சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து பழனிசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை இன்று தொடங்குகிறது. அதிமுக தலைமை விவகாரத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இணைந்து செயல்பட முடியாத நிலையில், இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக்கோரி எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்துள்ளார். அதில், தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் மேல்முறையீடு மனுவை பட்டியலிடும்படி, கூடுதல் மனுவை தாக்கல் செய்திருந்தார். எடப்பாடி பழனிசாமியின் அந்த கூடுதல் மனுவும், ஓ.பன்னீர்செல்வம் கேவியட் மனுவும் நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன.
அப்போது ஓ.பன்னீர்செல்வம் வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு தாக்கல் செய்துள்ளது போல அம்மன் வைரமுத்து வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளையும் எதிர்த்து மனுத்தாக்கல் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மூன்று மேல்முறையீடு மனுக்களிலும் தனி நீதிபதியின் சான்றளிக்கப்பட்ட உத்தரவு நகல் இல்லாமல், விசாரணைக்கு ஏற்க வேண்டுமென எடப்பாடி தரப்பில் வழக்கறிஞர் விஜய் நாராயண் கோரிக்கை வைத்தார். அதனை ஏற்ற நீதிபதிகள், சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் மேல்முறையீடு மனுக்களை விசாரிக்க ஒப்புதல் அளித்ததுடன், மூன்று மனுக்களையும் விசாரணைக்கு பட்டியலிடும்படி பதிவுத்துறைக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து அதிமுக பொதுக்குழு ரத்து தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு வழக்கு இன்று தான் முழுமையான விசாரணை தொடங்க இருக்கிறது.