அரிசி சாதத்தின் மீதுள்ள காதலை குறைத்தது எப்படி? – இல்லத்தரசியின் இனிய போராட்டம் – 2 | My Vikatan | My vikatan article about diabetes diet

Share

நான் அடுப்படியில் பறந்து கொண்டிருக்க, அவர் நான் தரும் ஒரு டீ காஃபி அல்லது கொஞ்சம் நீராகாரம் அருந்தி விட்டு சுத்தமாக ஆய்ந்து வைத்துச் செல்வார். பருப்புக் கீரை போன்ற வேறு வேறு கீரை வகைகளின் பயன் பாட்டையும் அவரே எனக்கு கற்றுக் கொடுத்தார். அவரால் வர முடியாது போன பிறகு வேறு ஒருவர் இதே போல உதவினார். ஆய்வதற்கு அவருக்குக் கொடுத்த பணத்தை விட நான் சேமித்த நேரத்தின் மதிப்பு பலப்பல மடங்கு பெரிதாக இருந்தது.

கீரைக் கடையலையும் ஒவ்வொருவரும் அவரவர் வழிப்படி செய்வார்கள் அல்லவா? அவற்றைக் கேட்டுக் கேட்டுத் தெரிந்து கொண்டு சுவை மாற்றங்கள் கொண்டு வந்ததால் வீட்டில் எல்லோரும் விரும்பிச் சாப்பிடுகிற உணவாகக் கீரை மாறிப் போனது எனக்கு என் முயற்சியைக் கொஞ்சம் எளிதாக்கியது.

என்றாலும் அரிசி சாதத்தின் மேல் அவருக்கு இருந்த காதலைக் குறைப்பது முழி பிதுங்கியது. எனவே ஆரம்பத்தில் கொஞ்சம் ஏமாத்தி தான் வழிக்குக் கொண்டு வர வேண்டும் என்று தோன்றியது. அதற்கு முதலில் என்ன செய்ய ஆரம்பித்தேன் தெரியுமா? பொறுங்கள்…தொடர்கிறேன்…

அதற்கு முன்…..

மாவைக் கரைத்து உடன் தோசை ஊற்றுவதற்கு பதில் முழு தானியங்களை ஊறவைத்து அரைத்து   அளவாகப் புளிக்க வைத்துப் பயன்படுத்துதல் செரிமானத்துக்கு எளிதாக இருக்கும். (ஃபெர்மென்டேஷன்).    இந்த முறையில் முழு கோதுமையை மட்டும் இரவு ஊற வைத்து மிக்ஸியில் அரைத்து மூடி போட்டு மென்மையான ஊத்தப்பங்கள் செய்யலாம். விரும்பினால் சிறிது அரிசியும் உளுந்தும் சேர்த்துக் கொள்ளலாம். கோதுமை அரை படுவதற்கு தண்ணீர் குறையாமல் தளரச் சேர்த்துக் கொண்டால் அரைப்பது எளிதாக இருக்கும். என்ன….நார்ச்சத்து காரணமாக விரைவில் புளித்து விடும் என்பதால் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்…….அவ்வளவு தான்..

-மீனாக்ஷி மோஹன்
ஹைதராபாத்

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com