மெல்பர்ன்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவியது இந்திய கிரிக்கெட் அணி. இந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய வீரர் விராட் கோலி ஆட்டமிழந்த போது வர்ணனையாளராக இருந்த சைமன் கேட்டிச் தெரிவித்த கருத்து வைரலாகி உள்ளது.
கடைசி நாள் ஆட்டத்தில் 340 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தப் போட்டியில் இந்தியா விரட்டியது. இதில் விராட் கோலி இரண்டாவது இன்னிங்ஸில் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியில் ஆஸி. பவுலர்கள் வீசிய லைனில் மீண்டும் ஒருமுறை தனது விக்கெட்டை கோலி பறிகொடுத்தார். இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அவர் 36 ரன்கள் எடுத்திருந்தார்.
“அரசர் மாண்டு விட்டார். விராட் கோலி தடுமாற்றத்துடன் காணப்படுகிறார். அவரிடம் இருந்து பெரிய இன்னிங்ஸ் எதிர்பார்க்கப்பட்டது. ஆட்டத்தில் தங்களது நிலையை எண்ணி ஆஸ்திரேலியர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றனர். இப்போது அரசர் எனும் அந்த பட்டத்தை பும்ரா கையில் எடுத்துள்ளார்” என நேரலை வர்ணனையில் சைமன் கேட்டிச் தெரிவித்தார். அந்த வீடியோ அதிகளவில் கவனம் பெற்றுள்ளது.