ஈரானின் அணுசக்தி மையங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல் உலகின் அரசியல், பொருளாதார சூழலில் புதிய சூறாவளியை உருவாக்கியிருக்கிறது.
இந்த தாக்குதல் உலக நாடுகளால் கவனிக்கப்பட ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது அமெரிக்கா பயன்படுத்திய உயர் ரக ஆயுதங்கள் மற்றும் போர் கருவிகள்.
ஒருநாட்டிடம் என்னென்ன போர் கருவிகள், விமானங்கள், குண்டுகள் இருக்கின்றன என்பதை பிற நாடுகள் அறிந்திருந்தாலும், அதன் திறனை, களத்தில் பயன்படுத்தும் தந்திரத்தை கணிப்பது இயலாத ஒன்று.
ஈரான் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா பயன்படுத்திய பயங்கர ஆயுதமான GBU-57 பங்கர் பஸ்டர், டோமாஹாக் (Tomahawk) கப்பல் ஏவுகணைகள் உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியிருக்கின்றன.
இந்த ஆயுதங்கள் ஈரானின் ஃபோர்டோவ், நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய மூன்று அணு சக்தி மையங்களை முற்றிலுமாக அழித்ததாக அறிவித்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். ஆனால் தங்களுக்கு பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படவில்லை என்றது ஈரான் தரப்பு.
இருப்பினும் எல்லைக்குள் வந்து தாக்குதல் நடத்தியுள்ள அமெரிக்காவுக்கு தெஹ்ரான் என்ன பதிலடி கொடுக்கும் என்பதையே அனைவரும் உற்றுநோக்கி வருகின்றனர். ஏனெனில் குறைவான பாதிப்பானாலும் அரசு பதிலடி கொடுக்கவில்லை என்றால் மக்கள் ஆதரவை இழக்க நேரிடும்.