புதுடெல்லி: அதிமுக பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடந்தது. எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். ஓபிஎஸ் தொடர்ந்த இந்த வழக்கில் தனி நீதிபதி ஜெயசந்திரன், அதிமுக பொதுக்குழு செல்லாது என்றும் அதற்கு முன்னதாக இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கில் கடந்த ஆக.27ம் தேதி விசாரணை நடந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் 3 மணி நேரமும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் 2 மணி நேரமும் வாதம் செய்யப்பட்டு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
வழக்கில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் வழங்கிய தீர்ப்பில், ‘ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும். எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக செயல்படலாம். இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்ற தனி நீதிபதி வழங்கிய முந்தைய உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என தீர்ப்பு அளித்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் நேற்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், அதிமுகவில் பொதுச்செயலாளர் என்பவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது கட்சியின் சட்ட விதி. ஆனால் அதுபோன்று நடத்தப்படவில்லை. அதனால் இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து, இரண்டு நீதிபதிகள் பெஞ்ச் அமர்வு வழங்கிய உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.