
பட மூலாதாரம், Getty Images
போன், இன்டர்நெட், இமெயில் இல்லாத காலகட்டங்களில் தகவல் தொடர்பில் கடிதங்கள் முக்கிய பங்கு வகித்தன. கத்தியின் முனையை விட பேனா முனை வலிமையானது என்பார்கள்.
வரலாறு நெடுகிலும் கடிதங்கள் வழியாக ஊழல் வெளிவந்ததும், போர்களின் போக்கு மாறியதும், சமூக இயக்கங்களின் எழுச்சியும் நடந்துள்ளன.
பிரிட்டன் ராணியின் மரண தண்டனைக்கு வழிவகுத்ததும், அமெரிக்கா அணுகுண்டை உருவாக்கும் பாதையில் பயணிக்க தொடங்கியதும் ஒரு கடிதத்தின் வழியாகவே நடந்தது. பிபிசி ரீல் நிகழ்ச்சியில் அப்படி தொகுக்கப்பட்ட வரலாற்றின் போக்கை மாற்றிய 5 கடிதங்களை காணலாம்.
ராணி அடோசாவின் ‘முதல் கடிதம்’
முதன்முதலாக எழுதப்பட்ட கடிதம், ராணி அடோசாவால் எழுதப்பட்டது என்று நம்பப்படுகிறது. கிமு 500இல் பாரசீக ராணி அடோசா எழுதிய இந்த கடிதம், மிக முக்கியமானது என குறிப்பிடுகிறார் டப்ளினில் உள்ள டிரினிட்டி கல்லூரியின் வரலாறு, மானுடவியல் பேராசிரியர் பிரிட் மெக்ராத்.
கிமு 550 இல் பிறந்த அடோசா தனது 28ஆம் வயதில் ராணியானார். அடோசா என்ற பெயருக்கு ‘திறமையானவர் அல்லது கற்றவர்’ என்று பொருள். இதன்மூலம் இந்த ராணி நன்கு எழுத, படிக்க தெரிந்தவர் என்று நம்பப்படுகிறது.
பண்டைய வரலாற்றாசிரியர் ஹெலானிகஸின் கூற்றுப்படி, அடோசா தனது 50 வயதில் முதல் ஆவணப்படுத்தப்பட்ட கடிதத்தை எழுதினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அதில் என்ன எழுதினார் என்ற விவரங்கள் குறித்து எந்த பதிவும் இல்லை.
ராணியைப் பின்பற்றி அப்போது வாழ்ந்த மக்கள் கல்வி கற்க விரும்பினர். மேலும் தொலைதூரத்தில் வசிக்கும் அன்புக்குரியவர்களை சந்திக்க கடிதங்கள் பயனுள்ள வடிவமாக இருப்பதை உணர்ந்து அதை பயன்படுத்த தொடங்கினர்.
அதன் தொடர்ச்சியாக காகிதம், எழுத்துப் பொருட்கள் உற்பத்திக்காக தொழிற்சாலை பண்டைய பாரசீகத்தில் உருவாகியுள்ளது.
ராணிக்கு மரண தண்டனை பெற்றுத் தந்த கடிதம்
பிரிட்டனின் மன்னரான எட்டாம் ஹென்றி அவரது மனைவிக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு காரணமாக அமைந்தது ஒரு கடிதம், அதுவும் காதல் கடிதம்.
மன்னர் ஹென்றியின் மனைவியான ராணி அன்னி கிளெவ்ஸின் பணிப்பெண்ணாக இருந்தவர் கேத்தரின் ஹோவர்ட்.
கேத்தரின் பணிப்பெண்ணாக இருந்தபோது, எட்டாம் ஹென்றி அவருக்கு பரிசுகளையும், காதல் கடிதங்களையும் அனுப்பினார். ராணி அன்னியை விவாகரத்து செய்த பிறகு ஐந்தாவது மனைவியாக கேத்தரினை திருமணம் செய்து கொண்டார் எட்டாம் ஹென்றி.
ஹென்றி கேத்தரினை இங்கிலாந்தின் வடக்குப் பகுதி முழுவதும் அழைத்துச் சென்றார் மன்னர் ஹென்றி. அவர்கள் திரும்பி வந்தபோது, பேராயர் கிரான்மர், கேத்தரின் முன்பு வேறொரு நபருடன் நிச்சயதார்த்தம் செய்திருந்ததால் அவர் மீது வழக்கு தொடர்ந்தார்.
