ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பிரசாரத்துக்கு இன்னும் 5 நாட்களே உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் அதிமுகவினர் இத்தொகுதி முழுவதும் வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு கொலுசு, குக்கர் மற்றும் தலா ரூ.1000 பணம் விநியோகம் செய்ய துவங்கியுள்ளனர். பாக்கெட்டுகளில் அடைத்து கொலுசு வழங்கி வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட நிர்வாகிகள், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பறக்கும் படை அதிகாரிகள் நேற்று மாலை சிந்தா நகர், மாதவ காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனை நடத்தினர். ஆனால், குக்கர், கொலுசு, பணம் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை.
புகார் தெரிவிக்கப்பட்ட மற்ற பகுதிகளிலும் பறக்கும் படையினர் வார்டு வாரியாக சோதனை நடத்தி வருகின்றனர். மாதவன்காடு என்ற இடத்தில் வாக்காளர்களுக்கு அதிமுகவினர் வெள்ளிக்குடம் வழங்கியதாகவும் புகார் எழுந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட குடோனில் பரிசுப்பொருட்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் திமுகவினர் புகார் மனு அளித்தனர். தொடர்ந்து, அந்த குடோனிலும் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். இங்கிருந்து என்னென்ன பொருட்கள் ைகப்பற்றப்பட்டன என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை. இதுகுறித்து பறக்கும் படை அதிகாரிகள் கூறுகையில், தேர்தல் விதிமீறல் தொடர்பாக பெறப்படும் புகார்கள் அடிப்படையில், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே, முறையான அனுமதி பெறாமல் அமைக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட தேர்தல் பணிமனைளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. முறையான ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச்செல்லப்பட்ட ரூ.61.70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றனர்.
* வீட்டின் சுவர்களில் ‘அதிமுக ஓட்டு’ என குறியீடு
அதிமுக பிரசார கூட்டத்திற்கு வரும் ஆட்களுக்கு டோக்கன் கொடுத்து, அதற்கு பணம் மற்றும் சேலைகள் வழங்கப்பட்டு வருவதாக புகார் எழுந்த நிலையில், ஈரோடு கருங்கல்பாளையம் சிந்தன்நகர் பகுதியில் அதிமுகவினர் வீடு வீடாக சென்று வெள்ளிக்கொலுசு மற்றும் பணம் விநியோகித்து வருவதாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார்கள் வந்தன. நேற்று மதியம் இத்தொகுதிக்கு உட்பட்ட சிந்தன் நகர் பகுதியில் உள்ள குறிப்பிட்ட சில வீடுகளில் அதிமுகவினர் வெள்ளிக்கொலுசுகளை விநியோகம் செய்து இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும், வெள்ளிக்கொலுசுகள் விநியோகம் செய்யப்பட்ட வீடுகளின் சுவர்கள் மற்றும் கதவுகளில் அதிமுக ஓட்டு என்று குறிப்பிட்டுள்ளதோடு பாகம் எண், வாக்காளர் பட்டியலில் உள்ள வரிசை எண் உள்ளிட்ட விவரங்களையும் பதிவு செய்துள்ளனர். இந்த தகவல் வெளியில் பரவியதும் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.