தேனி: ஜோதிட, ஜாதக, எண் கணித அடிப்படையில் தனது அரசியல் வாழ்வை முன்னெடுத்து செல்லும் முயற்சியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஈடுபட்டு வருகிறார். இதற்காக பரிகார பூஜை உள்ளிட்டவைகளில் தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த அப்பீல் வழக்கில் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக தனது சொந்த ஊரான தேனி மாவட்டம், பெரியகுளத்தில் உள்ள அவரது வீட்டில் தங்கியிருந்தார். ஓபிஎஸ்சுக்கு ஜோதிடம் மற்றும் ஆன்மிகத்தில் அதிக நம்பிக்கை உள்ளது.
இப்போது யாரைச் சந்தித்தாலும் நேரம், காலம், பெயர், ராசி, திசைகளை கணித்து பழகி வருகிறார். யாரிடம் பேசுவது, பழகுவது, எந்த திசையில் செல்வது, எந்த பெயர் உள்ளவரை சந்திப்பது என அனைத்து செயல்களையும் ஜோதிடம் பார்த்தே அவர் செய்கிறார் என பரவலாக பேசப்படுகிறது. தன் கையெழுத்தையும் கொஞ்சம் மாற்றி சாய்த்துப் போடுகிறார் என்கின்றனர் அவருக்கு நெருக்கமான ஆதரவாளர்கள். நீதிமன்ற தீர்ப்பு சாதகமாக வரவேண்டும் என்பதற்காக கடந்த 23ம் தேதி அவர் யாரையும் சந்திக்கவில்லை என்று கூறப்படுகிறது. பெரியகுளம் அருகே உள்ள தனது தோட்டத்திற்கு சென்று காலை முதல் மாலை வரை தனியாக இருந்து அவர் பரிகார பூஜை செய்ததாகவும், தனது வீட்டிலேயே கேரள மாந்திரீகர்களை அழைத்து சில விசேஷ பூஜைகள் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
* திருட்டு வழக்கு கேள்விக்கு ‘கும்பிடு’
இதற்கிடையே, சொந்த ஊரான, பெரியகுளத்தில் இருந்து நேற்று காரில் மதுரை வந்த ஓ.பன்னீர்செல்வம், பகல் 1.30 மணி விமானத்தில் சென்னை புறப்பட்டு சென்றார். சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்த சம்பவம் குறித்து, அவரிடம் செய்தியாளர்கள், ‘‘உங்கள் மீது திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதே’’ என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், கைகளை தலைக்கு மேல் உயர்த்தி பெரிய கும்பிடாக போட்டு விட்டு, பதில் ஏதும் கூறாமல், புன்சிரிப்புடன் சென்று விட்டார்.