அதானியின் அசுர வளர்ச்சிக்கு மோடியின் ஆதரவே காரணம் பாஜவின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறுவதை யாராலும் தடுக்க முடியாது: தெலங்கானா முன்னாள் காங்கிரஸ் தலைவர் பேட்டி

Share

சென்னை: தெலங்கானா மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் உத்தம் குமார் ரெட்டி சென்னை சத்தியமூர்த்திபவனுக்கு நேற்று வந்தார். அவருக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மாநில துணை தலைவர்கள் கோபண்ணா, பொன்.கிருஷ்ணமூர்த்தி, மாநில பொதுச் செயலாளர்கள் சிரஞ்சீவி, தளபதி பாஸ்கர், மாவட்ட தலைவர்கள் சிவ ராஜசேகரன், ரஞ்சன் குமார் மற்றும் நிர்வாகிகள் ஜெயம் ஜெ.கக்கன், ரஞ்சித்குமார் உள்பட பலர் அவரை வரவேற்றனர்.

அப்போது, உத்தம் குமார் ரெட்டி கூறியதாவது: பல ஆண்டுகளாக அமலாக்கப்பிரிவு, சிபிஐ மற்றும் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் போன்ற ஏஜென்சிகளை தவறாகப் பயன்படுத்தி, தனது அரசியல் அல்லது கருத்தியல் எதிரிகளை மிரட்கவும், தனது நிதி நலன்களுக்கு இணங்காத வணிக நிறுவனங்களைத் தண்டிக்கவும் பிரதமர் மோடி பயன்படுத்தியுள்ளார்.  2023 ஜனவரி 24 முதல் பிப்ரவரி 15 வரை அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு ரூ.10,50,000 கோடி சரிந்தது. ஜூலை 19, 2021 அன்று, செபியின் விதிமுறைகளை மீறியதற்காக அதானி குழுமம் விசாரணையில் உள்ளதாக நிதி அமைச்சகம் நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டது. அதானி குழுமத்தில் எல்ஐசி வைத்திருக்கும் பங்குகளின் மதிப்பு 30 டிசம்பர் 2022 அன்று ரூ. 83,000 கோடியிலிருந்து ரூ.39,000 கோடியாகக் குறைந்தது.

பங்குகளின் விலை வீழ்ச்சி மற்றும் குழுமத்தின் மீதான குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும், 30 ஜனவரி 2023 அன்று அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் ரூ.300 கோடி முதலீடு செய்யும்படி எல்ஐசியை மோடி அரசாங்கம் நிர்ப்பந்தித்தது.
விமான நிலையங்களைக் கையாளுவதில் அனுபவமே இல்லாத அதானி குழுமத்துக்கு விமான நிலையங்களைக் கையாளும் உரிமம் வழங்கப்பட்டது. அதானி குழுமம் இன்று 13 துறைமுகங்கள் மற்றும் முனையங்களைக் கையாளுகிறது.
 40 சதவீதம் கன்டெய்னர் னர்கள் இந்த துறைமுகங்களை கடந்து செல்கிறது. பிரதமர் மோடியுடன் பல வெளிநாட்டுப் பயணங்களில் கவுதம் அதானி சென்றுள்ளார். மோடி பிரதமராக பதவியேற்ற 2014ம் ஆண்டில் உலக கோடீஸ்வரர்கள் வரிசையில் 609வது இடத்தில் இருந்த கவுதம் அதானி, 2022ல் 2வது இடத்திற்கு வந்த அதிசயத்தை நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதானியை காப்பாற்றும் நோக்கில் மோடி அரசு மவுனமாக உள்ளது. இத்தகைய அசுர வளர்ச்சிக்கு பிரதமர் மோடியின் ஆதரவு தான் காரணம் என்பதை எவராவது மறுக்க முடியுமா?. மோடி அரசு கடந்த 9 ஆண்டுகளாக சிஏஜி, சிபிஐ போன்ற அனைத்து அரசு நிறுவனங்களின் கைகளையும் கட்டிப் போட்டிருக்கலாம். ஆனால் உண்மை வெளிப்பட்டே தீரும் என்பதையே அதானியின் வீழ்ச்சி வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. இதனை, அமலாக்கத் துறையோ, சிபிஐ அமைப்போ முயன்றாலும் மறைக்க முடியாது. இது ஆரம்பம் தான். பாஜவின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறப்போவதை யாராலும் தடுக்க முடியாது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com