ஜகார்த்தா: நடப்பு ஆசிய ஹாக்கி கோப்பை தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது இந்திய அணி. கோல்கள் வித்தியாசத்தில் மலேசியா மற்றும் தென் கொரிய அணிகள் இறுதிக்கு முன்னேறியுள்ளன.
இந்தோனேசிய நாட்டில் கடந்த 23-ஆம் தேதி ஆடவர் ஆசிய ஹாக்கி கோப்பை – 2022 தொடர் தொடங்கியது. இந்தத் தொடரில் நடப்பு சாம்பியனான இந்தியா உட்பட மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. முதல் சுற்றில் இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்திருந்தது. கோல்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது இந்தியா.
இரண்டாவது சுற்றில் மூன்று போட்டிகளில் விளையாடி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வென்றது இந்தியா. இந்நிலையில், கோல்கள் வித்தியாசத்தில் மலேசியா மற்றும் தென் கொரியா இறுதிக்கு முன்னேறியுள்ளன. இந்தியா அந்த வாய்ப்பை இழந்தது. இப்போது மூன்றாவது இடத்திற்கான ஆட்டத்தில் ஜப்பானுக்கு எதிராக விளையாட உள்ளது இந்தியா.
இரண்டாவது சுற்றில் ஜப்பான் அணியை வீழ்த்தி இருந்தது இந்தியா. மலேசியா (3-3) மற்றும் தென் கொரிய (4-4) அணிகளுக்கு எதிரான ஆட்டம் சமனில் முடிந்தது.