மரக்காணம்: கட்சியில் உள்ள எட்டப்பர்களின் முகத்திரை தற்போது கிழிக்கப்பட்டுள்ளது என மரக்காணம் விழாவில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசியுள்ளார். மரக்காணம் அருகே அனுமந்தை கிராமத்தில் அ.தி.மு.க பிரமுகரின் இல்ல நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்ட அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: நான் இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்று கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சி. நான் அதிமுக பொதுச்செயலாளர் ஆவேன் என நினைக்கவில்லை. இரு பெரும் தலைவர்களும் பல்வேறு இன்னல்களை கடந்து வெற்றி அடைந்து நம்மிடம் இந்த கட்சியை கொடுத்துள்ளனர். அதிமுக பல்வேறு சோதனைகளை கடந்து வந்திருக்கிறது. நம்மிடத்தில் எட்டப்பராக இருந்தவர்கள் முகத்திரை தற்போது கிழிக்கப்பட்டுவிட்டது. அவர்கள் இதுநாள் வரை நம்முடன் இருந்து கட்சியை வலுவிழக்கச் செய்துள்ளார்கள். 2021 தேர்தலில் நம்மோடு இருந்தவர்கள் தான் எட்டப்பர் வேலை செய்து, வெற்றியை தடுத்துள்ளார்கள். அவர்கள், இன்றையதினம் இந்த கட்சியை ஒழிக்க பார்க்கிறார்கள். எந்த கொம்பனாலும் இந்த இயக்கத்தை ஒன்றும் செய்ய முடியாது. இந்த இயக்கம் அதிமுக தொண்டர்கள் உழைத்து உருவாக்கியது. இவ்வாறு அவர் பேசினார்.
அதிமுகவில் எட்டப்பர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டது: மரக்காணம் விழாவில் எடப்பாடி பேச்சு
Share
