`அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி’- எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர் மருமகன் உள்ளிட்டோர் மீது புகார்

Share

சென்னை வெட்டுவாங்கேணி, மகாலட்சுமி தெருவைச் சேர்ந்தவர் மகாராஜா (38). இவர் கடந்த 2-ம் தேதி சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, “நான் மேற்கண்ட முகவரியில் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். அதே பகுதியில் இறைச்சி கடையை கடந்த 14 ஆண்டுகளாக நடத்தி வருகிறேன். கடந்த 2022 அக்டோபரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய பாபு என்பவர் எனக்கு அறிமுகமானார். அப்போது அவர் தன்னை முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியின் மாப்பிள்ளை என்றும் மயிலாப்பூர் எம்.எல்.ஏ வேலு என்னுடைய நண்பர் என்றும் என்னிடம் கூறினார். தொடர்ந்து உங்களுக்கு தெரிந்தவர்கள் யாருக்காவது அரசு வேலை வேண்டும் என்றால் என்னிடம் சொல்லுங்கள், உடனே ஏற்பாடு செய்து தருகிறேன் என்று தெரிவித்தார். அதை உண்மையென நம்பிய நான், என்னுடைய பெரியப்பா மகன்கள், என்னுடைய மனைவி ஆகியோருக்கு பொதுப்பணித்துறையிலும் கிராம நிர்வாக அலுவலர் வேலையையும் வாங்கித் தரும்படி கூறினேன். அதற்கு பாபு கேட்ட பணத்தையும் கொடுத்தேன்.

மோசடி

மோசடி
விகடன்

இதையடுத்து பாபுவின் பேச்சை நம்பி எனக்கு தெரிந்தவர்களிடம் பணம் வாங்கி கொடுத்தேன். இந்த வகையில் ஒரு கோடியே பதிமூன்று லட்சத்து இருபதாயிரத்தை பாபுவிடம் மயிலாப்பூர் சட்டமன்ற அலுவலகத்தில் வைத்து பல தவணைகளாக கொடுத்தேன். அப்போது மயிலாப்பூர் எம்.எல்.ஏ வேலு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தெரிவு குழுவில் உறுப்பினராக இருப்பதால் வேலை கிடைக்கும் என பாபு எனக்கு நம்பிக்கையளித்தார். அவரின் பேச்சை நம்பி பணத்தைக் கொடுத்தேன். பின்னர் வேலையில் சேருவதற்கான நியமன உத்தரவு நகல்களை பாபு என்னிடம் கொடுத்தார். ஆனால் அந்த உத்தரவு போலி எனத் தெரியவந்தது. இதையடுத்து நான் கொடுத்த பணத்தை திரும்ப தரும்படி கேட்டபோது பாபு என்னை தகாத வார்த்தைகளால் பலர் முன்னிலையில் அசிங்கப்படுத்தியதோடு எனக்கு கொலை மிரட்டலும் விடுத்தார். ஏற்கெனவே தமிழ்நாடு நகர்புற வாழ்வித மேம்பாட்டு வாரியம் மூலம் கட்டப்பட்ட 627 வீடுகளை ஒதுக்கீடு செய்து தருவதாகக் கூறி பொதுமக்களிடமிருந்து பாபு, ரூ. 5 கோடி வரை மோசடி செய்ததாக மத்திய குற்றப்பிரிவு போலீஸாரால கைது செய்யப்பட்டவர் என தெரியவந்தது. எனவே அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து தி.மு.க எம்.எல்.ஏ வேலுவிடம் விளக்கம் கேட்டோம். “கட்சிக்காரர்களுடன் பாபு அலுவலகத்துக்கு வருவார். அவர் குறித்த தகவலைக் கேள்விப்பட்டதும் அலுவலகத்துக்கே வர வேண்டாம் என்று சொல்லிவிட்டோம். இந்த மோசடிக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. பாபு கூறியதைப் போல நான் தமிழ்நாடு தேர்வாணையத்தில் உறுப்பினராக இல்லை. இந்த மோசடி குறித்து எனக்கு தகவல் கிடைத்ததும் பாதிக்கப்பட்டவர்களை நான்தான் கமிஷனர் அலுவலகத்துக்கு செல்லும்படி கூறினேன். அதைப் போல காவல்துறையினரிடமும் இந்த மோசடிக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதை தெளிவுப்படுத்திவிட்டேன்” என்றார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com