அமைச்சர் கார் மீது செருப்பு வீச்சு சம்பவம் ‘இதை எப்படி அரசியல் பண்ணணும்னு யோசிக்கிறேன்’: பாஜ தலைவர் அண்ணாமலை பேசியதாக பரவும் ஆடியோ வைரல்

Share

மதுரை: மதுரை விமான நிலையத்தில் தமிழக நிதியமைச்சர் கார் மீது செருப்பு வீச்சு சம்பவம் நடந்தபோது, பாஜ மாநிலத்தலைவர் அண்ணாமலை, ‘‘இதை எப்படி அரசியல் பண்ணணும்னு யோசிச்சுக்கிட்டிருக்கேன்…’’ என்று பேசியதாக வெளியான ஆடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மறைந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அரசு சார்பில் அஞ்சலி செலுத்த கடந்த 13ம் தேதி நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன்  மதுரை விமான நிலையத்திற்கு வந்தார்.

அஞ்சலி செலுத்திய பின் அமைச்சர் காரில் ஏறி புறப்பட்டார். அப்போது பாஜ கட்சியினர், அமைச்சரின் கார் மீது செருப்பு வீசினர். இதன்பேரில் வழக்கு பதிந்து, பாஜ மாவட்ட  மகளிரணி தலைவி உள்ளிட்ட 10 பேரை அவனியாபுரம் போலீசார் கைது செய்ததுடன்,  30 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவான சிலரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக பாஜ மாநிலத்தலைவர் அண்ணாமலை, பாஜ மதுரை மாவட்ட தலைவர் மகா சுசீந்திரனுடன் பேசியதாக ஒரு ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆடியோவில், ‘‘அண்ணே.. ஏர்போர்ட்ல இஷ்யூ ஓடிக்கிட்டு இருக்கா.. உங்க ஏரியாவுக்குள்ள எவ்வளவு பேருண்ணே இருப்பாங்க.. (இடையில் அவரு (பிடிஆர்) ரொம்ப மோசமா பேசிட்டாரு என்ற ஒரு குரல் வருகிறது).. ஐநூறு, ஆயிரம் பேர் நிப்பாங்க…  வரச்சொல்லுங்க… எங்கிருந்து கொண்டு போகலாம். ஏர்போர்ட்ல இருந்து வெளியேறுனதும் திருமங்கலம் வழியில தும்மக்குண்டு பக்கத்துல கிராமம் இங்கிருந்து 10 கிலோமீட்டர் இருக்கும்..  திருமங்கலம் டோல்கேட்டா, வேற மாதிரி பண்ணுவோம்.. மாஸ்ஸா பண்ணுவோம்.. கிராண்டா பண்ணுவோம் பிடிஆர் போட்டாரு… மாவட்ட தலைவர் போட்டாருங்கிறது மாதிரி கொண்டு போயிடலாம்.  மாநில தலைவர் மலர் வளையம் வைக்க வந்தாரு. நிறுத்திட்டாங்கன்னு கொண்டு போகலாமா? இதை எப்படி அரசியல் பண்ணனும்னு யோசிச்சிக்கிட்டிருக்கேன்.. அரசியல் பண்ணிடுவோம்’’ என்று அண்ணாமலை பேசுவதாக இருக்கிறது.

 இந்நிலையில், மதுரை நகர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்தில் பாஜ மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் நேற்று புகார் மனு ஒன்றை அளித்தனர். இம்மனுவில், ‘‘நானும், மாநில தலைவர் அண்ணாமலையும் ஒரே காரில் சென்று கொண்டிருந்தோம். அப்போது டாக்டர் சரவணன்,  அண்ணாமலையின் உதவியாளரை போனில் அழைத்து அண்ணாமலையிடம் பேசினார். அப்போது அஞ்சலி செலுத்த நிதி அமைச்சர் அனுமதி மறுப்பதாக கூறினார்.  உரையாடலை  எடிட்டிங், மிமிக்ரி செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பியுள்ளனர்’’ என்று தெரிவித்துள்ளார். மதுரையில் அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜனை அவமதிக்க திட்டம் தீட்டப்பட்டதாக பரவும் இந்த ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com