அடிக்கடி நிறம் மாறும் பச்சோந்தியைவிட மோசமானவர் ஓபிஎஸ்: எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு

Share

சென்னை: ஓ.பன்னீர்செல்வம் கட்சிக்கு எப்போதும் விசுவாசமாக இருந்தது இல்லை. பச்சோந்தியைவிட மோசமானவர், நேரத்துக்கு ஏற்ப நிறத்தை மாற்றிக் கொள்வார் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு எடப்பாடி பழனிசாமி முதன்முறையாக நேற்று காலை 11.35 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகம் வந்தார். பின்னர், அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:அதிமுக பொதுக்குழுவில் ஒருமனதாக எதிர்காலத்தின் நன்மை கருதி ஒற்றைத்தலைமை முடிவு செய்து, இடைக்கால பொதுச்செயலாளராக என்னை தேர்வு செய்த உறுப்பினர்களுக்கு நன்றி. அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து சேதப்படுத்தியது குறித்த புகாரில், சிபிசிஐடி போலீசார் கட்சி அலுவலகம் வந்து தடயங்களை சேகரித்து சென்றுள்ளனர்.

பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்படுவார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது உண்மை. இதை எதிர்த்து நீதிமன்றம் சென்றதால் பொதுச்செயலாளர் தேர்வு தடைபட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு அந்த பணிகள் தொடரும். அதிமுக தற்போது பிளவுபடவில்லை, ஒரு சிலர் கட்சிக்கு எதிராக செயல்பட்டதால் பொதுக்குழு அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. கட்சியின் உயர்ந்த பதவியில் இருந்த ஒருத்தரே, ரவுடிகளுடன் டெம்போ வாகனத்தில் வந்து கட்சி அலுவலகத்தை உடைத்தார். இப்படிப்பட்டவர்களை தொண்டர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள். மன்னிப்பு கேட்டால் தொண்டர்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.

தொண்டர்களுக்குத்தான் இந்த கட்சி. கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டுள்ளனர். தலைமை கழகம் புனிதமான இடம். இரு பெரும் தலைவர்கள் பணியாற்றிய இடத்தை சேதப்படுத்தியதை, கொள்ளையடித்ததை தொண்டன் எப்படி மன்னிப்பான். அதிமுகவில் மொத்தமுள்ள 2,663 பொதுக்குழு உறுப்பினர்களில் 96 சதவீதம் பொதுக்குழு உறுப்பினர்கள் எங்கள் பக்கம் உள்ளனர். பெரும்பாலான எம்எல்ஏக்கள், நிர்வாகிகள், எம்பி, எம்எல்ஏக்கள் இருப்பதால், சட்டரீதியாக அவர்கள் (ஓபிஎஸ்) எதுவும் செய்துவிட முடியாது.

ஓ.பன்னீர்செல்வத்துக்கு சாதகமாக எது இருக்குதோ அதை எடுத்துக் கொள்வார். பச்சோந்தி மாதிரி, நேரத்துக்கு ஏற்ப நிறத்தை மாற்றிக் கொள்வார் ஓ.பன்னீர்செல்வம். இன்னும் சொல்லப்போனால் பச்சோந்தியைவிட மோசமானவர். சட்டமன்றத்தில் நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தவர் ஓ.பன்னீர்செல்வம். கட்சிக்கு எப்போதும் அவர் விசுவாசமாக இருந்தது இல்லை என்றார். பேட்டியின்போது அவைத்தலைவர் தமிழ்மகன்உசேன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், செங்கோட்டையன், வேலுமணி, செல்லூர் ராஜு, ஜெயக்குமார் இருந்தனர்.

டிஜிபியிடம் ஓபிஎஸ் தரப்பு புகார் மனு: எடப்பாடி பழனிசாமி நேற்று அதிமுக தலைமை அலுவலகம் வந்ததால், அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். அதேநேரத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் பெங்களூரு புகழேந்தி, டிஜிபி சைலேந்திரபாபுவை நேற்று காலை சந்தித்து, அதிமுக அலுவலகம் தாக்குதல் குறித்து சிபிசிஐடி விசாரணை நடந்து வருவதால், எடப்பாடி பழனிசாமியை அதிமுக அலுவலகத்துக்குள் அனுமதிக்கக் கூடாது புகார் மனு அளித்தார்.

* எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்… கே.பி.முனுசாமி, ஜெயக்குமார் டென்ஷன்
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பிறகு முதன் முறையாக சென்னையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்துக்கு நேற்று வந்தார். அதிமுக நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார் உள்ளிட்டவர்களும் கட்சி தலைமை அலுவலகம் வந்திருந்தனர். கட்சியின் முதல் தளத்தில் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, மேடையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு மட்டும் இருக்கை போடப்பட்டிருந்தது. கட்சியின் மூத்த நிர்வாகிகளும், இடைக்கால பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி வருவதற்கு காரணமாக இருந்த கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், செல்லூர் ராஜு உள்ளிட்டவர்களுக்கு பார்வையாளர் வரிசையில் முன் இருக்கை போடப்பட்டு இருந்தது.

இதனால், கே.பி.முனுசாமி, ஜெயக்குமார் டென்ஷன் ஆகி விட்டதாக கூறப்படுகிறது. இதில், கே.பி.முனுசாமி மிகவும் கோபம் அடைந்து கட்சி நிர்வாகிகளிடம் வெளிப்படையாக இதை கூறி உள்ளார். ஓபிஎஸ்சுடன் நான் இருந்தபோது, எப்போதும் அவருக்கு இணையாக என்னை வைத்திருந்தார். ஆனால் எடப்பாடியாரோ, காரியம் முடிந்ததும் எங்களை போன்ற மூத்த நிர்வாகிகளை பார்வையாளர்கள் வரிசையில் உட்கார வைத்துவிட்டதாக புலம்பியுள்ளார். மேலும், ‘எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேனே…’ என்றும் கூறி வருத்தப்பட்டாராம். இது, எடப்பாடி பழனிசாமியின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது. அதன்பிறகு, நிருபர்களுக்கு எடப்பாடி பேட்டி அளித்தபோது, கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், செங்கோட்டையன், ஜெயக்குமார் உள்ளிட்டோருக்கு எடப்பாடி அருகே மேடையில் நாற்காலி போட்டு அமர வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com