்னெப்போதும் இல்லாத அளவில் முன்னேறு ஆறு பாய்கிறது.
2022ல், அதிகபட்சமாக 30.5 அடி உயரத்தை எட்டிய முன்னேறு, தற்போது 36 அடி உயரத்தில் பாய்கிறது. இந்த தண்ணீர் அனைத்தும் கிருஷ்ணா நதியில் சென்று கலப்பதால், பிரகாசம் தடுப்பணையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
முன்னேறு-வின் பாதிப்பு கம்மம் நகரத்தில் மட்டுமின்றி ஆந்திராவின் மகாபூபாபாத் மற்றும் என்டிஆர் மாவட்டங்களிலும் இருந்தது.
விஜயவாடா – ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் நந்திகம் அருகே ஐதாவரம் என்ற இடத்தில் முன்னேறு ஆற்று வெள்ளத்தில் கார்கள் அடித்துச் செல்லப்பட்டன. வாகனத்தில் இருந்த அனைவரும் பத்திரமாக தப்பினர். சில வாகனங்கள் சுமார் 500 மீட்டர் தூரம் அடித்து செல்லப்பட்டு வயல்வெளிகளில் சிக்கின.
கனமழை காரணமாக பாலேறு நீர்த்தேக்கம் நிரம்பியது. நீர்த்தேக்கத்தின் கொள்ளவு 2.5 டிஎம்சியை தாண்டியதால் அணையில் இருந்து நீர் நிரம்பி வழிந்தது.
இதனால் கூசுமஞ்சி-நாயக்கன் குடேம் இடையே கடந்த செப்டம்பர் 1-ம் தேதி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில்தான் யாகூப்பின் குடும்பம் அடித்து செல்லப்பட்டது.
நாயக்கன் குடேமில் உள்ள பெட்ரோல் பம்ப் வெள்ளத்தில் மூழ்கியதால் அது இருந்த தடயமே இல்லாமல் இருந்தது.
பட மூலாதாரம், FB/revanthofficial
‘‘எங்களுடைய நாலு ஏக்கரில் நெல் நடவு செய்தேன். வெள்ளத்தில் சகதிகள் அடித்து வரப்பட்டு நிலங்களில் குவிந்தது” என்று கம்மம் மாவட்டம் நாயக்கன் குடேமை சேர்ந்த வெங்கடேஸ்வரலு பிபிசியிடம் கூறினார்.
விளைநிலங்களில் சேறுடன் சகதிகள் அடித்து வரப்பட்டதால், அதை அகற்றுவது விவசாயிகளுக்கு சவாலாக உள்ளது.
அரசின் முதற்கட்ட மதிப்பீட்டின்படி, தெலங்கானாவில் சுமார் 4.15 லட்சம் ஏக்கரில் பயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது.
பயிர்களை இழந்தவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்தார்.
தெலங்கானா, ஆந்திராவுக்கு பெரும் இழப்பு
கனமழை மற்றும் வெள்ள சேதம் குறித்து மத்திய அரசுக்கு முதற்கட்ட அறிக்கை அனுப்பப்பட்டு, முதற்கட்ட அறிக்கையின் மூலம் மத்திய அரசிடம் ரூ. 6,880 கோடி கேட்டுள்ளதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
தெலங்கானாவில் ரூ.5,438 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அரசு முதற்கட்டமாக மதிப்பிட்டுள்ளது. இதற்கான அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 4.15 லட்சம் ஏக்கர் பயிர்கள் சேதம் அடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.