அவரது முன்னாள் காதலர்கள் கைது செய்யப்பட்டு லண்டன் டவரில் சித்திரவதை செய்யப்பட்டனர். பிறகு அதில் ஒருவரான ஹென்றி மேன்னாக் விடுவிக்கப்பட்டார். ஆனால் பிரான்சிஸ் டெரெஹாம் தூக்கிலிடப்பட்டார்.
இதுமட்டுமின்றி, கேத்தரின் தனது முன்னாள் காதலரான தாமஸ் கல்பெப்பரை ரகசியமாக பார்த்து வந்தார்.
அவருடன் தொடர்பு கொள்ள காதல் கடிதங்கள் எழுதுவதை வாடிக்கையாக வைத்து இருந்தார் கேத்தரின்.
அந்த கடிதங்கள் மன்னரின் பார்வைக்கு சென்றன. அதையடுத்து கேத்தரினின் காதலரான தாமஸ் கல்பெப்பரின் தலை துண்டிக்கப்பட்டது.
பின்பு, பிப்ரவரி 13, 1542 அன்று துரோகம் செய்த குற்றத்திற்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மன்னரின் உத்தரவையடுத்து கேத்தரின் ஹோவர்டின் தலையும் துண்டிக்கப்பட்டது. அவர் 18 மாதங்கள் மட்டுமே ராணியாக இருந்தார்.
வெடிவிபத்தை தவிர்த்த கடிதம்
ஒரு கடிதத்தின் வழியாக வெடி மருந்து சதி, அம்பலமாகாமல் போய் இருந்தால், பிரிட்டன் வரலாற்றின் பக்கங்கள் மாற்றி எழுதப்பட்டு இருக்கும்.
பிரிட்டனைச் சேர்ந்த லார்ட் மோன்ட்ஈகிளுக்கு அடையாளம் தெரியாத ஒரு நபர் கடிதம் ஒன்றை எழுதினார். அந்த கடிதத்தில் நாடாளுமன்றம் செல்ல வேண்டாம் என்று அவரை எச்சரித்து இருந்தார் அந்த அடையாளம் தெரியாத நபர்.
1605ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் தேதி, அந்த தகவலை லார்ட் மோன்ட்ஈகிள் மன்னரான முதலாம் ஜேம்ஸ்க்கும் அவரின் அமைச்சரவைக்கும் தெரியப்படுத்தினார்.
அதைத்தொடர்ந்து ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ் முழுவதும் சோதனை செய்யப்பட்டது. அந்த சோதனையின் முடிவில், ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ் கட்டிடத்தின் கீழே ஒரு பாதுகாப்பு அறையில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 36 பீப்பாய் வெடி மருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் மூலம் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அந்த வெடிகுண்டு வெடித்து இருந்தால் ஏராளமான உயிர்சேதம் நடந்திருக்கும் என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
அந்த சதிக்கு காரணமானவர் எனக் கூறி, அங்கு பணியில் இருந்த கய் ஃபாக்ஸ் கைது செய்யப்பட்டார்.
அணுகுண்டு உருவாக காரணமான கடிதம்
பட மூலாதாரம், Getty Images
1939ஆம் ஆண்டு பிரபல இயற்பியல் விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய ஒரு கடிதம், நவீன போர் களத்தில் முக்கிய இடத்தை பிடித்தது.
ஜெர்மனியில் பிறந்தவரான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அமெரிக்க அரசின் அணு ஆராய்ச்சியைத் தூண்டிய பெருமைக்குரியவர். 1939ஆம் ஆண்டில், சார்பியல் கோட்பாட்டை உருவாக்கிய 60 வயதான புகழ்பெற்ற விஞ்ஞானி, அமெரிக்க அதிபர் பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட்டுக்கு ஒரு கடிதம் எழுதினார்.
அந்த கடிதத்தில் ஓர் அணுகுண்டை உருவாக்குவது சாத்தியம் என்றும், அதை உருவாக்கும் வேலையில் ஹிட்லர் தலைமையிலான ஜெர்மனி ஈடுபட்டு வருவதாக எழுதியிருந்தார்.
நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி எழுதிய அந்த கடிதம் அமெரிக்க அரசு மட்டங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ரூஸ்வெல்ட்டுக்கு ஐன்ஸ்டீன் எழுதிய கடிதத்தில், “யுரேனியத்தைக் கொண்டு ஒர் அணுக்கரு சங்கிலி(Nuclear reaction) எதிர்வினையை அமைக்க முடியும்” என்று எழுதினார். இது “மிகப்பெரிய சக்தியையும், ரேடியம் போன்ற புதிய தனிமங்களையும் உருவாக்கும்” என்று அவர் விளக்கினார்.
அதிபர் ரூஸ்வெல்ட் தனது ராணுவ ஆலோசகர் ஜெனரல் எட்வின் வாட்சனிடம், “இதற்கு நடவடிக்கை தேவை” என்று கடிதத்தை குறிப்பிட்டு கூறினார்.
இந்த கடிதத்தை அடிப்படையாக வைத்து அமெரிக்க யுரேனியம் குறித்து ஆய்வு செய்ய ஒரு சிறப்பு குழுவை நியமித்தது. ‘மன்ஹாட்டன் திட்டம்’ என்று அழைக்கப்பட்ட அந்த திட்டத்தின் நீட்சியாக அணுகுண்டை உருவாக்கி, இரண்டாவது உலகப் போரின் போது ஜப்பானில் அணு குண்டு வீசி தாக்குதல் நடத்தியது அமெரிக்கா.
ஆனால் ஐன்ஸ்டீன் அமைதியை விரும்பும் ஒரு நபர். ஹிட்லரின் அணுசக்தித் திட்டம் குறித்து அமெரிக்க அரசிடம் சொல்வதா வேண்டாமா என்ற குழப்பத்தில் அவர் இருந்தார். இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனி அணு ஆயுதங்களைப் பயன்படுத்தவில்லை. 1943ஆம் ஆண்டில் நடந்த வான்வழித் தாக்குதலால் அந்நாட்டின் அணு உலை அழிக்கப்பட்டது.
1947 ஆம் ஆண்டில் நியூஸ்வீக் இதழுக்கு ஐன்ஸ்டீன் அளித்த பேட்டியில், ஜெர்மானியர்கள் அணுகுண்டை உருவாக்குவதில் தோல்வியடைவார்கள் என்று தனக்கு முன்பே தெரிந்திருந்தால், தான் எதுவும் செய்திருக்க மாட்டேன். ஏனெனில் அதிபருக்கு அவர் எழுதிய கடிதம் அணு குண்டு கலாசாரம் தொடங்க காரணமாக அமைந்தது.
இன்றும், நியூயார்க்கில் உள்ள அதிபர் பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் நூலகம், அருங்காட்சியகத்தில் இந்த கடிதம் டிஜிட்டல் வடிவில் பார்வைக்கு கிடைக்கிறது.
சமத்துவத்திற்கான கடிதம்
ஏப்ரல் 1963 இல், அமெரிக்க கருப்பின தலைவரான மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் அலபாமா மாகாணத்தில் உள்ள பர்மிங்காமில் அமைந்துள்ள சிறையில் இருந்து ஒரு கடிதம் எழுதினார்.
அமெரிக்காவில் கருப்பினத்தவர்களுக்கு எதிராக நிலவிய பாகுபாட்டுக்கு எதிராக அகிம்சை வழியில் போராடியதற்காக மார்டின் லூதர் கிங் ஜூனியர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இனவெறிக்கு எதிரான அகிம்சை வழி போராட்டத்தை ஆதரித்த மார்டின் லூதர் கிங் எழுதிய கடிதத்தில், “நான் பர்மிங்காமில் இருக்கிறேன், ஏனென்றால் அநீதி இங்கே உள்ளது. பர்மிங்காமில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி கவலைப்படாமல், என்னால் அட்லாண்டாவில் சும்மா இருக்க முடியாது,” என எழுதியிருந்தார்.
சிறையில் இருந்தவாறே தனக்கு கிடைத்த துண்டு காகிதங்களிலும், செய்தித்தாளின் ஓரங்களிலும் தனது கருத்துகளை அவர் எழுதி வந்தார். பின்பு அவை அனைத்தும் தொகுக்கப்பட்டு ஒரு உரையாக மாற்றப்பட்டது.
ஒத்துழையாமை பற்றிய இவரின் கடிதம் 20ஆம் நூற்றாண்டின் மிகவும் செல்வாக்கு மிக்க கடிதமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
1963ஆம் ஆண்டு அவர் எழுதிய வாசகமான, “ஒரு இடத்தில் நிலவும் அநீதி, எல்லா இடங்களில் கிடைக்கும் நீதிக்கு ஆபத்தாகிறது”, இன்றும் அமெரிக்க சிவில் உரிமைகள் இயக்கத்தின் ஒரு முக்கிய அங்கமாக பார்க்கப்படுகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: