டாட்டூ குத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் மைகளில் எண்ணிடலங்கா ரசாயனங்கள் இருப்பதால் அவை உடலுக்கு பெரும்கேடு விளைவிக்கக்கூடும் என சமீபத்தில் வெளியான ஓர் ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
இன்றைக்கு டாட்டூ கலாசாரம் நம்மிடம் ஆழமாக வேரூன்றியிருக்கிறது. முன்பு, பிடித்தவர்களின் பெயரை பச்சை குத்திக் கொண்டனர். இன்றைக்கு அதையெல்லாம் கடந்து டாட்டூவில் பெயர்கள், ஓவியம் என பலவும் வரையப்படுகின்றன. இந்த டாட்டூ மோகத்தில் எதையும் யோசிக்காமல் குத்திக் கொள்கிறவர்களுக்கு, இதன் அபாயம் புரிவதில்லை என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். டாட்டூ குத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து, சென்னையைச் சேர்ந்த, சரும நோய் மருத்துவர் வானதி திருநாவுக்கரசுவிடம் கேட்டோம்…
“நம் நாட்டில் டாட்டூ போடுவதற்குப் பயன்படுத்தப்படும் நிறமி (pigment) எந்த அளவுக்குத் தரமானதாக இருக்கிறது என்பதே கேள்விக்குறிதான். அமெரிக்காவில் இதனை முறைப்படுத்தியிருக்கிறார்கள். சருமத்தில் வினைபுரியாத அளவிலான நிறமிகளைத்தான் பயன்படுத்த வேண்டும் என்கிற விதிமுறைகள் எல்லாம் இருக்கின்றன. ஆரம்பத்தில் பாதரசம், ஈயம் போன்ற விஷத்தன்மை வாய்ந்த உலோகங்கள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் இந்த விதிமுறைகள் காரணமாக அவை நிறுத்தப்பட்டன. இந்தியாவிலும் இதற்கென விதிமுறைகள் வகுக்கப்பட்டிருந்தாலும் அனைவரும் இதனைப் பின்பற்றுகிறார்களா என்பது முக்கியம். இன்றைக்கு சாலையோரமாக கடை போட்டுக்கூட, டாட்டூ குத்துகிறார்கள். அந்த அளவுக்கு மலிவாகி விட்ட சூழலில் இந்த விதிமுறைகளெல்லாம் பின்பற்றப்படுவதில்லை.