பட மூலாதாரம், Getty Images
இரானை சேர்ந்த எந்தவொரு உயர் அதிகாரியையும் அனுமதிக்காக காத்திருக்காமல் தாக்குவதற்கு இஸ்ரேலிய ராணுவத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறியுள்ளார்.
சில முக்கிய இரானிய தலைவர்களைக் கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு இது வெளிவந்துள்ளது. அவ்வாறு கொல்லப்பட்டவர்களில் இரானின் உயர்மட்டப் பாதுகாப்பு அதிகாரி அலி லாரிஜானி, உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் கதீஃப் மற்றும் சமீபத்திய வாரங்களில் கொல்லப்பட்ட பிற மூத்த அதிகாரிகளும் அடங்குவர்.
“உளவு மற்றும் செயல்பாட்டு வட்டத்திற்கு உட்பட்ட எந்தவொரு மூத்த இரானிய அதிகாரியை கூடுதல் அனுமதியைக் கேட்காமல் கொல்வதற்கு, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் நானும் இஸ்ரேலிய ராணுவத்திற்கு அங்கீகாரம் அளித்துள்ளோம்,” என்று காட்ஸ் கூறினார்.
இந்த அதிகாரிகள் இரானின் அதிகார கட்டமைப்பில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருந்தனர்? இப்போது யார் பொறுப்பில் இருக்கிறார்கள்? இரானின் தலைமை எவ்வாறு மாறியுள்ளது என்பதைப் பற்றி இங்கு எளிமையாகத் தெரிந்துகொள்வோம்.
அயதுல்லா அலி காமனெயி – அதிஉயர் தலைவர் (காலமானவர்)
இரானின் அதிஉயர் தலைவரான அயதுல்லா அலி காமனெயி கொல்லப்பட்ட சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல்களைத் தொடங்கிய முதல் நாளான பிப்ரவரி 28ஆம் தேதியன்றே இந்தச் சம்பவம் நிகழ்ந்ததால், இது மேலதிக ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
காமனெயிக்கு 86 வயதாகியிருந்தது. அவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இரானை ஆட்சி செய்து வந்தார். 1979ஆம் ஆண்டில் ‘இரான் இஸ்லாமிய குடியரசை’ உருவாக்கிய அயதுல்லா ரூஹுல்லா காமனெயிக்கு பிறகு இவர் தலைவராகப் பொறுப்பேற்றார்.
பட மூலாதாரம், IRANIAN LEADER PRESS OFFICE / HANDOUT via Getty
காமனெயி மிகவும் வலிமையான அதிகாரத்தைக் கொண்டிருந்தார். அவர் நாட்டின் தலைவராகவும், ‘புரட்சிகர பாதுகாப்புப் படை’ என்றழைக்கப்படும் சிறப்புப் படை உள்பட, ஒட்டுமொத்த ராணுவத்தின் உச்ச தளபதியாகவும் இருந்தார்.
அவர் ஒரு முழுமையான சர்வாதிகாரி என்று சொல்லிவிட முடியாது. இருப்பினும், தனக்குப் பிடிக்காத எந்தவொரு அரசாங்க முடிவையும் தடுத்து நிறுத்தும் அதிகாரம் அவருக்கு இருந்தது. பொதுப் பதவிகளுக்குப் போட்டியிட யாரை அனுமதிக்கலாம் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரத்தையும் அவரே பெற்றிருந்தார்.
இரானில் இயங்கி வந்த பல வலிமைமிக்க குழுக்களுக்கு இடையே நடுநிலையாகத் தன்னை அவர் நிலைநிறுத்திக் கொண்டார். சில நேரங்களில், சீர்திருத்தவாதிகளுக்கும் பழமைவாதிகளுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளில் தலையிடாமல் விலகி நின்று பார்த்தவாறு, தான் அரசியலுக்கு அப்பாற்பட்டவர் என்பது போல் அவர் நடந்துகொண்டார்.
ஆனால் உண்மையில், தனக்கு எதிராக ஒரு வலிமையான எதிர்க்கருத்து அல்லது எதிர்ப்பு சக்தி வளர்வதை காமனெயி ஒருபோதும் அனுமதித்தது இல்லை. அதேபோல, தான் ஏற்றுக் கொள்ளாத கொள்கைகள் எதுவும் நடைமுறைக்கு வருவதையும் அவர் அனுமதிக்கவில்லை.
மொஜ்தபா காமனெயி – அதிஉயர் தலைவர் (உயிருடன் இருப்பவர்)
பட மூலாதாரம், NurPhoto via Getty Images
கடந்த மார்ச் 8ஆம் தேதியன்று, தனது தந்தைக்குப் பிறகு அடுத்த தலைவராக அறிவிக்கப்பட்டதில் இருந்து, மொஜ்தபா காமனெயி பொதுவெளியில் தென்படவில்லை. மேலும் அவரைச் சித்தரிக்கும் எந்தவொரு புகைப்படமோ அல்லது காணொளியோ வெளியிடப்படவில்லை.
பிப்ரவரி 28 அன்று தெஹ்ரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் புதிய அதிஉயர் தலைவர் “காயமடைந்ததாகவும், அநேகமாக முகம் சிதைந்திருக்கக்கூடும்” என்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்ஸெத், எவ்வித ஆதாரத்தையும் சமர்ப்பிக்காமலே தெரிவித்தார். இந்தத் தாக்குதல்களில் அவரது பெற்றோரும் சகோதரும் கொல்லப்பட்டனர்.
அதிஉயர் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு, மார்ச் 12 அன்று அரசுத் தொலைக்காட்சியில் எழுத்துபூர்வ அறிக்கையாக ஒளிபரப்பப்பட்ட தனது முதல் செய்தியில், பிற நாடுகளைச் சேர்ந்த கப்பல்களுக்கு “ஹோர்முஸ் நீரிணையை” மூடியே வைத்திருக்கப் போவதாக காமனெயி அறிவித்தார். இந்த முடிவு, உலகின் மொத்த எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20 சதவிகிதத்தை முடக்கக்கூடும்.
போரில் கொல்லப்பட்ட மக்களின் “ரத்தத்திற்குப் பழிவாங்கும் கடமையைத்” தனது அரசாங்கம் ஒருபோதும் கைவிடாது என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
மார்ச் 20 அன்று, பாரசீக புத்தாண்டான ‘நவ்ரூஸ்’ பண்டிகையை முன்னிட்டு, அவரிடம் இருந்து வந்த மற்றொரு எழுத்துபூர்வ செய்தியை அரசுத் தொலைக்காட்சி ஒளிபரப்பியது.
நவ்ரூஸ் பண்டிகையின்போது வழக்கமாக கேமரா முன் தோன்றி மக்களிடம் நேரடியாக உரையாற்றும் அவரது தந்தையின் பாணியில் இருந்து இந்தச் செயல்பாடு முற்றிலும் மாறுபட்டதாக அமைந்துள்ளது.
அலி லாரிஜானி – உச்ச தேசிய பாதுகாப்பு சபையின் செயலாளர் (காலமானவர்)
பட மூலாதாரம், COURTNEY BONNEAU/Middle East Images/AFP via Getty Images
மார்ச் 17, 2026 அன்று, 68 வயதான அலி லாரிஜானி, தெஹ்ரானின் பர்திஸ் பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். அவரது மகனும், அவரது துணை அதிகாரிகளில் ஒருவரும் இந்தத் தாக்குதலில் உயிரிழந்தனர். அயதுல்லா அலி காமனெயிக்கு பிறகு கொல்லப்பட்ட மிக மூத்த இரானிய தலைவர் இவர்.
லாரிஜானி ஒரு காலத்தில் இரானிய புரட்சிகர காவலர் படையில் தளபதியாகப் பணியாற்றினார். பின்னர், இரானின் அரசு ஊடகமான ‘இரானிய இஸ்லாமிய குடியரசு ஒளிபரப்பு சேவை’யின் தலைவராகப் பொறுப்பேற்று சுமார் 10 ஆண்டுகள் பணியாற்றிப் பெரும் புகழைப் பெற்றார். 2004ஆம் ஆண்டில், அவர் காமனெயியின் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
கடந்த 2005 முதல் 2007 வரை மேற்கத்திய நாடுகளுடனான பேச்சுவார்த்தைகளில் இரானின் முதன்மை அணுசக்திப் பிரதிநிதியாக லாரிஜானி செயல்பட்டார். ஆனால் அப்போதைய அதிபர் மஹ்மூத் அஹமதிநெஜாத் உடனான கருத்து வேறுபாடுகள் காரணமாக அவர் அந்தப் பதவியை இழந்தார்.
பின்னர் அவர் இரானிய நாடாளுமன்றத்தின் சபாநாயகராகப் பொறுப்பேற்றார். இந்தப் பொறுப்பை அவர் தொடர்ந்து 12 ஆண்டுகள் வகித்தார். இரானிய நாடாளுமன்ற வரலாற்றிலேயே சபாநாயகர் பதவியை இவ்வளவு நீண்டகாலம் வகித்திருப்பது இதுவே முதல்முறை.
உச்ச தேசிய பாதுகாப்பு சபையில் காமனெயியின் பிரதிநிதியாகவும் லாரிஜானி செயல்பட்டு வந்தார். டிசம்பர் 2025, ஜனவரி 2026 ஆகிய மாதங்களில் இரான் முழுவதும் நடைபெற்ற போராட்டங்களின்போது, பசிஜ் துணை ராணுவக் குழு உள்ளிட்ட பாதுகாப்புப் படைகளைக் கொண்டு போராட்டங்களை மிகக் கடுமையாக ஒடுக்கும் நடவடிக்கைகளுக்கு இவரே தலைமை தாங்கியதாகக் கருதப்படுகிறது.
இந்தப் போராட்டங்களின்போது குறைந்தது 6,508 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டதாகவும் 53,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாகவும் மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
அலி ஷம்கானி – இரானிய பாதுகாப்பு மன்றச் செயலாளர் (காலமானவர்)
பட மூலாதாரம், Anadolu via Getty Images
ரியர் அட்மிரல் அலி ஷம்கானி, அயதுல்லா அலி காமனெயியின் நெருங்கிய ஆலோசகராக இருந்தார். இரானின் பாதுகாப்பு மற்றும் அணுசக்தி தொடர்பான முடிவுகளில் அவர் ஒரு முக்கிய நபராக விளங்கினார். மேலும் அவர் இரானின் ஒரே ரியர் அட்மிரலாகவும் இருந்தார். தெஹ்ரான் மீது பிப்ரவரி 28ஆம் தேதி நடந்த தாக்குதல்களில் அவர் கொல்லப்பட்டார்.
இஸ்ரேல், இரான் இடையே ஜூன் 2025இல் நடந்த “12 நாள் போரின்போது” அவரது இல்லத்தின் மீது நடத்தப்பட்ட முந்தைய தாக்குதல்களில் இருந்து அவர் தப்பியிருந்தார்.
கடந்த 1980களில் நடந்த இரான்-இராக் போரின்போது ஷம்கானி புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் உயர்மட்டத் தளபதிகளில் ஒருவராக இருந்தார்.
கடந்த 40 ஆண்டுகளில், அவர் பல முக்கியப் பதவிகளை வகித்துள்ளார். இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், கடற்படைத் தளபதி, உச்ச தேசிய பாதுகாப்பு மன்றத்தின் செயலாளர் ஆகியவை அந்தப் பதவிகளில் அடங்கும்.
சமீபத்திய ஆண்டுகளில், இரானில் மக்கள் போராட்டங்களைக் முடக்குவதிலும் அவர் முக்கியப் பங்காற்றினார்.
முகமது பக்பூர் – ஐ.ஆர்.ஜி.சி தலைமைத் தளபதி (காலமானவர்)
பட மூலாதாரம், Morteza Nikoubazl/NurPhoto via Getty Images
இரானிய அரசு ஊடகங்களின் தகவல்படி, பிப்ரவரி 28 அன்று தெஹ்ரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் மேஜர் ஜெனரல் முகமது பக்பூரும் கொல்லப்பட்டார்.
இவர் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் தளபதியாக 16 ஆண்டுகள் பணியாற்றியிருந்தார்.
இவருக்கு முன்பிருந்த தளபதியான ஹுசைன் சலாமி, “12 நாள் போரில்” கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, முகமது பக்பூர் ஐ.ஆர்.ஜி.சி-யின் தலைமைத் தளபதியாகப் பதவி உயர்வு பெற்றார்.
மசூத் பெசெஷ்கியான் – அதிபர் (உயிருடன் இருப்பவர்)
பட மூலாதாரம், IRANIAN PRESIDENCY / HANDOUT via Getty
மசூத் பெசெஷ்கியான் ஒரு சீர்திருத்த தலைவர் ஆவார். இவர் 2024ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி இரானின் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார். தேர்தலுக்கு முன்பு, 12 மதகுருக்கள் மற்றும் சட்ட வல்லுநர்களைக் கொண்ட குழுவான கார்டியன் கவுன்சிலால் அவர் அங்கீகரிக்கப்பட்டார்.
அவருக்கு 71 வயது. அவர் முன்பு ஒரு இதய மருத்துவராக இருந்தார். அவர் இரானின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார்.
பெசெஷ்கியான் இரானின் ஒழுக்கக் காவலர்களை விமர்சித்துள்ளார். நாட்டில் “ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை” ஏற்படுத்தவும் உலகில் இருந்து இரானின் “தனிமைப்படுத்தலுக்கு” ஒரு முடிவைக் கொண்டு வரவும் உறுதியளித்ததைத் தொடர்ந்து அவர் பரவலாகப் பேசுபொருளானார்.
மார்ச் 11 அன்று, அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “பிராந்தியத்தில் அமைதிக்கான இரானின் உறுதிப்பாட்டை” மீண்டும் வலியுறுத்துவதாகத் தெரிவித்தார்.
ஐந்து நாட்களுக்குப் பிறகு, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச ஆதரவைக் கோரினார். “இந்தப் படையெடுப்பை சர்வதேச சமூகம் கண்டிக்க வேண்டும், படையெடுப்பாளர்களை சர்வதேச சட்டங்களை மதிக்கச் செய்ய வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று அவர் குறிப்பிட்டார்.
முகமது பாகர் காலிபாஃப் – இரானிய நாடாளுமன்ற சபாநாயகர் (உயிருடன் இருப்பவர்)
பட மூலாதாரம், Morteza Nikoubazl/NurPhoto via Getty Images
முகமது பாகர் காலிபாஃப் இரான் நாடாளுமன்ற சபாநாயகர் ஆவார். அவர் ஒரு காலத்தில் புரட்சிகர பாதுகாப்புப் படையில் உறுப்பினராக இருந்தார். ஆனால் இப்போது அவர் சாதாரண குடிமக்களின் உடையணிகிறார். இருப்பினும், அவர் வலுவான, கண்டிப்பான கருத்துகளைக் கொண்டவராக அறியப்படுகிறார். அதோடு அவர் அரசாங்கத்தை வெளிப்படையாக ஆதரிக்கிறார்.
ஒரு பயிற்சி பெற்ற விமானியான அவர், மிகுந்த லட்சியவாதியாகவும் அறியப்படுகிறார். மேலும் இரானின் அதிபர் ஆவதற்கு நான்கு முறை முயற்சி செய்துள்ளார்.
இரானின் போர் முயற்சிகளை வழிநடத்துவதில், 64 வயதான இந்தத் தலைவர், தற்போது ஒரு முக்கியப் பங்கை வகிப்பதாக நம்பப்படுகிறது.
இரானின் எரிசக்தி வசதிகள் மீதான தாக்குதல்களுக்குப் பிறகு அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “கண்ணுக்குக் கண் என்ற கணக்கு அமலுக்கு வந்துள்ளது. ஒரு புதிய கட்ட மோதல் தொடங்கியுள்ளது,” என்று எழுதினார்.
செவ்வாய்க்கிழமை, மார்ச் 24ஆம் தேதியன்று, அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தைகள் குறித்த செய்திகள் பற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை. மேலும், நிதி மற்றும் எண்ணெய் சந்தைகளைக் கையாள்வதற்கும் அமெரிக்காவும் இஸ்ரேலும் சிக்கியுள்ள சகதியில் இருந்து தப்பிப்பதற்கும் போலிச் செய்திகள் பயன்படுத்தப்படுகின்றன,” என்று கூறினார்.
மேலும் அவர், “ஆக்கிரமிப்பாளர்களுக்கு முழுமையான, வருத்தமளிக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று இரானிய மக்கள் கோருகின்றனர். இந்த இலக்கு எட்டப்படும் வரை, அனைத்து இரானிய அதிகாரிகளும் தங்கள் உன்னத தலைவருக்கும் மக்களுக்கும் உறுதுணையாக நிற்பார்கள்,” என்றும் தெரிவித்தார்.
கோலம்ரேஸா சுலைமானி – பசீஜ் தளபதி (காலமானவர்)
பிரிகேடியர் ஜெனரல் தரத்திலான கோலம்ரேஸா சுலைமானி, பசீஜ் படையின் தலைவராகப் பணியாற்றினார். இரானிய அரசு ஊடகங்களின் தகவல்படி, மார்ச் 17ஆம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய தாக்குதல்களில் இவர் கொல்லப்பட்டார்.
அஹ்மத்-ரேஸா ரடான் – காவல்துறைத் தலைவர் (உயிருடன் இருப்பவர்)
பட மூலாதாரம், Morteza Nikoubazl/NurPhoto via Getty Images
பிரிகேடியர் ஜெனரல் தரத்தில் இருப்பவரான அஹ்மத்-ரேஸா ரடான், இரானின் காவல்துறை தலைவராகப் பொறுப்பு வகிக்கிறார். கடுமையான சமூக விதிமுறைகளை அமல்படுத்துவதற்கும், போராட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் இவரே பொறுப்பாவார்.
கடந்த 2023ஆம் ஆண்டில், இவர் “நூர் திட்டம்” என்ற ஒன்றை அறிமுகப்படுத்தினார். ஹிஜாப் தொடர்பான விதிமுறைகளை மீறும் பெண்களைக் கண்டறிந்து தண்டிப்பதற்கு இந்தத் திட்டம் கேமராக்கள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தண்டனைகளில், வாகனங்களைப் பறிமுதல் செய்தல், வணிக நிறுவனங்களை மூடுதல் ஆகியவையும் அடங்கும்.
மிகச் சமீபத்தில், போராட்டங்களுக்கு எதிராக ரடான் மிகவும் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். போர் தொடங்கிய காலகட்டத்தில், “எதிரியின் தூண்டுதலின் பேரில்” எவரேனும் வீதிகளில் இறங்கிப் போராடினால் தனது படைகள் அவர்களையும் ஓர் “எதிரியாகவே” கருதி நடத்தும் என்று அவர் எச்சரித்தார்.
கோலம்ஹொசைன் மொஹ்சேனி எஜெய் – தலைமை நீதிபதி (உயிருடன் இருப்பவர்)
கோலம்ஹொசைன் மொஹ்சேனி எஜெய் இரானின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பு வகிக்கிறார். இவர் தனது கடுமையான நிலைப்பாடுகளுக்காக அறியப்படுகிறார். போருக்கு முந்தைய காலகட்டத்தில் நடந்த போராட்டங்களின்போது வன்முறைச் செயல்களில் ஈடுபட்டதாகக் கண்டறியப்படுவோரிடம், “எவ்வித இரக்கமும் காட்டப்படாது” என்று ஜனவரி மாதம் அவர் எச்சரித்திருந்தார்.
எஸ்கந்தர் மொமேனி – உள்துறை அமைச்சர் (உயிருடன் இருப்பவர்)
பிரிகேடியர் ஜெனரல் எஸ்கந்தர் மொமேனி, ஆகஸ்ட் 2024 முதல் இரானின் உள்துறை அமைச்சராகப் பணியாற்றி வருகிறார். இரானிய புரட்சிகர காவலர் படையுடனும் இரானின் காவல்துறை அமைப்புடனும் இவருக்கு வலுவான தொடர்புகள் உள்ளன.
இஸ்மாயில் கானி – ஐ.ஆர்.ஜி.சி குட்ஸ் படைத் தளபதி (உயிருடன் இருப்பவர்)
பட மூலாதாரம், Fatemeh Bahrami/Anadolu via Getty Images
பிரிகேடியர் ஜெனரல் இஸ்மாயில் கானி, 2020ஆம் ஆண்டு முதல் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் குட்ஸ் படையின் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார். இரானிய ஊடகங்கள் இவரை “லெவன்ட் பிராந்தியத்தின் தளபதி” என்று குறிப்பிடுகின்றன.
கடந்த 2012ஆம் ஆண்டில், அமெரிக்க கருவூல துறை இவர் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது. மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க பிராந்தியங்களில், குறிப்பாக காம்பியாவில், செயல்படும் குட்ஸ் படை சார்ந்த குழுக்களுக்குப் பணத்தையும் ஆயுதங்களையும் அனுப்புவதில் இவர் ஈடுபட்டதாக அமெரிக்க கருவூல துறை குறிப்பிட்டிருந்தது.
இஸ்மாயில் கதிப் – உளவுத்துறை அமைச்சர் (காலமானவர்)
பட மூலாதாரம், ABEDIN via EPA
இஸ்மாயில் கதிப், 2021ஆம் ஆண்டில் அப்போதைய அதிபர் இப்ராஹிம் ரைசியால் நியமிக்கப்பட்டார். இவர் அயதுல்லா அலி காமனெயி உள்ளிட்ட மூத்த மதகுருமார்களிடம் இஸ்லாமிய சட்டத்தைப் பயின்றவர். மேலும் உளவுத்துறை அமைச்சகம், அதிஉயர் தலைவரின் அலுவலகம் ஆகியவற்றில் முக்கியப் பொறுப்புகளை வகித்தவர்.
மார்ச் 18, 2026 அன்று, இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல் ஒன்றில் இவர் “கோழைத்தனமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்” இரானை “ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்திவிட்டதாக” அதிபர் மசூத் பெசெஷ்கியான் தெரிவித்தார்.
அப்துல் ரஹீம் மௌசவி – இரானிய ஆயுதப் படையின் தலைவர் (காலமானவர்)
பட மூலாதாரம், Anadolu via Getty Images
மேஜர் ஜெனரல் தரத்தில் இருந்த அப்துல் ரஹீம் மௌசவி, பிப்ரவரி 28ஆம் தேதியன்று தெஹ்ரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் கொல்லப்பட்டார்.
இவர் “12 நாள் போரில்” கொல்லப்பட்ட முகமது பாகேரிக்கு பதிலாகப் பொறுப்பேற்று, ஜூன் 12 அன்று இரானின் ஆயுதப் படைகளின் தலைவரானார்.
சாதிக் லாரிஜானி – நலன்சார் மன்றத்தின் தலைவர் (உயிருடன் இருப்பவர்)
சாதிக் லாரிஜானி, அலி லாரிஜானியின் சகோதரர் ஆவார். இவர் நலன்சார் மன்றத்திற்குத் தலைமை தாங்குகிறார். நாடாளுமன்றத்திற்கும் பாதுகாவலர் மன்றத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு எழும் சூழல்களில் இந்த மன்றமே இறுதி முடிவுகளை எடுக்கிறது.
அப்பாஸ் அராக்சி – வெளியுறவு அமைச்சர் (உயிருடன் இருப்பவர்)
பட மூலாதாரம், Karim JAAFAR / AFP via Getty Images
அப்பாஸ் அராக்சி இரானின் வெளியுறவு அமைச்சராக உள்ளார். அவர் ஸ்டீவ் விட்காஃபுடன் தொலைபேசியில் பேசியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், இந்தப் பேச்சுவார்த்தைகள் மிகவும் ஆரம்பக்கட்டத்தில் இருப்பதாகவும் இறுதியானவை அல்ல என்றும் கூறப்படுகிறது.
மார்ச் 15 அன்று இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா உடனான போரில் இரான் “ஒருபோதும் போர் நிறுத்தத்தைக் கோரவில்லை” என்று அராக்சி சிபிஎஸ் நியூஸிடம் கூறினார்.
மேலும் அவர், “இது அதிபர் டிரம்ப் மற்றும் அமெரிக்காவின் விருப்பத் தேர்வுப் போர். நாங்கள் எங்கள் தற்காப்பைத் தொடரப் போகிறோம்” என்றும் குறிப்பிட்டார்.
அஜீஸ் நசீர்சாதே – பாதுகாப்பு அமைச்சர் (காலமானவர்)
பிரிகேடியர் ஜெனரலான அஜீஸ் நசீர்சாதே, இரானின் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார். பிப்ரவரி 28 அன்று தெஹ்ரான் மீதான தாக்குதல்களின்போது அவர் கொல்லப்பட்டார்.
இரானிய தலைவர்களை குறிவைப்பதன் மூலம் சாதித்தது என்ன?
இரானிய அரசாங்கத்தை “திகைக்க வைப்பதும், குழப்பமடையச் செய்வதும்” தான் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் திட்டமாக இருந்தது. போரின் ஆரம்ப நாட்களில், அமெரிக்காவின் உயர்மட்ட ராணுவ தலைவரான டான் கெய்ன் இதைத் தெரிவித்தார்.
ஆரம்பத்தில், இரானிய அரசாங்கத்தை மாற்றியமைக்க விரும்புவதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் பகிரங்கமாகவே அறிவித்தன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் வெளியிட்ட காணொளி ஒன்றில், இரானிய மக்களிடம் “உங்கள் அரசாங்கத்தை நீங்களே கைப்பற்றுங்கள்” என்று அழைப்பு விடுத்தார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் இதேபோன்ற கருத்தைத் தெரிவித்தார். மார்ச் 19 அன்று, இரானிய மக்கள் “சரியான தருணத்தைப் பயன்படுத்தி எழுச்சி பெற வேண்டும்” என்று அவர் அழைப்பு விடுத்தார்.
இருப்பினும், விஷயங்கள் அவ்வளவு எளிமையானவையாக இருக்கவில்லை.
இரானை பொறுத்தவரை, ஒரு “தியாகியாக” (மதத்திற்காகவோ அல்லது நாட்டுக்காகவோ) உயிர்துறப்பது என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கருத்தாக உள்ளது. இதன் காரணமாக, உயர்மட்டத் தலைவர்களின் மரணங்கள் ஓர் இழப்பாகச் சித்தரிக்கப்படாமல், கௌரவமிக்கதாகவும் வலிமைமிக்கதாகவும் முன்னிறுத்தப்படுகின்றன.
உதாரணமாக, அரசு தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஒருவர், அயதுல்லா அலி காமனெயியின் மரணம் குறித்துப் பேசுகையில், அவர் “தியாகம் என்னும் இனிமையான, தூய பானத்தைப் பருகி, உன்னதமான விண்ணுலகப் பேரரசில் இணைந்து கொண்டார்” என்று வர்ணித்தார்.
இரண்டு வாரங்களுக்கும் மேலாகக் கடந்த நிலையில், அலி லாரிஜானியின் மரணம் குறித்துப் பேசுகையில், இரானின் உச்ச தேசிய பாதுகாப்பு சபை பின்வருமாறு குறிப்பிட்டது:
“தியாகிகளின் தூய ஆன்மாக்கள், இறைவனின் நீதிமிக்க ஊழியரும் தியாகியுமான டாக்டர் அலி லாரிஜானியின் தூய்மையாக்கப்பட்ட ஆன்மாவை அரவணைத்துக்கொண்டன. இரானின் முன்னேற்றத்திற்காகவும் இஸ்லாமிய புரட்சிக்காகவும் வாழ்நாள் முழுவக்தும் போராடிய அவர், இறுதியில் தான் நீண்ட காலமாகப் போற்றி வந்த லட்சியத்தை அடைந்தார். இறைவனின் அழைப்புக்குப் பதிலளித்தார். மேலும் சேவைக் களத்தில் தியாகம் என்னும் இனிமையான அருளை கௌரவத்துடன் அடைந்தார்.”
எளிதாகக் கூறுவதெனில், இந்த மரணங்கள் அரசாங்கத்தை பலவீனப்படுத்துவதற்குப் பதிலாக, வலிமை, ஒற்றுமை, தியாகம் ஆகியவற்றை வெளிப்படுத்துவதற்கான ஒரு கருவியாக இரான் அரசால் பயன்படுத்தப்படுகின்றன.
பிபிசி தமிழின் ‘பிரச்னைகளைப் பேசுவோம்’
உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்த பெண்களுக்கோ பாதுகாப்பு தொடர்பாக எங்கள் செய்தியாளர்களுடன் பகிர விரும்பும் தனிப்பட்ட அனுபவம் ஏதேனும் உள்ளதா?
கடந்த 5 ஆண்டுகளில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான நிலைமை மேம்பட்டிருக்கிறதா, மோசமடைந்திருக்கிறதா?
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு