பிரிஸ்பன்: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள அஸ்வினின் அயலக செயல்பாடு குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரா கருத்து தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் அஸ்வின் இடம்பெற்றிருந்தார். இத்தொடரின் முதல் மூன்று போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இதில் இரண்டாவது போட்டியில் மட்டுமே ஆடும் லெவனில் அஸ்வின் வாய்ப்பு பெற்றார். இந்நிலையில், தொடரின் பாதியிலேயே அவர் ஓய்வு பெற்றுள்ளார். அதில் தனக்கு எந்தவித வருத்தமும் இல்லை என அஸ்வின் தெளிவுபடுத்தியுள்ளார்.
“வெளிநாட்டு தொடர்களில் அஸ்வினின் செயல்பாடு குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது. சொந்த மண்ணில் பெரும்பாலான நேரங்களில் அவர் மூன்று, நான்கு மற்றும் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்துவார். ஆனால், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் நடைபெறும் தொடர்களில் இரண்டு அல்லது மூன்று விக்கெட்டுகளை வீழ்த்துவார். அது முக்கிய விக்கெட்டுகளாக இருக்கும்.
அதற்கு சிறந்த உதாரணமாக 2020 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை சொல்லலாம். அதில் ஸ்மித் விக்கெட்டை வீழ்த்தி அவர் அசத்தினார். இது ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்துவது குறித்து அல்ல. அந்த இரண்டு, மூன்று விக்கெட்டுகளை வீழ்த்துவதன் மூலம் அணியில் உள்ள மற்ற பவுலர்களுக்கு அவர் உதவுவார். சில நேரங்களில் நாம் அந்த ரோலை குறைத்து மதிப்பிடுகிறோம்” என புஜாரா தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 106 போட்டிகளில் விளையாடி 537 விக்கெட்டுகளை அஸ்வின் கைப்பற்றியுள்ளார். இதில் 41 போட்டிகள் வெளிநாடுகளில் விளையாடியது. அதில் 154 விக்கெட்டுகளை அஸ்வின் கைப்பற்றியுள்ளார். ஆஸ்திரேலியாவில் மட்டும் 40 விக்கெட்டுகளை அஸ்வின் கைப்பற்றியுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.