பட மூலாதாரம், Getty Images
உலகம் முழுவதும் ஆயிரத்தில் 47 பேருக்கு ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் (non alcoholic fatty liver – NAFLD) பாதிப்பு இருப்பதாக பயோடெக்னாலஜி தகவல்களுக்கான தேசிய மையம் (National Center for Biotechnology Information – NCBI) கூறுகிறது. இது பெண்களை விட ஆண்களிடையே அதிகமாக காணப்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் என்று அழைக்கப்பட்ட வளர்சிதை மாற்ற செயலிழப்பு கல்லீரல் நோய் (MASLD) உடல் பருமன், வகை 2 நீரிழிவு மற்றும் இதய நோய்களுடன் தொடர்புடைய, கல்லீரலில் தேவையற்ற கொழுப்பு சேரும் நிலை. இது கல்லீரல் அழற்சி (MASH), வடுக்கள், மற்றும் சில நேரங்களில் கல்லீரல் புற்றுநோய்க்கும் கூட வழிவகுக்கும் ஒரு தீவிரமான நிலையாக உள்ளது. இது கல்லீரல் புற்றுநோய் அல்லது கல்லீரல் செயலிழப்புக்கு வழிவகுக்கக் கூடும்.
மது அருந்தாதவர்களுக்கும் கூட வளர்சிதை மாற்ற செயலிழப்புடன் தொடர்புடைய இந்த கல்லீரல் நோய் வரலாம் என்பது பலருக்கும் தெரிவதில்லை. இந்த நிலையில், கல்லீரல் நோய் நிபுணர் மருத்துவர் கார்த்திக் மதிவாணன் அதுகுறித்து விரிவாக விளக்குகிறார்.
கல்லீரல் என்ன செய்கிறது?
பட மூலாதாரம், Getty Images
நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் ஒரு குறிப்பிட்ட வேலையை மட்டும் செய்கின்றன. இதயம் இரத்தத்தை பம்ப் செய்கிறது. நுரையீரல் ஆக்சிஜனை எடுத்துக்கொள்கிறது. ஆனால் கல்லீரல் மட்டும் 500-க்கும் மேற்பட்ட வேலைகளை செய்கிறது.
“வேறு எந்த உறுப்பும் இந்த அளவுக்கு சிக்கலான பணிகளை மேற்கொள்வதில்லை. கல்லீரல் இல்லாவிட்டால் உட்கொண்ட உணவு ஜீரணமாகாது; உயிர் வாழ்வதே சாத்தியமில்லை,” என்கிறார் மருத்துவர் கார்த்திக் மதிவாணன்.
ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் எப்படி வருகிறது?

ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் இன்று “வளர்சிதை மாற்ற நோய்க்குழுமம்” என்று வகைப்படுத்தப்படுகிறது. இது ஒரே ஒரு குறிப்பிட்ட காரணத்தால் வருவதில்லை என்கிறது நவீன மருத்துவம்.
மது அருந்துதல், துரித உணவு, அதிக கலோரி உள்ள உணவுகளை உட்கொள்ளுதல், உடல் ரீதியாக பெரியளவில் இயக்கம் இல்லாமலிருப்பது. புகைப்பிடித்தல், தூக்கமின்மை ஆகியவை சேர்ந்து கல்லீரலை படிப்படியாக பாதிக்கின்றன.
“இப்போது இதை நாம் வளர்சிதைமாற்ற நோய்க்குழுமம் என்று அழைக்கிறோம். கல்லீரல் மட்டுமல்ல, இதயம் வரை இதன் தாக்கம் பரவும். நீரிழிவு நோயுடன் கல்லீரல் கொழுப்பும் சேர்ந்து இருந்தால் இதய நோய் வருவதற்கான வாய்ப்பு மேலும் அதிகரிக்கிறது,” என்று எச்சரிக்கிறார் மருத்துவர் கார்த்திக் மதிவாணன்.
நோய்க்கான அறிகுறிகள் என்ன?
கொழுப்பு கல்லீரலின் மிகப்பெரிய சிக்கல் அவை எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்தாது.
சோர்வு, உற்சாகமின்மை போன்றவை காணப்படலாம். ஆனால் இவை தைராய்டு உட்பட வேறு பல நோய்களிலும் தோன்றுவதால் இவற்றை வைத்து மட்டுமே கொழுப்பு கல்லீரல் என்று கூறிவிட முடியாது.
“கொழுப்பு கல்லீரல் இருக்கிறது என்று அறிகுறிகளை வைத்து மட்டுமே கண்டறிவது சாத்தியமில்லை. அதனால்தான் அதிக ஆபத்துள்ள நபர்கள் கட்டாயம் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்,” என்கிறார் மருத்துவர் கார்த்திக்.
பட மூலாதாரம், Getty Images
யாருக்கு அதிக ஆபத்து?
பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பிஎம்ஐ (BMI) 23-க்கு மேல் உள்ளவர்கள், வயிறு பெரிதாக இருப்பவர்கள் (Visceral fat), மது அருந்துபவர்கள் ஆகியோர் கல்லீரல் பரிசோதனையை கட்டாயம் செய்துகொள்ள வேண்டும் எனக் கூறுகிறார் மருத்துவர் அருண்குமார்.
அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மற்றும் ஃபைப்ரோ ஸ்கேன் மூலம் கல்லீரலின் நிலையை துல்லியமாக அறிய முடியும் என்பதால் ஆண்டுக்கு ஒரு முறை இந்த பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு அவர் அறிவுறுத்துகிறார்.
இதனை பயோடெக்னாலஜி தகவல்களுக்கான தேசிய மையம் (NCBI) வெளியிட்ட ஆய்வறிக்கையும் உறுதிப்படுத்தியுள்ளது.
“ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் என்பது நீரிழிவு நோய், உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம் அல்லது இடது வென்ட்ரிக்கிள் சுவர் தடிமன் அதிகரிப்பு உள்ள நோயாளிகளில் ஒரு பொதுவான இணை நோயாக கண்டறியப்பட்டுள்ளது ” என அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்லீரல் கொழுப்பு ஆபத்தான நிலைக்கு போனால் என்ன ஆகும்?
கல்லீரல் கொழுப்பைக் கண்டுகொள்ளாமல் விட்டால், நார்த்திசு மாற்றத்துக்கு (Fibrosis) வழிவகுக்கும். அதன் அடுத்த நிலையான சிரோசிஸ் நிலை வந்தால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே வழி என்கிறார் மருத்துவர் கார்த்திக்.
தற்போது அறுவை சிகிச்சை தொழில்நுட்ப தோல்வி விகிதம் 5 சதவிகிதத்திற்கும் குறைவாக உள்ளது. ஆனால் அறுவை சிகிச்சைக்குப் பிறகான தொற்றுநோய் அபாயம் 15 முதல் 20 சதவிகிதம் வரை நீடிக்கிறது. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பற்றிய அச்சம் தேவையில்லை என்று கூறும் அவர், அந்த அபாய நிலைக்குச் செல்லாமல் தவிர்க்க கல்லீரலை ஆரோக்கியமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார்.
கல்லீரலை ஆரோக்கியமாக வைக்க என்ன செய்யலாம்?
பட மூலாதாரம், Getty Images
கல்லீரல் ஆரோக்கியத்துக்கு சரியான உணவுப் பழக்கவழக்கம் மிக அவசியம் என வலியுறுத்தும் மருத்துவர் கார்த்திக் 20 வயதில் சாப்பிட்டதை 50 வயதிலும் சாப்பிட முடியாது, வயதாக வயதாக வளர்சிதைமாற்ற வேகம் கணிசமாக குறைகிறது என்கிறார்.
1,500 கலோரி மட்டும் தேவைப்படும் நேரத்தில் 3,000 கலோரி சாப்பிட்டால், மிகுதியான கலோரிகள் கொழுப்பாக மாறி கல்லீரலில் படிகின்றன. அது மட்டுமல்ல, வயிற்றைச் சுற்றியும் உள் உறுப்புகளிலும் கொழுப்பு படிய தொடங்கும்.
“100 கலோரி எரிக்க ஜிம்மில் எவ்வளவு கஷ்டப்படுகிறோம். ஆனால் சாலையோரம் ஒரு சின்ன இனிப்பு சாப்பிட்டாலே 100 கலோரி நம் உடலில் சேர்ந்துவிடும். நாம் சாப்பிடுவதை உணர்வுடன் கவனித்து சாப்பிடும் பழக்கத்தை வளர்த்துக் கொள்வது அவசியம்,” என்கிறார் அவர்.
“காய்கறிகளை அதிகமாகவும் சாதத்தை குறைவாகவும் சாப்பிட வேண்டும். வெள்ளை சர்க்கரை, மைதா போன்ற எளிய மாவுச்சத்துகளை விட்டு கைக்குத்தல் அரிசி, கோதுமை போன்ற சிக்கலான மாவுச்சத்துகளை தேர்ந்தெடுக்க வேண்டும். ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்த உணவுகளை தினசரி எடுத்துக்கொள்வதும் கல்லீரலை பாதுகாக்கும்.
40 வயதை நெருங்கும்போது, இன்னும் அதிக எடை கூடாமல் பார்த்துக் கொள்வதும் ஆரோக்கியமான உணவு சாப்பிடுவதும் மிகவும் அவசியமாகிறது. உணவை உணர்வுடன் கவனித்து சாப்பிடும் பழக்கம் மட்டுமே கல்லீரலை நீண்ட நாள் ஆரோக்கியமாக வைக்கும்,” என்று வலியுறுத்துகிறார் மருத்துவர் கார்த்திக் மதிவாணன்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு