
இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடந்த ஆண்டில் இருந்து கூடுதல் வரி விதிக்கப்பட்டதால் பல்வேறு துறைகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆயத்த ஆடை ஏற்றுமதியில் மட்டும் 6 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஜவுளி துறையினர் கூறுகின்றனர். இந்நிலையில் இந்திய தயாரிப்புகள் மீது 500 சதவிகிதம் வரை வரி விதிக்கும் மசோதாவுக்கு டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இது அமெரிக்காவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு அமலுக்கு வந்தால் தங்கள் நிலைமை சிக்கலுக்குள்ளாகும் என ஜவுளி உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்தியா–அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவுகளை மதிப்பீடு செய்யும் விதமாக, வர்த்தகம் சார்ந்த நாடாளுமன்ற நிலைக்குழு ஜவுளித்தொழில் அமைப்பினரைச் சந்தித்து கருத்துகளைப் பெற்றுள்ளது.
கோவையில் இந்தக் குழுவைச் சந்தித்த ஜவுளித்துறையினர், அமெரிக்காவுக்கான ஏற்றுமதி வரி உயர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்பைச் சரி செய்வதற்கு பருத்தி மீதான இறக்குமதி வரி ரத்து, சந்தை ஊக்கத் திட்டத்தில் 20% மானியம் வழங்குதல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.
தற்போதுள்ள நிலை நீடித்தால் அல்லது வரி மேலும் உயர்த்தப்பட்டால் இங்குள்ள நிறுவனங்கள் இலங்கைக்கு இடம் பெயரும் வாய்ப்பு இருப்பதாகவும் ஜவுளித்தொழில் அமைப்பினர் கூறுகின்றனர்.
ஒரே ஆண்டில் இரட்டிப்பான அமெரிக்க வரி

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டுமென்ற நிர்ப்பந்தத்துடன், இந்தியாவிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கான வரியை கடந்த ஆண்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பல மடங்கு உயர்த்தினார். இதில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் நூல் மற்றும் ஆடைகளுக்கும் இரட்டிப்பாக வரி உயர்த்தப்பட்டது.
கடந்த ஆண்டு ஏப்ரல் 1 முதல், வரியை உயர்த்தி 25 சதவிகிதமாக அமெரிக்கா அறிவித்தது. அப்போதும் ஜவுளி ஏற்றுமதியில் இந்தியாவுடன் போட்டியிலுள்ள நாடுகளில் வியட்நாம் தவிர, வங்கதேசம், கம்போடியா, இலங்கை ஆகிய நாடுகளைவிட நமக்கு வரி குறைவாக இருப்பதாக ஜவுளித்துறையினர் ஆறுதல் அடைந்தனர்.
அமெரிக்க அரசுடனான இந்திய அரசின் பேச்சுவார்த்தையால், இந்த வரி பழைய அளவுக்குக் கொண்டு வரப்படும் எனக் கருதிய நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் 25 சதவிகிதமாக இருந்த வரியை 50 சதவிகிதமாக உயர்த்தினார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.
இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு பல்வேறு பொருட்களும் ஏற்றுமதி செய்யப்படும் நிலையில், மத்திய அரசின் வர்த்தகத்துறை புள்ளிவிவரங்களின்படி, ஆடைகளின் பங்களிப்பு மட்டுமே 47 சதவிகிதம்.
கடந்த 2023ஆம் ஆண்டில் மட்டும் நூல், ஆயத்த ஆடைகள், திரைச்சீலை, படுக்கை விரிப்புகள் உள்ளிட்ட ஆடையல்லாத ஜவுளிப் பொருட்கள் என மொத்தம் ரூ.73 ஆயிரம் கோடி அளவுக்கு, இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஜவுளி ஏற்றுமதி இருந்தது. அதில் ஆயத்த ஆடைகள் மற்றும் நெசவு ஆடைகள் தலா 2.5 பில்லியன் டாலர் அளவிலும், வீட்டு உபயோக ஜவுளிப் பொருட்கள் 2.7 பில்லியன் டாலர் அளவிலும் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தன.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினுடைய புள்ளிவிவரத்தின்படி, திருப்பூரில் ஆண்டுக்கு ரூ.70 ஆயிரம் கோடிக்கு ஆயத்த ஆடைகள் தயாராகின்றன; ரூ.40 ஆயிரம் கோடிக்கு ஏற்றுமதியாகின்றன.
அவற்றில் அமெரிக்காவுக்கு 30% அதாவது ரூ.12 ஆயிரம் கோடி மதிப்பிலான ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டில் ரூ.45 ஆயிரம் கோடிக்கு பின்னலாடைகள் ஏற்றுமதி செய்யப்பட்தாகக் கூறும் இந்த அமைப்பின் துணைத் தலைவர் ராஜ்குமார் ராமசாமி, நாட்டின் மொத்த பின்னலாடை ஏற்றுமதியில் இது 68% என்கிறார்.
இந்தியா மீதான வரி விதிப்பை அமெரிக்கா உயர்த்திய பிறகு, பலகட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் நிலையில், இதுவரை வரி விதிப்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனாலும் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் ஆயத்த ஆடைகளின் அளவில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என்பது மத்திய அரசின் வர்த்தகத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில் தெரிய வந்துள்ளது.
அதிலுள்ள புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு 5 விதமான ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுவதில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இதன் மொத்த மதிப்பு 442 மில்லியன் டாலராக இருந்துள்ளது. அது வழக்கத்தைவிட 4% மட்டுமே குறைவு. அடுத்த மாதத்தில் அந்த அளவு 287 மில்லியன் டாலராக, அதாவது 24% குறைந்தது. அக்டோபரில் 306 மில்லியன் டாலராக (–20%) குறைந்து, நவம்பரில் 358 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
ஏற்றுமதி அளவு குறையாததால் எந்த பாதிப்புமில்லை என்று மத்திய அரசு கருதுவதற்கு வாய்ப்புள்ளதாகக் கூறும் ஜவுளித்துறையினர், அளவு குறையாததன் காரணத்தை விளக்குகின்றனர். இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதியாகும் ஆடைகளுக்கு அங்குள்ள வர்த்தகர்கள்தான் வரி செலுத்தி வருகின்றனர். ஆனால் வரி உயர்வுக்குப் பின் அதையும் தாங்கள் பகிர்ந்து கொள்வதாகக் கூறுகின்றனர் ஜவுளித்துறையினர்.
பட மூலாதாரம், Sakthivel
இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி தற்போது 16–17 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளதாகக் கூறும் இந்திய ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் குழுவின் தலைவர் சக்திவேல், இதில் 30% அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகக் கூறுகிறார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், ”கடந்த ஆண்டில் 50 சதவிகிதமாக வரி உயர்ந்த பிறகு, அமெரிக்க வர்த்தகர்களுக்கு தள்ளுபடி வழங்கி, வரிச்சுமையைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் ஏற்றுமதியாளர்கள் உள்ளனர்” என்றார்.
நீண்டகால வர்த்தக உறவைக் கருத்தில் கொண்டுள்ள அமெரிக்க வர்த்தகர்கள், நம்முடனான உறவைத் துண்டிக்க விரும்பாததே, இப்போதும் ஏற்றுமதி அளவு குறையாமல் இருப்பதற்குக் காரணம் என்கிறார் சக்திவேல்.
இதே கருத்தைக் கூறும் தென்னிந்திய மில்கள் சங்கத்தின் (SIMA) முன்னாள் தலைவர் சுந்தரராமன், அமெரிக்க வர்த்தகர்களுக்கு மாற்றாகப் புதிய வர்த்தகர்களைக் கண்டறியவே 2 ஆண்டுகளாகும் என்கிறார்.
பிபிசி தமிழிடம் பேசிய சுந்தரராமன், ”வழக்கமாக பாதிப்பை விற்பனை அளவு குறைவது, மதிப்பு குறைவது என்று இரு விதமாகக் கணக்கிடுவார்கள். அமெரிக்காவுக்கான ஏற்றுமதி அளவு குறையாததற்குக் காரணம், அமெரிக்க வர்த்தகர்களைக் கைவிடக் கூடாது என்ற இந்திய ஏற்றுமதியாளர்களின் அச்சம்தான். வரி உயர்த்தப்பட்ட 20 நாட்களில் 1000 கோடி ரூபாய் பொருள் முடங்கிவிட்டதாகக் கூறினோம். ஆனால் இப்போது வரை 20% அளவுக்குத்தான் ஏற்றுமதி அளவு குறைந்துள்ளது” என்றார்.
அதற்கான காரணத்தை விளக்கிய அவர், ”அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்த ஆடைகளில் 12% வரை லாபம் கிடைத்து வந்த நிலையில் இப்போது நிலைமையைச் சமாளிப்பதற்கு, விலையில் தள்ளுபடி கொடுத்து, அமெரிக்க வர்த்தகர்களின் வரிச் சுமையையும் ஏற்றுமதியாளர்கள் பகிர்கின்றனர். அதனால் 2% வரை நஷ்டத்துக்கு ஏற்றுமதி செய்கின்றனர். மாற்று சந்தையைக் கண்டறிய 2 ஆண்டுகளாகும் என்பதால் 6 மாதங்கள் வரை இதைத் தாங்கிக் கொள்ளலாம், அதற்குள் நிலைமை சீராகும் என்று நம்பிக் கொண்டிருக்கின்றனர்” என்றார்.
நாடாளுமன்ற குழுவிடம் ஜவுளி அமைப்பினர் கூறியது என்ன?
பட மூலாதாரம், Prabhu Damodaran
ஆனால் அமெரிக்க சந்தையிலிருந்து வரும் மாதங்களுக்கான ஆர்டர்கள் வரத்து இப்போதே குறையத் தொடங்கி விட்டதாகக் கூறுகிறார் இந்திய ஜவுளித்தொழில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன்.
கடந்த டிசம்பரில் குறைந்தபட்சம் 25% வரி கூடுதலாக விதிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் பாதி வரியை ஏற்றுமதி நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டு ஆயத்த ஆடைகளை அனுப்பி வந்ததாகக் கூறும் அவர், பிரச்னை முடிவுக்கு வராததால் புது ஆர்டர்கள் எடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன என்கிறார்.
வரி குறையுமென்ற நம்பிக்கையில் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் இருக்கும் நிலையில், இந்த வரி விதிப்பால் அமெரிக்கா–இந்தியா இடையிலான வர்த்தக உறவை மதிப்பீடு செய்வதற்காக, வர்த்தகம் தொடர்பான துறைகள் சார்ந்த நாடாளுமன்ற நிலைக்குழு, இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் ஏற்றுமதியாளர்களைச் சந்தித்து கருத்துகளைக் கேட்டு ஆய்வு நடத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக குழுவின் தலைவர் டோலா சென் தலைமையில் 12 உறுப்பினர்களைக் கொண்ட குழு, கோவைக்கு கடந்த ஜனவரி 8ஆம் தேதி வருகை தந்தனர். அப்போது கோவை, திருப்பூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் உள்ள பல்வேறு ஜவுளி அமைப்பினரும் குழுவினரைச் சந்தித்து, தொழில் நிலையை விளக்கி மனுவும் கொடுத்தனர்.
திருப்பூர் ஆயத்த ஆடைத்துறையினர் உள்ளிட்ட ஜவுளி ஏற்றுமதியாளர்கள், ”இந்த வரி விதிப்பு தொடரும்பட்சத்தில் ஏற்றுமதியாளர்களின் லாபம் குறைந்து, ஆர்டர்கள் ரத்து செய்யப்படும். உற்பத்தி குறையும்; அதன் தொடர்ச்சியாக வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் அபாயமுள்ளது” என்கின்றனர்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் சார்பில் பேசிய அமைப்பின் துணைத் தலைவர் ராஜ்குமார் ராமசாமி, இந்தத் துறையால் மட்டும் நேரடியாக 10 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெறுவதாகக் குறிப்பிட்டார்.

இந்திய ஜவுளி தொழில் கூட்டமைப்பு (CITI), தென்னிந்திய மில்கள் சங்கம் (SIMA), பருத்தி ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக்குழு (Cotton Textiles Export Promotion Council) போன்ற பல்வேறு அமைப்புகளின் சார்பில் பேசிய நிர்வாகிகள் பலரும், இத்துறையில் இந்தியாவின் போட்டி நாடுகளாக இருக்கும் வியட்நாம், வங்கதேசம், துருக்கி போன்றவற்றுக்கு குறைந்த அளவிலான வரி விதிப்பு இருப்பதைச் சுட்டிக்காட்டினர்.
இதனால் 13 அமெரிக்கா டாலர் மதிப்பிலான ஓர் ஆடையை அமெரிக்காவில் இறக்குமதி (FOB– Freight on Board) செய்யும்போது, மற்ற 3 நாடுகளையும்விட, இந்திய ஆடையின் மதிப்பு 4 டாலர் வரை அதிகமாவதையும் அவர்கள் விளக்கினர்.
