நன்றி குங்குமம் டாக்டர்
ஒரு நாளுக்கு சராசரியாக 4-8 முறை சிறுநீர் கழிப்பது இயல்பானது. ஆனால், இந்த எண்ணிக்கைக்கு அதிகமாக அடிக்கடி சிறுநீர் கழித்துக்கொண்டே இருப்பது உடலில் ஏதோ தாக்கம் ஏற்பட்டிருக்கிறது என்பதை வெளிக்காட்டும் அறிகுறியாகதான் எடுத்துக் கொள்ள வேண்டும். நிறைய பேர் இதை மிக சாதாரணமாக எடுத்துக்கொள்கின்றனர். ஆனால், அடிக்கடி சிறுநீர் கழிப்பது அபாயகரமான உடல் நலத்தின் அறிகுறியாகக்கூட இருக்கலாம். இதை உதாசீனப்படுத்துவது பின்னாளில் எதிர்மறை விளைவுகளை சந்திக்க காரணியாக அமையலாம்.
பொதுவான காரணங்கள்
சர்க்கரைநோய், சிறுநீர்ப்பாதைத் தொற்று, கர்ப்பிணிப் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில், புரோஸ்டேட் பிரச்னைகள் போன்றவற்றின் காரணமாக அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடலாம். மேலும், சிறுநீரகத் தொற்று, சிறுநீர்ப்பை கற்கள் போன்றவற்றின் காரணமாகக்கூட இவ்வாறு நிகழலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இயற்கைத் தீர்வுகள்
அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்னை இருந்தால் மருத்துவரிடம் பரிசோதனை செய்துகொள்வது அவசியம். ஒருவேளை பயப்படும் அளவுக்கு எந்தப் பிர்சனையும் இல்லையெனில், நீங்கள் இயற்கை உணவுகளை உண்டே இதற்கு நல்ல தீர்வு காணலாம்.
மாதுளை
மாதுளையின் தோலை நன்கு விழுது போல அரைத்துக்கொள்ள வேண்டும். பின்னர், சிட்டிகை அளவு விழுதை சில துளி நீர் கலந்து பருக வேண்டும். ஒருநாளுக்கு இருமுறை என ஐந்து நாட்கள் தொடர்ந்து இதைப் பருகிவந்தால், சிறுநீர் பையின் வெப்பம் குறையும், அடிக்கடி சிறுநீர் கழியும் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
கொள்ளு
நூறு கிராம் அளவு கொள்ளை வறுத்துக்கொள்ளவும். அதை வெல்லத்துடன் சேர்த்து கலந்து உட்கொ ண்டு வந்தால் சிறுநீர்ப் பாதை தொற்றுக்கு இது சிறந்த நிவாரணியாக விளங்கும். கொள்ளில் இருக்கும் ஆன்டி – ஆக்ஸிடென்ட் சிறந்த மருத்துவக் குணம் வாய்ந்தது ஆகும்.
பக்கவிளைவுகள் இல்லை
இந்த இரண்டு வீட்டு மருத்துவ முறையும் பக்கவிளைவுகள் அற்றவை. மேலும், இதை நீங்கள் மிக சுலபமாக வீட்டிலேயே தயாரிக்கலாம்.
தொகுப்பு : பொ. பாலாஜி கணேஷ்