ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராகவும், தம்மை கட்சியில் இருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நிலையில் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் அறிவித்தார்.
இந்நிலையின் இன்று அவர் கூறிய தீர்ப்பில், ஜூன் 23ம் தேதிக்கு முன்பிருந்த நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து தான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
பொதுக்குழு உறுப்பினர்களில் ஐந்தில் ஒரு பங்கு உறுப்பினர்கள் பொதுக்குழுவை கூட்ட கோரிக்கை விடுத்தால், 15 நாட்களுக்குள் நோட்டீஸ் வெளியிட்டு, 30 நாட்களில் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்தார்.
Also Read : டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
பொதுக்குழுவை இருவரும் இணைந்து கூட்டுவதில் சிக்கல் ஏற்பட்டால், ஆணையர் ஒருவரை நியமிப்பது தொடர்பாக நீதிமன்றத்தை நாடலாம் என்றும் நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார். இந்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பால், எடப்பாடி பழனிசாமியின் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பதவி செல்லாத நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து, இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் மேல்முறையீடு செய்ய எடப்பாடி பழனிசாமி தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பைத் தொடர்ந்து, சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். அவருடன், ரவீந்திரநாத் எம்.பி. மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களான வைத்தியலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன், கோவை செல்வராஜ், புகழேந்தி, முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்டோர் சென்றனர்..
இதையடுத்து, எம்.ஜி.ஆர். மற்றும் அண்ணா நினைவிடங்களிலும் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். இதையடுத்து நியூஸ் 18 செய்தியாளருக்கு பேட்டியளித்த ஓபிஎஸ், அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானம் செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கி உள்ளதாக தெரிவித்தார். இந்த தீர்பை தொண்டர்களுக்கு காணிக்கையாக்குகிறோம் எனவும் கூறினார். மேலும், தொண்டர்களின் இயக்கத்தை யார் பிளவுபடுத்த நினைத்தாலும் அது நடக்காது எனவும் சூளுரைத்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.