அமெரிக்கா வரியை உயர்த்திய பின்பு, ஜவுளித்துறையினரிடம் சிஐடிஐ (Confederation of Indian Textile Industry) நடத்திய ஒரு கருத்துக் கணிப்பில், இந்த நிதியாண்டின் முதல் காலாண்டை ஒப்பிடுகையில், ஜூலை–செப்டெம்பர் காலாண்டின் வருவாய் 50% குறைந்திருப்பதாக 33% பேரும், மத்திய அரசின் நிவாரணம் போதியதாக இல்லை என்று 65% பேரும் கூறியுள்ளதாகக் குழுவிடம் விளக்கப்பட்டது.
தற்போதுள்ள நிலைமை சீராகும் வரை, ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய அரசு சில சலுகைகளை வழங்கினால் மட்டுமே தொழிலில் நிலைத்து நிற்க முடியுமென்று ஜவுளி அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
நாடாளுமன்றக் குழுவிடம் ஜவுளி அமைப்பினர் வலியுறுத்திய கோரிக்கைகள்
- வட்டி மானியத் திட்டத்தின் கீழ் உள்ள ரூ.50 லட்சம் என்கிற உச்ச வரம்பை நீக்கி, அதன் பயனை அனைத்து ஏற்றுமதியாளர்களுக்கும் வழங்க வேண்டும்.
- பருத்திக்கு விதிக்கப்பட்டுள்ள 11% இறக்குமதி வரியை நிரந்தரமாக முற்றிலும் ரத்து செய்ய வேண்டும்.
- அவசர கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ் 30% அடமானமில்லா கடன்களை வழங்க வேண்டும்.
- பருத்தி துணி தயாரிப்புகளுக்கான ட்யூட்டி டிராபேக் உயர்த்தப்பட வேண்டும்.
இதுபற்றி பிபிசி தமிழிடம் விளக்கிய ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு தலைவர் சக்திவேல், ”வட்டி மானியத் திட்டத்தின் உச்சவரம்பை நீக்கி, அந்தப் பயனை அனைத்து ஏற்றுமதியாளர்களுக்கும் வழங்குவது அவசியம். வரி பிரச்னை தீரும் வரை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் ஏற்றுமதியாளர்களுக்கு EXIM Scrips வடிவில் 20% சந்தை ஊக்கத்திட்டத்தில் மானியம் வழங்க வேண்டுமென்பது முக்கிய கோரிக்கை” என்றார்.
அமெரிக்கா வரிவிதிப்பால் இந்தியாவில் வேலையிழப்பு ஏற்படுமா?
பட மூலாதாரம், Subramaninam
இந்த நடவடிக்கைகளை மத்திய அரசு விரைவாக எடுக்க வேண்டுமென்பதை, நாடாளுமன்றக் குழுவினரிடம் அனைத்து ஜவுளித் துறையினரும் ஒருமித்து வலியுறுத்தினர். நூல் முதல் ஆடை வரை ஒட்டு மொத்த ஜவுளித்துறையும் பாதிக்கப்பட்டு இருப்பதால், மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிடில் இந்த ஆண்டில் நிலைமை மேலும் கடினமாகிவிடுமென்று சக்திவேல் தெரிவித்தார்.
அமெரிக்காவின் வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள ஏற்றுமதி இழப்பு குறித்து பிபிசி தமிழிடம் விளக்கிய திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் கே.எம்.சுப்பிரமணியம், ”வரி விதிப்புக்குப் பின் 3 மாதங்கள் கழித்தே பாதிப்பு தெரிய ஆரம்பித்துள்ளது. திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு மட்டும் இதுவரை 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது” என்றார்.
அதனால் அமெரிக்கா ஏற்றுமதியாளர்களுக்கு குறைந்தபட்சம் 15% வரையிலும் எக்ஸிம் ஸ்கிரிப்ஸ் மானியம் வழங்குவது அவசியமென்று வலியுறுத்திய அவர், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு மட்டும் வழங்கியுள்ள வட்டிச் சலுகையை எல்லாவிதமான ஏற்றுமதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டுமென்றும் மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.
ஜவுளித்துறையினரின் கோரிக்கைகள் அறிக்கையாகத் தயாரித்து, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று மத்திய குழுத் தலைவர் டோலா சென் கூறியதாகப் பல்வேறு அமைப்பினரும் தகவல் பகிர்ந்தனர். அரசின் நடவடிக்கையை எதிர்பார்க்கும் அதே நேரத்தில் மாற்று சந்தையைத் தேடும் பணியிலும் இறங்கிவிட்டதாக ஜவுளி அமைப்பினர் கூறுகின்றனர்.
”இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு 30% ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படும் நிலையில், 10% பேர்தான் முழுக்க அமெரிக்காவை மட்டுமே நம்பி ஏற்றுமதி செய்கின்றனர். தற்போது ஐரோப்பிய யூனியனுடன் நடந்து வரும் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும் நிலையில், அதிலும் நல்லதொரு சந்தை வாய்ப்பு கிடைக்குமென்று நம்புகிறோம்” என்றார் சக்திவேல்.
ஐரோப்பிய யூனியன் ஆண்டுக்கு 95 பில்லியன் டாலர் அளவுக்கு ஆடைகளை இறக்குமதி செய்யும் நிலையில், அதில் இந்தியாவின் பங்கு 5 முதல் 6 சதவிகிதம் மட்டுமே என்கிறார் ஐ.டி.எஃப் கன்வீனர் பிரபு தாமோதரன்.
பட மூலாதாரம், Sundararaman
இந்தியா–அமெரிக்கா ஒப்பந்தம் எப்போது முடிவுக்கு வருமென்று தெரியாத நிலையில், இந்திய ஏற்றுமதி நிறுவனங்களையும், சங்கிலித் தொடரில் சார்ந்திருக்கும் ஜவுளித்தொழில் கட்டமைப்பையும் தொடர்ச்சியாக நடத்த, மிகப்பெரிய சந்தையான ஐரோப்பிய யூனியனுக்கு ஏற்றுமதி செய்வதற்கு 12 முதல் 18 மாதங்களுக்கு மத்திய அரசு சிறப்பு சலுகைகளை வழங்க வேண்டியது மிக மிக அவசியம் என்கிறார் அவர்.
”இந்தக் குறிப்பிட்ட கால சலுகைகள் மூலமாக, நிறுவனங்களின் போட்டித் திறனை அதிகரித்து, வங்கதேசத்துடன் போட்டியிட்டு இந்தச் சந்தையில் ஏற்றுமதியை அதிகரிப்பதன் மூலம், தற்காலிகமாக அமெரிக்க ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள பாதிப்பை ஓரளவுக்குச் சரி செய்ய முயல வேண்டும்” என்கிறார் பிரபு தாமோதரன்.
அமெரிக்காவின் 50% வரி விதிப்பின் எதிரொலியாக, உற்பத்தி குறைந்து வேலையிழப்பு ஏற்படுமென்று கருதப்படும் நிலையில், இதுவரை அத்தகைய நிலை வராமல் சமாளித்து வருவதாக ஜவுளி அமைப்பினர் விளக்குகின்றனர். அமெரிக்காவுடனான வர்த்தகத் தொடர்புச் சங்கிலி அறுபடுமா என்பது தெரியாத நிலையில் யாரையும் வேலையைவிட்டு அனுப்பாமல் பாதுகாத்து வருவதாகக் கூறுகிறார் சக்திவேல்.

தென்னிந்திய மில்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சுந்தரராமன், ”இந்தியாவின் ஜவுளி வர்த்தகம் 140 பில்லியன் டாலர் என்று கணக்கிட்டால், 12 பில்லியன் டாலர் அளவுக்கே அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகிறது. அது நின்றாலும் 10% பேருக்குதான் வேலையிழப்பு ஏற்படும். அதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு பாதிப்பில்லை. புலம்பெயர் தொழிலாளர்கள்தான் பாதிக்கப்படுவர். ஆனால் இப்போது மற்ற துறைகளுக்கு அவர்கள் அதிகமாகத் தேவைப்படுவதால் யாருக்கும் வேலையிழப்பு ஏற்பட வாய்ப்பில்லை” என்கிறார்.
மேலும் பேசிய சுந்தரராமன், ”தற்போதுள்ள வரி விதிப்பு நீடிக்காது என்று நம்புகிறோம். ஒருவேளை தற்போது தாக்கலான மசோதாவால் இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 500 சதவிகிதம் வரி விதித்தால் இங்குள்ள ஜவுளி நிறுவனங்கள், இலங்கைக்கு இடம் பெயர அதிக வாய்ப்புள்ளது. அதைத்தான் அமெரிக்க வர்த்தகர்களும் பரிந்துரைப்பார்கள்” என்று தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு